யாழ்ப்பாண பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம் : பொலிஸாரின் பாரபட்சம் குறித்து விசனம்! - News View

About Us

About Us

Breaking

Thursday, February 28, 2019

யாழ்ப்பாண பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம் : பொலிஸாரின் பாரபட்சம் குறித்து விசனம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் குறித்து பொலிஸார் பாரபட்சமாக நடப்பதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது, ‘யாழ்ப்பாண பல்கலைக் கழக தொழில்நுட்ப பீடத்தில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற பகிடிவதை சம்பவம் தொடர்பாக பெற்றோரிடமிருந்தும், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாகவும் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களுக்கமைவாக பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் மற்றும் உப விடுதிக் காப்பாளர் ஆகியோர் பகிடிவதை தொடர்பாக சிரேஸ்ட மாணவிகளிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது சிரேஷ்ட மாணவிகள் தொழில்நுட்ப பீட வளாகத்தினுள் குழப்பங்களை ஏற்படுத்தியதையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக துணைவேந்தரின் அறிவித்தலுக்கு அமைய தொழிநுட்ப பீடம் மூடப்பட்டது.

இதனையடுத்து நேற்று (வியாழக்கிழமை) தொழில்நுட்ப பீடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி பொலிஸார் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் பாணியில் இச்சம்பவம் குறித்து உப விடுதிக் காப்பாளரை கைது செய்யப் போவதாக மிரட்டியுள்ளனர்.

எனினும் கடமையில் இருந்த உத்தியோகத்தர்கள் அதற்கு அனுமதிக்காததைத் தொடர்ந்து குறித்த ஒரு உப விடுதிக் காப்பாளர் மீது வழக்கு தாக்கல் செய்யப் போவதாக மிரட்டிச் சென்றுள்ளனர்.

இதனிடையே நாளை (இன்று) காலை பெண் உப விடுதிக் காப்பாளர் ஒருவரை ஆஜராகுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தினால் அழைப்பாணை அனுப்பப்பட்டிருக்கிறது.

தண்டனைக்குரிய சட்டத்திற்கு முரணான வகையில் பகிடிவதையில் ஈடுபட்ட சிரேஷ்ட மாணவர்கள் மீது பல்கலைக் கழகத்தின் ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பகிடிவதையில் ஈடுபட்டுள்ள மாணவர்களைக் காப்பாற்றும் வகையிலும் பகிடிவதையைத் தடுக்கும் நோக்கிலும் கடமையைச் செய்யும் உத்தியோகத்தர்களை அச்சுறுத்தும் வகையில் கிளிநொச்சி பொலிஸார் நடந்து கொண்டமை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இது குறித்து விசேட கவனம் செலுத்துமாறு யாழ்ப்பாண பல்கலைக் கழக துணைவேந்தர் வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.

இதேவேளை பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க முற்படுகின்ற போது இத்தகைய அச்சுறுத்தல்கள் ஏற்படுமாயின் எதிர்காலத்தில் தாங்கள் தங்கள் கடமையைச் செய்வதில் பலனில்லை என்று பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment