மறப்போம் மன்னிப்போம் எனக்கூறி இனியும் காலத்தை இழுத்தடிக்க வேண்டாம் - வேலுகுமார் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Thursday, February 28, 2019

மறப்போம் மன்னிப்போம் எனக்கூறி இனியும் காலத்தை இழுத்தடிக்க வேண்டாம் - வேலுகுமார் எம்.பி.

மறப்போம் மன்னிப்போம் எனக்கூறி இனியும் காலத்தை இழுத்தடிக்காமல், போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் வலியுறுத்தியுள்ளார்.

கம்பளையில் இடம்பெற்ற அரசியல் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவரிடம், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வடக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “உறவுகளை இழந்தவர்கள், தொலைத்தவர்களுக்குதான் அதன் வலி என்னவென்று புரியும். இவ்வாறு போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மன வலியை ‘மறப்போம், மன்னிப்போம்’ என்ற வார்த்தையால் மட்டும் குணமாக்கிவிடமுடியாது.

எதையும் மறக்க முடியாது. மறக்கவும் கூடாது. மன்னிப்பு என்பது பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை பொறுத்தவிடயமாகும்.

போரால் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர் துடைக்கப்படும், நிலையானதொரு நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும், பொறுப்புக்கூறும் கடப்பாடு நிறைவேற்றப்படும் எனக்கூறிய ஜனாதிபதி, தற்போது அவை அனைத்தையும் மறந்து செயற்படுகின்றார்.

சர்வதேச சமூகத்தையும், அது சார்ந்த அமைப்புகளையும் தொடர்ச்சியாக ஏமாற்ற முடியாது. அவ்வாறு ஏமாற்ற முற்பட்டால் அதன் விளைவுகள் படுபயங்கரமானவையாக இருக்கும்.

தாமதித்து வழங்கப்படும் நீதி கூட மறுக்கப்பட்ட நீதிக்கு சமனானதாகும். எனவே, இனியும் இழுத்தடிப்பு செய்யாமல், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment