அணு ஆயுதங்களை கைவிடும் வரை வடகொரியாவுக்கு எதிர்காலம் கிடையாது என டிரம்ப் திட்டவட்டமாக கூறினார். அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வந்த வட கொரியாவுடன் அமெரிக்கா, கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தியது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின்னர் அணுஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை செய்வதை வட கொரியா நிறுத்தி வைத்தது.
எனினும் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றும் வகையில் வட கொரியா அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்துகிறது. அதேபோல், பொருளாதார நெருக்கடியில் தவிப்பதால் தங்கள் மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என வடகொரியா கோரிக்கை வைக்கிறது.
இது குறித்து பேசி முடிவு எடுப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த மாத இறுதியில் வியட்நாமில் 2-வது முறையாக சந்தித்து பேசினர்.
ஆனால், இந்த 2 நாள் சந்திப்பு, எந்த உடன்பாடும் எட்டப்படாமல் முடிவுக்கு வந்தது. வட கொரியா தங்கள் மீதான பொருளாதார தடை முழுவதையும் நீக்க வேண்டும் என கேட்டதை அமெரிக்கா ஏற்காததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் இதனை மறுத்த வட கொரியா, தாங்கள் பாதியளவு பொருளாதார தடைகளையே நீக்க கோரியதாக தெரிவித்தது. மேலும் இனி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை எனவும் கூறியது.
இந்த நிலையில், அணு ஆயுதங்களை கைவிடாதவரை வட கொரியாவுக்கு எதிர்காலம் கிடையாது என டிரம்ப் திட்டவட்டமாக கூறினார். மேரிலாந்து மாகாணத்தில் நடைபெற்ற பழமைவாத அரசியல் நடவடிக்கை மாநாட்டின் நிறைவு விழாவில் பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.
இது பற்றி அவர் கூறுகையில், “அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது தொடர்பாக வட கொரியா ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டால், நம்ப முடியாத மற்றும் அற்புதமான பொருளாதார வளர்ச்சியை அந்நாடு அடையும். மாறாக அந்நாடு தொடர்ந்து அணு ஆயுதங்களை வைத்திருக்குமேயானால், அந்நாட்டுக்கு பொருளாதார ரீதியில் எதிர்காலம் இருக்காது” என கூறினார்.
இதற்கிடையே வட கொரியா உடனான உறவை பலப்படுத்தும் விதமாக தென் கொரியாவில் ஆண்டு தோறும் நடைபெறும் அமெரிக்க, தென் கொரிய படைகளின் கூட்டுப்பயிற்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதையொட்டி அமெரிக்க ராணுவ அமைச்சர் (பொறுப்பு) பேட்ரிக் சனாகன், தென் கொரிய ராணுவ அமைச்சர் ஜியோங் கியோங் டூவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, ஆண்டு தோறும் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் மிகப்பெரிய அளவிலான இரு நாட்டு படைகளின் கூட்டுப்பயிற்சி முடிவு கொண்டு வர இரு தரப்பிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. எனினும் ராணுவத்தை தயார் நிலையில் வைத்திருப்பதற்கான வழக்கமான கூட்டுப்பயிற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment