செவிப்புலனற்றோருக்கான உலகக்கிண்ண (Deaf ICC) ரி20 சம்பியன் பட்டத்தை இலங்கை செவிப்புலனற்றோர் அணி வெற்றி கொண்டுள்ளளது.
நேற்று (30) இடம்பெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி முதன் முறையாக இப்பட்டத்தை இலங்கை செவிப்புலனற்றோர் அணி சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச செவிப்புலன்ற்றோருக்கான கிரிக்கெட் சபை நடாத்திய 2018 ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக்கிண்ண T20 போட்டிகள் இந்தியாவின் ருக்ரம் நகரில் நடைபெற்று வந்தது.
அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நேபாளம், இலங்கை, பங்களாதேஷ், தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா உட்பட 8 அணிகளின் பங்குபற்றுதலுடன் இத்தொடர் இடம்பெற்றது.
இலங்கை செவிப்புலன்ற்றோர் அணி தமது முதல் போட்டியில் 65 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தியிருந்தது.
இரண்டாவதாக தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்றிருந்த போட்டியில் அது தோல்வியைத் தழுவியிருந்தது.
அடுத்து இடம்பெற்றிருந்த நேபாள அணியுடனான போட்டியில் 179 ஓட்டங்களுடனும், இந்திய அணியுடனான போட்டியில் 51 ஓட்டங்களுடனும் வெற்றி பெற்ற இலங்கை செவிப்புலன்ற்றோர் அணி சுப்பர் 3 சுற்றுக்கு முன்னேறியது.
மீண்டுமொரு முறை இந்திய அணியை 3 விக்கெட்டுகளாலும் தென்னாபிரிக்க அணியை 6 விக்கெட்டுகளாலும் வீழ்த்திய இலங்கை செவிப்புலன்ற்றோர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டியில் இந்தியாவை 36 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை செவிப்புலன்ற்றோர் அணி சம்பியனாக முடிசூடிக்கொண்டது.
No comments:
Post a Comment