கைச்சாத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எந்த அடிப்படையில் மத்தியஸ்தம் வகித்தார் என்பதை பகிரங்கமாக தெளிவுப்படுத்த வேண்டுமென நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் வலியுறுத்தியுள்ளார்.
கடும் எதிர்ப்புகளையும் மீறி 700 ரூபாய் அடிப்படை சம்பளத்துடன் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. நேற்று முந்தினம் (திங்கட்கிழமை) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ள குறித்த கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “தோல்வி கண்டுள்ள கூட்டு ஒப்பந்த பொறிமுறையை மாற்றியமைக்க வேண்டுமென தமிழ் முற்போக்குக் கூட்டணி நாடாளுமன்றில் தொடர்ச்சியான அழுத்தங்களை கொடுத்துவருகிறது.
கடந்த 24ஆம் திகதி இடம்பெற்ற விவாதத்தின் போதும் கூட்டு ஒப்பந்த பொறிமுறையில் அரசாங்கமும் பிரதான மத்தியஸ்தம் வகிக்கும் வகையில் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பகிரங்கமாக அறிவித்திருந்தோம்.
என்றாலும், அதற்கான உரிய பதிலை பிரதமரோ அல்லது அரசோ அளித்திருக்கவில்லை. தமிழ் முற்போக்குக் கூட்டணியும் அரசின் பிரதான பங்காளிக் கட்சியாகவுள்ளது.
இந்நிலையில், நேற்றுமுந்தினம் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்டப்பட்டது. எம்மிடம் இது குறித்து எவ்வித பேச்சுகளும் இடம்பெற்றிருக்கவில்லை. அங்கு அரசும் ஒரு பிரதான பாத்திரத்தை வகித்துள்ளது.
அது எந்த அடிப்படையில் என்ற காரணத்தை பிரதமர் எமக்கு பகிரங்கமாக தெளிவுப்படுத்த வேண்டும். உரிய பதிலை பிரதமர் அளிக்காவிடின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து நாங்கள் காத்திரமான முடிவுகளை எடுக்கவுள்ளோம்“ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment