தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்மானம் வரலாற்றில் இடம்பிடிக்கும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியமைப்பதற்கு தமது கட்சி முழு ஆதரவையும் வழங்கத் தீர்மானித்துள்ளது எனக் குறிப்பிட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தது.
இந்தநிலையில் கூட்டமைப்பின் குறித்த முடிவை வரவேற்று கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாம் வகித்த பதவிக்குரிய நிறைவேற்று அதிகாரங்களை ஆட்சிக்கவிழ்ப்பு சூழ்ச்சிக்காகவே பயன்படுத்தினார். மஹிந்த படையணியின் உதவியோடு சட்டவாக்க சபையையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டார்.
எனினும், இந்தச் சூழ்ச்சிக்குத் துணைபோகாது பிரதான அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் ஓரணியில் திரண்டன. அதியுயர் சபையின் சுயாதீனத்தன்மையையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்காக சபாநாயகர் துணிச்சலுடன் செயற்பட்டார். பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நீதி – நியாயத்தின் பக்கம் நின்று போராடியது.
அரசியல் நெருக்கடியால் நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிட்டது. சுற்றுலாத்துறையும் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்து வருகின்றது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டை விட்டோடுகின்றனர். அரச மற்றும் நிர்வாக இயந்திரங்கள் முற்றாக முடங்கியுள்ளன. இந்நிலைமை தொடருமானால் நாட்டுக்கு பேராபத்து ஏற்படும்.
எனவே, நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு, அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் எடுக்கப்பட்டுள்ள அரசியல் முடிவானது நிச்சயம் வரலாற்றில் இடம்பிடிக்கும். இதற்கும் புலிச்சாயம் பூசி தெற்கு மக்களை திசை திருப்பி – வாக்குவேட்டை நடத்துவதற்கு மஹிந்தவும், அவரின் சகாக்களும் முயற்சிக்கலாம். இனவாதத்தைக் கக்கலாம். ஆகவே, இந்த ஏமாற்று நயவஞ்சக அரசியல் பொறிக்குள் சிங்கள மக்கள் சிக்கிவிடக்கூடாது.
அதேவேளை, கட்சிக்குள்ளேயே எதிர்ப்பலைகள் கிளம்பியபோதும் அவற்றையெல்லாம் சமாளித்து – பல சவால்களுக்கு முகங்கொடுத்து ஜனநாயகத்துக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு தமிழ்க் கூட்டமைப்பு நேசக்கரம் நீட்டியுள்ளது.
இந்த உதவியை ஐக்கிய தேசிய முன்னணியும் அதன் பங்காளிக் கட்சிகளும் என்றும் மறக்கக் கூடாது. புதிய ஆட்சி உதயமான கையோடு தமிழ் மக்களுக்குரிய தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் நாமும் விழிப்பாகவே இருப்போம். அரச கூட்டணிக்குள் இருந்தபடியே அழுத்தங்களைப் பிரயோகிப்போம்’’ என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment