மடிக்கும் திரை கொண்ட 'Samsung Fold' அறிமுகம் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 28, 2019

மடிக்கும் திரை கொண்ட 'Samsung Fold' அறிமுகம்

சம்சங் நிறுவனம் தனது புதிய சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. கடந்த புதன்கிழமை அமெரிக்காவின், சென் பிரான்சிஸ்கோ நகரில் இடம்பெற்ற சம்சங் நிகழ்வில் (Samsung Event 2019) சம்சங் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இரண்டாக மடிக்க கூடிய வகையிலான புதிய மொபைல் சாதனம் ஒன்றை (Galaxy Fold) அறிமுகப்படுத்தியிருந்தமை இநநிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்திருந்தது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சாதனங்கள் பற்றிய விளக்கங்களை வழங்கிய, தயாரிப்பு சந்தைப்படுத்தல் சிரேஷ்ட உதவி தலைவர் ஜஸ்டின் டெனிசன், 7.3 அங்குல திரை கொண்ட மடிக்கக்கூடிய சாதனத்தை அறிமுகம் செய்தார்.

டெப் (Tab) ஆகவும் மொபைல் ஆகவும் பயன்படுத்தக்கூடிய குறித்த சாதனம், சாதாரண நிலையில் 7.3 அங்குல டெப் வகை சாதனமாகவும், மடிக்கப்பட்ட நிலையில் 4.6 அங்குல மொபைல் சாதனமாகவும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மடிக்கக் கூடிய வகையிலான சாதனம் ஒன்று அறிமுகமானமை இது முதல் தடவை அல்ல. ஆயினும் மிகப் பிரபல்யம் வாய்ந்த தொலைபேசி வழங்குனர்கள் எனும் வகையில் சம்சங் நிறுவனம் மடிக்கும் வகையிலான சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளமை சிறப்பம்சமாகும்.

இவ்வாறு படிப்பதும் நேரியதாக்குவதுமான செயற்பாட்டில் ஈடுபடும் போது அச்சாதனத்தின் நிலை என்னவாக இருக்கும் என எமக்குள் எழுந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், பல்லாயிரம் முறை மடிக்கப்பட்டு நிமிர்த்தப்படும் போதும் அது உறுதியாக இருக்கும் என்பதோடு எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாது என ஜஸ்டின் டெனிசன் தெரிவித்தார்.

அதற்கென அதன் நடுப்பகுதியில் மிக நுணுக்கமான முறையில் கண்களுக்கு புலப்படாத வகையில், உறுதியான தொகுதியொன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக அதன் அமைப்பு மற்றும் வடிவில் மாற்றங்கள் நிகழாது எனவும் தெரிவித்தார்.
அதுமாத்திரமன்றி கறுப்பு (Cosmos Black), வெள்ளி (Space Silver), பச்சை (Martian Green), நீலம் (Astro Blue) எனும் நான்கு நிறங்களில் இச்சாதனத்தை பெற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

உயர்ந்த விலை கொண்ட குறித்த சாதனம் இரு பிரிவுகளில் ஏற்படக் கூடியது என ஜஸ்டின் டெனிசன் சுட்டிக்காட்டியதோடு மடிக்கப்பட்ட நிலையில் ஒரு கையடக்க தொலைபேசியாக குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்பு போன்ற விடயங்களை செய்யவும் அகன்ற திரை அவசியமான நேரங்களில் முடிவற்ற திரையினைக் கொண்ட இச்சாதனமானது முடிவற்ற திரையையும் சிறப்பான ஒலி நயத்தையும், உயரிய தெளிவான சிறப்பான காட்சியமைப்பையும் கொண்ட பல்லூடகம் ஆக செயல்படும் என ஜஸ்டின் டெனிசன் தெரிவித்தார்.
சாதாரணமாக தற்போதுள்ள எந்தவொரு ஸ்மார்ட் சாதனத்திலும் இரு செயலிகளை திறந்து பணிகளை புரியலாம் எனும் நிலையில் கலக்‌ஸி போல்ட் சாதனத்தில் (Galaxy Fold) மூன்று செயலிகளை ஒரே நேரத்தில் செயற்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது யூடியூப் வீடியோ ஒன்றை பார்த்துக்கொண்டு அதே திரையில் குறுஞ்செய்தியொன்றை டைப் செய்தவாறு, இணையத்தில் தேடுதல் மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமாத்திரமன்றி App Continuity எனும் வசதியின் மூலம் Galaxy Fold இல் மடிக்கப்பட்ட நிலையில் முற்பகுதியில் காணப்படும் திரையில் பேஸ்புக் செயலியை பார்த்தவாறு, அதனை திறந்து உள்பகுதியில் உள்ள பெரிய திரையில் அதனை மேலும் பெரிதாக பார்வையிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, Galaxy Fold ஆனது இரு வெவ்வேறு திரைகளை கொண்டதாக இருப்பினும் அது ஒன்றாக இணைந்து ஒரு செயற்பாட்டை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Three Multi Tasking, App Continuity ஆகியவற்றின் மூலம் நீங்கள் விரும்பியவாறு உங்கள் தேவைக்கேற்ற வகையில் செயலிகளைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமாத்திரமன்றி youtube இல் காணப்படும் கட்டணம் செலுத்தி பார்க்க கூடிய வசதியை இச்சாதனத்தின் மூலம் இலவசமாக பயன்படுத்துவதற்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

7 நனோ மீட்டர் (7nm) புரொசசர் மற்றும் 12GB RAM ஆகியவற்றை கொண்டுள்ளதால் இது மிகவும் சக்தி மிக்க சாதனம் என குறிப்பிடலாம்.

அதுமாத்திரமன்றி 512 GB உள்ளக நினைவகத்தை கொண்டுள்ள இச்சாதனம், உலகின் முதன் முதலாக 3.0 Flash drive இனை பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது இதிலிருந்து அதிவேகமான முறையில் தரவு (Files) பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம். குறிப்பாக ஏனைய ஸ்மார்ட் தொலைபேசிகளிலும் பார்க்க இரு மடங்கு வேகத்தில் தரவுகள் வாசிக்கப்படும் (Read Data).

இதன் மின்கலம் எப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது எனும் சந்தேகம் நமக்குள் ஏற்படலாம். சாதனத்தின் இருபகுதிகளிலும் தனித்தனியான இரு மின்கலங்களை இணைத்து தனியான மின் வழுங்கியாக செயல்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 4,380mAh மின்கலத்தை இது கொண்டுள்ளது.

ஸ்மார்ட்போன் என்றாலே கெமராக்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கும் அந்த வகையில், அதிக திறன் கொண்ட இச்சாதனத்தில் 6 கெமராக்கள் இணைக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற்புறமாக 3, உட்புறமாக 2 முற்புறமாக ஒன்று என கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன குறிப்பிடத்தக்கது.

Galaxy Fold மடிக்கப்பட்டு அல்லது திறக்கப்பட்டு எவ்வாறு வைத்திருந்தாலும் புகைப்படத்தை எடுக்கும் வகையில் இதன் கெமராக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு ஸ்மார்ட் போன், டெப்லட் ஆக மாத்திரமன்றி கெமராவாக செயல்படும் Galaxy Fold, சட்டைப் பையில் இலகுவாக எடுத்துச் செல்லும் வகையில் காணப்படுகின்றது.

மடிக்கப்பட்ட நிலையில் கைவிரல் அடையாள பாதுகாப்பு சென்சார்களை பக்கவாட்டாக, கொண்டதாக பக்கவாட்டாக Galaxy Fold கொண்டுள்ளது.

LTE/ 5G தொழில்நுட்பத்தைக் கொண்ட Galaxy Fold ஆனது 1,980 டொலர் விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் திகதி முதல் சந்தையில் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி சம்சங் தனது S10+ மொபைல் போனையும் இந்நிகழ்வின் போது அறிமுகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
தடை இன்றிய காட்சி அமைப்புக்காக, சென்சர் மற்றும் முன்பக்க கெமராக்கள் வெளித் தெரியாத வண்ணம் திரையின் உள்ளேயே வடிவமைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும். சிறிய துளை ஒன்றின் மூலம் கெமராவுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

சிறு துளை கொண்ட உலகின் முதலாவது Dynamic AMOLED திரையைக் (Dynamic AMOLED O Display) கொண்ட இது, 1,200 nitts வெளிச்ச அமைப்பை (1,200 nitts Brightness) 16 மில்லியன் வர்ணங்களை காண்பிக்கும், 100 வீத வண்ண கனவளவை கொண்டுள்ளது.

அதுமாத்திரமன்றி HDR 10+ படங்களையும் காண்பிக்கக்கூடியதாக இது காணப்படுகின்றது. அத்துடன் நீல ஒளியிலான பாதிப்பை 42% ஆக குறைத்துள்ளது.

அத்துடன் திரையின் மேற்புறமான உலகின் முதன் முறையாக, அல்ட்ராசோனிக் கைவிரல் அடையாள ஸ்கேனரையும் (Ultrasonic Fingerprint Scanner) இது கொண்டுள்ளது.
2D, 3D தொழில்நுட்பத்துடனான அல்ட்ராசோனிக் அலைகள் மூலம் கைவிரல் அடையாள தகவல்கள் மொபைல் போனின் மூளைக்கு அனுப்பப்பட்டு அதன் மூலம் திரை அன்லொக் செய்யப்படுகின்றது. இது கண்ணிமைக்கும் நொடிப் பொழுதிலேயே இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக சூரிய வெளிச்சம், ஈரலிப்பான நிலை மற்றும் இதர காரணிகளால் திரையில் காணப்படும் தடங்கலால் அல்ட்ராசோனிக் சென்சர்கள் செயற்படா விட்டாலும், திரையின் கண்ணாடி வழியான (Optical Scanning) ஸ்கேனிங் மூலமும் அது செயற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மிக உயர் மதிப்பைக் கொண்ட, வெள்ளை செரமிக் (Ceramic White) மற்றும் கறுப்பு செரமிக் (Ceramic Black) ஆகிய நிறங்களில் இவை கிடைக்கின்றன.

S10 + மொபைல் போனில் பிற்புறமாக அமைந்த 3 தொழில்சார் கெமராக்கள் காணப்படுகின்றன. இரவோ, பகலோ என்ற வேறுபாடு இன்றி மிக துள்ளியமான புகைப்படங்களை எடுக்கும் வகையில் 77o, 12MP Dual Pixel Wide Camera இனையும் தூரத்தில் உள்ள பொருளை அண்மித்ததாக உருப்பெருக்கி பார்க்கும் வகையில் இரு மடங்கு Optical உருப்பெருக்கத்தைக் கொண்ட 12MP Telephoto Camera மற்றும் மிக அகன்ற Panorama, Wide Angle புகைப்படங்களை பெறும் வகையிலான 16MP Wide Camera ஆகியவற்றை S10 + கொண்டுள்ளது.
அது மாத்திரமன்றி 123 பாகை பார்வையைக் கொண்ட மனித பார்வைக்கு ஒப்பான இந்த கமெராக்கள் மூலம் நீங்கள் பார்வையிடும் ஒன்றை அவ்வாறே பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெறப்படும் புகைப்படங்களின் பின்புல அமைப்புகள், வெளிச்ச அமைப்புகளையும் மாற்றும் வகையிலான பல்வேறு Filter களும் இதன் கமெரா செயலியில் இணைக்கப்பட்டுள்ளன.

அது மாத்திரமன்றி ஒரு தொழில்சார் புகைப்படக் கலைஞர் ஒருவர் எடுக்கக்கூடிய புகைப்படத்தை S10 + மூலம் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல கோடி தொழில்சார் புகைப்படங்களை கணனி வழி வாசிப்பின் ஊடாக அடையாளப்படுத்தி அதனை தரவுகளாக வழங்கி அதன் மூலம், தொழில்சார் புகைப்படத்தை சாதாரண ஒருவரால் மேற்கொள்ளும் வகையில் அது உதவுகின்றது.

உலகின் முதலாவது, HDR 10 + முறையிலான வீடியோக்களை பதிவு செய்யக்கூடிய மொபைல் போனாக S10 திகழ்கின்றது. அத்துடன் கை அசைவுகளால் ஏற்படும் தெளிவின்மையை பெருமளவில் குறைத்து, தொழில்சார் கமெராக்களில் பெறக்கூடிய வீடியோவை இதில் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது எடுக்கப்படும் வீடியோக்களை மாற்றம் செய்வதற்காக, Adobe Premier Rush CC மென்பொருளையும் கொண்டுள்ளமையானது, மொபைல் போன் வீடியோ மாற்றம் செய்வதில் (Video Editing) மிக பெரும் புரட்சி என்றே கூறலாம். இவ்வசதி சம்சங் தொலைபேசிகளுக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டள்ளது.

முற்புறமாக 10MP Dual Pixel Camera, 8MP RGB Depth Camera ஆகிய இரு கமெராக்களை S10 கொண்டுள்ளது. இதன் மூலம் குறைந்த வெளிச்சத்திலும் தெளிவானதும், தன்னியக்க குவியப்படுத்தல் (Auto Focus) கொண்ட புகைப்படங்களை பெறலாம் என்பதோடு, UHD வகையிலான மிகத் துல்லியமான வீடியோக்களையும் எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் நேரடி காட்சிகளை வழங்குவதில் இது பாரிய செல்வாக்கு செலுத்தும் என்பதில் ஐயமில்லை.

அத்துடன் இன்ஸாடாகிராம் (Instagram) பிரியர்களுக்கு பிரத்தியேகமான அமைப்பையும் இது கொண்டுள்ளது.

மார்ச் 08 இல் வெளியிடப்படவுள்ள இத்தொலைபேசியின், S10e ஆனது 749 டொலரிற்கும், S10 ஆனது 899 டொலரிற்கும், S10+ ஆனது 999 டொலரிற்கும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment