மன்னார் மாவட்டத்தில் இராணுவத்திடம் இருந்த ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று (29) காலை 10.15 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸிடம் காணிக்கான ஆவணங்கள் இராணுவ அதிகாரிகளினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார் - தள்ளாடி இராணுவத்தின் 54 ஆவது படைப்பிரிவின் கீழ் இராணுவத்தின் வசம் இருந்த மற்றும் இராணுவத்தின் 61 ஆவது படைப்பிரிவின் கீழ் இராணுவ வசமிருந்த 16 ஏக்கர் காணிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டு, மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தள்ளாடி இராணுவத்தின் 54 ஆவது படைப்பிரிவு அதிகாரி பிரிக்கேடியர் சேனாரட்ன பண்டார மற்றும் இராணுவத்தின் 61 ஆவது படை பிரிவு அதிகாரி ஜேம திலகரட்ன ஆகியோர் குறித்த காணிகளுக்கான ஆவணங்களை கையளித்தனர்.
ஏற்கனவே மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள குறித்த அரச மற்றும் தனியார் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு கையளிக்கப்பட்டிருந்த நிலையில் உத்தியோக பூர்வமாக மாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு அதிகாரி தனது பகுதிகளில் உள்ள மேலும் 3 இடங்களில் உள்ள காணிகளை விடுவிக்க உள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் பேசாலையில் 11 ஏக்கர், கூராய் பகுதியில் 26 ஏக்கர், ஜீவ நகரில் 5.6 ஏக்கர் காணிகளை விடுவிக்க உள்ளனர்.
அதற்கான நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டவுடன் குறித்த காணிகள் உடன் விடுவிக்கப்படும் என தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு அதிகாரி எழுத்து மூலமாக சமர்ப்பித்துள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும் தள்ளாடி இராணுவத்தின் 61 ஆவது படைப்பிரிவின் கீழ் காயாநகரில் இராணுவத்தின் வசம் இருந்த 2 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணி காடாக உள்ளமையினால் வன வளத் தினைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு ஆவணங்கள் என்னிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment