கைச்சாத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தினை வர்த்தமானியில் வெளியிடக் கூடாது என வலியுறுத்தி பொதுமக்களின் கையெழுத்துக்களை பெற்றுக்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடும் எதிர்ப்புகளையும் மீறி 700 ரூபாய் அடிப்படை சம்பளத்துடன் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. நேற்று முந்தினம் (திங்கட்கிழமை) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் இ.தம்பையாவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவரினால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், (இ.தொ.கா.), இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (இ.தே.தொ.சங்கம்) என்பனவற்றின் தலைமைகளை அச்சங்கங்களின் அங்கத்தவர்கள் கேள்விக்குட்படுத்தி அவர்களை அவ்வொப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்ளும்படி அல்லது அதனை ரத்துச் செய்யும்படி வலியுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும்படியும், அவ்வாறு நாம் முன்னெடுக்கவிருக்கும் எல்லாவித போராட்டங்களிலும் எமது இருப்பை கைவிடாதும், இலக்கை கைவிடாதும் தொடர்ந்தும் முன்னேறுவதாகவும் அமைய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது.
அத்துடன் அந்த இரண்டு சங்கங்களினாலும் கையெழுத்திடப்பட்டுள்ள அவ்வொப்பந்தம் சட்ட ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் செல்லுபடியற்றதென்பதால் அதற்கு தொழில் ஆணையாளர் சட்ட அந்தஸ்த்து கொடுக்கும் வகையில் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடக்கூடாதென வலியுறுத்தி மக்கள் தொழிலாளர் சங்கம் கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்துள்ளது. அதற்கு சகல தொழிலாளர்களும் ஆதரவளிக்க வேண்டும் என மக்கள் தொழிலாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
தொழில் ஆணையாளர் நாயகத்தின் தீர்மானத்தின்படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்க நிலையம் என்பனவே கூட்டு ஒப்பந்த பேரப்பேச்சுக்கும் கூட்டு ஒப்பந்தத்தை தொழிலாளர்கள் சார்பில் செய்து கொள்ளவும் தகுதியை பெற்றுக்கொண்டுள்ளன.
மேற்படி மூன்று தொழிற்சங்கங்களும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பான பேரப்பேச்சில் ஈடுபட்டு வந்திருந்த போதும், கடந்த திங்கள்கிழமை கைச்சாத்திடப்பட்ட சம்பள மீளாய்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்கள் சார்பில் இ.தொ.கா, இ.தே.தோ தொழிலாளர் சங்கம் என்பன மட்டுமே கைச்சாத்திட்டுள்ளன பெருந்தோட்டத் தொழிசங்க நிலையம் கைச்சாத்திடவில்லை.
அதனால் அவ்வொப்பந்தத்தின் சட்டப்படி செல்லுபடியாகும் தன்மை கேள்வியாகியுள்ளது. அத்துடன் தொழிலாளர்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் தார்மீக ரீதியாகவும் செல்லுபடியானதல்ல என்றும் மக்கள் தொழிலாளர் சங்கம் கூறுகிறது.
எனவே, கைச்சாத்திடப்பட்டள்ள குறித்த ஒப்பந்தத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள அனைத்து தொழிலாளர்களும் அமைப்புகளும் ஓரணி திரண்டு அதனை நடைமுறைப்படுத்த விடாது தடுத்து, செல்லுபடியற்றதாக்க தனிப்படவும் கூட்டாகவும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமெனவும் மக்கள் தொழிலாளர் சங்கம் கேட்டுக் கொள்கிறது“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment