அவுஸ்திரேலியாவில் இருந்து பசுக்களை இறக்குமதி செய்யும்போது இடம்பெறுவதாகக் கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளின் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பால் பண்ணையாளர்கள் 25 பேரின் கையொப்பங்களுடன் முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக, ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
20,000 பசுக்களை இறக்குமதி செய்ய கிராமிய பொருளாதார அமைச்சினால் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தமக்கு வழங்கப்பட்டுள்ள பசுக்கள் தரக்குறைவானவை என பண்ணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் தாம் முதலீடு செய்யும் பணத்தில் எவ்வித இலாபமும் கிட்டவில்லை என அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுயாதீன தொலைக் காட்சி சேவையின் உயர்மட்ட அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் ஊழல்கள் தொடர்பில் ஊழியர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அரசின் திட்டமிடல் நடைமுறையை மீறி சுயாதீன தொலைக் காட்சி சேவை அதிகாரிகள் செயற்பட்டதால் அரசுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை அரசின் கீழ் கொண்டுவந்த நடைமுறையிலும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்துள்ள முறைப்பாடு தொடர்பிலும் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய, ஜனாதிபதி ஆணைக் குழுவுக்கு கிடைத்த 10 முறைப்பாடுகள் தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிடைக்கப் பெற்றுள்ள 360 முறைப்பாடுகளில் 250 முறைப்பாடுகள் ஆணைக்குழு அதிகாரிகளின் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment