இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு - News View

About Us

About Us

Breaking

Friday, March 1, 2019

இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு

நாட்டில் கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை சரியான பாதையில் முன்னெடுத்துச் செல்ல இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டியுள்ளார்கள். 

திருமதி.மான்யூலா கோரேட் Manuela Gorett தலைமையிலான நிதியத்தின் பிரதிநிதிகள் கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டார்கள். இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் பற்றி அவர்கள் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். 

பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலை முழுமையாக பூர்த்தி செய்ய மேலதிகமாக ஒரு வருடத்தை அவகாசமாக வழங்குமாறு இலங்கை அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்திருக்கிறது. 

நிதி வசதிகளை பன்படுத்தி 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது. இதற்கமைய, ஐந்தாவது மீளாய்வுக் கூட்டம் எதிர்வரும் மே மாதத்தில் பூர்த்தி செய்யப்படவிருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகளில் குறைபாடுகள் இருந்தாலும் உரிய குறைபாடுகள் தற்சமயம் நீங்கிவருகின்றன. 

உள்நாட்டு - வெளிநாட்டு அரசியல் தளம்பல்களுக்கு மத்தியிலும் மொத்தத் தேசிய உற்பத்தி மூன்று தசம் ஐந்து சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் இது மூன்று சதவீதமாகக் காணப்பட்டது. பணவீக்கம் நான்கு தசம் ஐந்து சதவீதமாக இருக்கும். விவசாய ஏற்றுமதிகளின் வீழ்ச்சி, வாகன இறக்குமதியில் ஏற்பட்ட அதிகரிப்பு நடைமுறைக் கணக்குகளில் ஏற்பட்ட பற்றாக்குறை என்பன கடந்த ஆண்டில் மொத்தத் தேசிய உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கான காரணமாகும். 

வர்த்தகத்துறையின் வெளிப்படைத் தன்மை, முதலீட்டு ஊக்குவிப்புக் கட்டுப்பாடு, ஊழில் ஒழிப்பு, மகளிர் வலுவூட்டல், சமூகப் பாதுகாப்பு என்பன பற்றியும் கவனம் செலுத்துவது அவசியமாகும். ஸ்ரீலங்கன் விமான சேவையை திருப்திகரமான சேவையாக மாற்றுவது அவசியம் என சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment