தனி வீட்டுக் கோரிக்கைகளின் பின்னணியில் காணி உரிமை உறுதிப்படுத்தப்படுவதோடு, அது ஒரு சொத்தாகவும் அமைகிறது - News View

About Us

About Us

Breaking

Thursday, February 28, 2019

தனி வீட்டுக் கோரிக்கைகளின் பின்னணியில் காணி உரிமை உறுதிப்படுத்தப்படுவதோடு, அது ஒரு சொத்தாகவும் அமைகிறது

இன்றைய மலையக மக்களின் கோரிக்கைகளில் வீடு பிரதான இடத்தை வகிக்கின்றது. எமது மக்களின் ஒட்டு மொத்த வீட்டுத் தேவையில் பத்து சதவீதத்தை எதிர்கொள்ளவே இப்போது எமக்கு வளங்கள் கிடைக்கின்றன என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் தெரிவித்துள்ளார்.

நானு ஓயா, எடின்பர்க் தோட்டத்தில் 23 தனி வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் நிரோஷனின் ஏற்பாட்டில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய திலகர் எம்.பி, எஞ்சியவற்றை அடைய நாம் பொறுமையுடன் முன்னகர வேண்டியுள்ளது. அதனை விரிவுபடுத்தவே அதிகார சபை போன்ற பொறிமுறைகளை உருவாக்கி வருகிறோம். நமது தனி வீட்டுக் கோரிக்கைகளின் பின்னணியில் காணி உரிமை உறுதிப்படுத்தப்படுவதோடு, அது ஒரு சொத்தாகவும் அமைகிறது என்பதனை மறந்துவிடக் கூடாது.

இன்று மலையகமெங்கும் மக்களின் பரவலான கோரிக்கை வீடு என்பதாகவே உள்ளது. எமது ஒட்டு மொத்த வீடுகளின் தேவை இரண்டு லட்சங்களாக உள்ளபோது நாம் இப்போதுதான் இருபதினாயிரம் இலக்கினை பூர்த்தி செய்து வருகிறோம். 

எனவேதான் ஊரில் எல்லோருக்கும் ஒரே தடவையில் வீடுகளை வழங்க முடியாதுள்ளது. எமக்கு வாக்குகளை வழங்கிய மக்கள் அத்தகைய கோரிக்கைகளை முன்வைப்பதில் தவறில்லை. ஆனால், எங்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு கிடைக்காத வெளி மாவட்ட மக்களுக்கும் நாம் சேவையாற்ற வேண்டிய தேவைப்பாடும் உள்ளது. 

நுவரெலியா மாவட்டத்துக்கு வெளியே மாத்தறை முதல் மாத்தளை வரை, மொனராகலை முதல் கேகாலை வரை என சுற்றியுள்ள அனைத்து பெருந்தோட்ட மாவட்டங்களிலும் வீடமைப்புத் திட்டங்கள் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஒரு தோட்டத்தில் எல்லோருக்கும் வீடுகள் கட்டப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. எமக்கு இப்போதைக்கு கிடைக்கின்ற வளங்களையும் வாய்ப்புகளையும் கொண்டு நுவரெலியா மாவட்டத்திற்கு மட்டுமன்றி ஏனைய மாவட்ட மலையக மக்களுக்கும் வீடுகளை வழங்க வேண்டியுள்ளது. இதனைப் புரிந்து கொண்டு பொறுமையாக இருந்தால் எல்லோருமே நன்மை அடையும் காலம் வரும் என்றார்.

No comments:

Post a Comment