68 வருட காலமாக தாய் நாட்டின் இறைமையையும் பௌதீக ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக இலங்கை விமானப்படை மேற்கொண்டுவரும் பணிகள் பாராட்டத்தக்கதாகுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்று (02) முற்பகல் ஹிங்குரக்கொட விமானப் படை முகாமில் கோலாகலமாக இடம்பெற்ற இலங்கை விமானப் படையின் 68வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இவ்வருடம் விசேட கண்காட்சி மற்றும் களியாட்ட நிகழ்வுடன் இடம்பெறும் இந்த ஆண்டு நிறைவு விழாவில் விமானப் படையின் இல.07 ஹெலிகொப்டர் பிரிவு மற்றும் இலக்கம் 08 மென் போக்குவரத்து பிரிவு என்பன தேசத்திற்கு மேற்கொண்ட முக்கிய பணிகளை பாராட்டி ஜனாதிபதி விருதுகள் வழங்கப்பட்டன.
தொழில் திறன்கள், தொழிநுட்ப அறிவு, ஒழுக்க பண்பாடு, அர்ப்பணிப்பு ஆகிய உயர்ந்த பண்புகளுடன் உலகின் முன்னணி விமானப் படைகளுக்கு நிகராக செயற்படும் இயலுமையும் தொழிநுட்ப திறன்களும் எமது விமானப் படையினரிடம் உள்ளதென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற படையினருக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.
நேற்று முற்பகல் ஹிங்குராக்கொட விமானப்படை முகாமுக்கு சென்ற ஜனாதிபதியை விமானப் படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு விசேட அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
இலங்கை விமானப் படையின் 68வது ஆண்டு நிறைவுடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Air Tattoo - 2019 விமானப் படை கண்காட்சி மற்றும் களியாட்ட நிகழ்ச்சி ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.
கண்காட்சியை திறந்து வைத்த ஜனாதிபதி, அதனைப் பார்வையிட்டதுடன், விமானத்தின் மூலம் விதைகளைத் தூவுவது தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி கூடத்தையும் பார்வையிட்டார். அதேபோன்று விமானப் படையின் பயிற்சி நிலையத்தினால் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி கூடத்திற்கு சென்ற அவர் பயிற்சி நடவடிக்கைகள் தொடர்பான நூலொன்றும் கையளிக்கப்பட்டது. அங்கு ஜனாதிபதி புதிய இணையத்தளமொன்றையும் திறந்து வைத்தார்.
இன்று முதல் எதிர்வரும் 06ஆம் திகதி வரை ஹிங்குரக்கொட விமானப் படை முகாம் வளாகத்தில் இடம்பெறும் இக்கண்காட்சியில் விமானப் படையின் பணிகள் மற்றும் விமானப் படையிடமுள்ள வளங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன், மக்களுக்கு திடீர் அனர்த்த நிலைமைகள் ஏற்படும்போதும் இயற்கை அனர்த்தங்களின்போதும் விமானப் படையினர் செயற்படும் விதம் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்படும்.
மேலும் விமான சாகசங்கள், பரசூட் காட்சிகள், விமானப் படை விசேட பிரிவுகளினால் மேற்கொள்ளப்படும் சில தரை போராட்டக் காட்சிகள், விமானப் படை நாய்களின் சாகச காட்சிகள், பேண்ட் வாத்திய காட்சிகள், கலாசார மற்றும் இசை நிகழ்ச்சிகளும் இங்கு இடம்பெறவிருக்கின்றன. தினமும் 2.00 மணிக்கு ஆரம்பமாகும் களியாட்ட நிகழ்ச்சி இரவு 12.00 மணி வரை இடம்பெறும். இது பொதுமக்களுக்காக கட்டணமின்றி இலவசமாக காட்சிப்படுத்தப்படுகின்றது.
இலங்கை விமானப் படை அதன் 68வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதன் திறமைகளை வட மத்திய மாகாணத்தில் உள்ள மக்களுக்கு கண்டுகளிப்பதற்காக ஏற்பாடு செய்துள்ள சிறந்தோர் வாய்ப்பென்ற வகையில் இதனை கண்டுகளிக்க வருகை தருமாறு அனைத்து பொதுமக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment