தற்போது ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் மாற்றமடையும் வரை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க சந்தர்ப்பம் கிடைக்காது - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 27, 2019

தற்போது ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் மாற்றமடையும் வரை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க சந்தர்ப்பம் கிடைக்காது

இலஞ்சம், ஊழல், திருட்டு போன்றவை வேரூன்றி போயிருக்கும் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு கணக்காய்வு சேவையை வலுவூட்ட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று (27) பத்தரமுல்ல, கணக்காய்வு திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற இலங்கை கணக்காய்வு சேவை சங்கத்தின் 61ஆவது வருடாந்த பொதுச்சபை கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

அரச நிறுவனங்களுக்குள் ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெறாவிட்டால் வருடாந்த வரவுசெலவுத் திட்டத்தின் பற்றாக்குறையை ஈடு செய்வதற்கு வெளிநாடுகள் மற்றும் அரச வங்கிகளின் கடன் தேவை இருக்காது. அரசாங்கத்திற்கு வர வேண்டிய வருமானத்தை அழிக்கும் சில திணைக்களங்களை இன்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் வருமானத்தை அழிக்கும் அவ்வாறான நிறுவனங்கள் தொடர்பில் எவரும் பேச முன்வருவதில்லை என குறிப்பிட்ட அவர், அது தொடர்பில் ஊடக நிறுவனங்கள் எந்த விதமான தகவல்களையும் வெளிக்கொண்டு வராதது கவலை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, தன்னைப் பற்றி எந்த விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் ஜனாதிபதியாக பொறுப்பு கூற வேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த நான்கு ஆண்டு காலமாக முறையாக நிறைவேற்றியிருப்பதை அச்சமின்றி கூற முடியும்.

இந்நாட்டின் பாரிய மோசடியாக கருதப்படும் மத்திய வங்கி மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து குற்றவாளிகளை நாட்டு மக்களின் முன் வெளிச்சம் போட்டு காட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தற்போது ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் மாற்றமடையும் வரை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க சந்தர்ப்பம் கிடைக்காது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மத்திய வங்கி நிதி மோசடி தொடர்பில் கண்டறிவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பிரதான பரிந்துரையாக தடயவியல் கணக்காய்வு இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை, அந்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு இலஞ்ச, ஊழல், குற்றப் புலனாய்வு ஆணைக்குழுவின் சட்டத்தில் ஓர் சரத்தை மாற்ற வேண்டியிருந்தாலும் நாளுக்கு நாள் அந்த நடவடிக்கை காலந்தாழ்த்தப்பட்டு வருவதையும் இதன்போது நினைவுகூர்ந்தார்.

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தற்போது சட்டத்திற்கமைய நடவடிக்கைகளை மேற்கொண்டால் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க குறைந்த பட்சம் 15 அல்லது 20 வருடங்கள் செல்லும் என்றும் தெரிவித்தார்.

2015க்கு முன்னர் அரசாங்கத்தின் ஊழல் மற்றும் மோசடிகளை கண்டறிவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து அதன் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அந்த பரிந்துரைக்கமைய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது குறித்த நிறுவனங்களின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அந்த ஆணைக்குழுவை போன்றே தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்ற இலஞ்சம் மற்றும் மோசடிகளை கண்டறிவதற்கும் அண்மையில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்ததாக குறிப்பிட்டார், தனது ஆட்சியில் இடம்பெறும் இலஞ்சம் மற்றும் ஊழலை கண்டறிவதற்கு இவ்வாறான ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு இதற்கு முன்னர் எந்தவொரு அரச தலைவரும் முன்வரவில்லை என்றும் தெரிவித்தார்.

வரையறையின்றி அனைத்து ஊழல், மோசடிகளையும் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அந்த ஆணைக்குழுவிற்கு ஆயிரக்கணக்கில் புகார்கள் கிடைத்து வருவதாகவும், குறித்த நீதிபதிகளினால் அவற்றிற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும்போது ஏற்பட்ட இடையூறுகள் தொடர்பில் நினைவுகூர்ந்த அவர், அந்த ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்குவதற்கு அச்சமடைந்தது அரச சேவையின் ஒரு பிரிவினரே என்றும் நேர்மையாக நாட்டுக்காக தனது சேவையை வழங்குபவர்கள் சட்ட திட்டங்களை கண்டு அச்சமடைய தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

அரச வளங்கள், அரச சொத்துக்கள் மற்றும் மக்கள் பணத்தை அழிக்கும் திணைக்களங்களுக்கு மத்தியில் தனது அடையாளத்தையும் மரியாதையையும் பாதுகாத்துக் கொண்டு நாட்டுக்கு உன்னத சேவையை வழங்கிவரும் கணக்காய்வு சேவை திணைக்களத்தின் பணியை பாராட்டினார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய, அரச கணக்குகள் தொடர்பிலான செயற்குழுத் தலைவர் லசந்த அழகியவன்ன, பொது நிறுவன கணக்குகள் தொடர்பிலான செயற்குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி, கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜயசிங்க உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் இலங்கை கணக்காய்வு சேவைகள் சங்கத்தின் தலைவர் கே.என்.எம்.குமாரசிங்க மற்றும் சங்க உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment