மாலி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை மீது நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு இலங்கை இராணுவ வீரர்களினதும் உடல் பெப்ரவரி 02ம் திகதி நாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கு சொந்தமான விமானம் மூலம் அன்றைய தினம் 03.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 03.00 மணியளவில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை கட்டளைத் தளபதியால் உடல்கள் இராணுவத் தளபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
இதற்காக ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் மூவரும் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
மாலி நாட்டின் டொவ்ன்ஸா பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவ வாகனம் மீது கடந்த 25ம் திகதி காலை 06.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் இலங்கை இராணுவத்தின் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர்.
குறித்த இருவரினதும் பணிக்காலம் கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்திருந்த போதிலும், பாதுகாப்பு பிரச்சினை காரணமாக வேறு குழுவொன்றை அங்கு பணிக்கமர்த்த முடியாது போயுள்ளது.
எவ்வாறாயினும் உயிரிழந்த மற்றும் காயமடைந்த இராணுவ வீரர்களுக்குப் பதிலாக வேறு குழுவொன்றை அந்தப் பணியில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
தற்போது சமார் 200 இலங்கை இராணுவ வீரர்கள் மாலி நாட்டில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment