குருநாகல் - சியம்பலாகஸ்கொட்டுவ மதீனா தேசிய பாடசாலையில் 2001 க.பொ.த. சாதாரணத்திலும் 2004 உயர் தரத்திலும் கற்ற மாணவர்களின் வரலாற்றுச்சிறப்புமிக்க மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு சுமார் 14 வருடங்களுக்குப்பின் சியம்பலாகஸ்கமுவ - நாரமல ரிச் வின் மண்டபத்தில் கடந்த 30.09.2018ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பழைய மாணவர் சங்க குழுத்தலைவர் எம்.றிஷாதின் தலைமையில் மிகவும் விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில், குருநாகல் - சியம்பலாகஸ்கொட்டுவ மதீனா தேசிய பாடசாலையில் 2001 க.பொ.த. சாதாரணத்திலும் 2004 உயர் தரத்திலும் கற்ற கணிசமாக மாணவர்கள் கலந்து கொண்டனர். இதன் போது தமது கடந்த கால பாடசாலை வாழ்க்கை மற்றும் பல்வேறு கருத்துப்பரிமாற்றங்களும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தாம் கல்வி கற்ற காலத்தில் கற்பித்த அதிபர், ஆசிரிய, ஆசிரியைகளைக் கெளரவிக்குமுகமாகவும் கல்வியைத் தந்து எம்மை உயர்த்தி விட்டமைக்கு நன்றி தெரிவிக்குமுகமாகவும் குறித்த ஒன்றுகூடல் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டு நினைவுச்சின்னம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.
அத்துடன் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாகவும் சியம்பலாகஸ்கொட்டுவ மதீனா தேசிய பாடசாலையில் அதிபராக இருந்து பாடசாலையின் வளர்ச்சிக்கும் இப்பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றி அல் ஹாஜ் இஸ்மாயில் அதிபருக்கு நினைவுச்சின்னம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய அதிபர் இஸ்மாயில், மதீனாவின் வரலாற்றில் இவ்வாறானதொரு நிகழ்வு இதுவே முதல் தடவை. எனது சேவை வரலாற்றில் இப்படியொரு நிகழ்வை இதற்கு முன்னர் கண்டதில்லை. இவ்வாறான நிகழ்வுகள் தொடர வேண்டும். இது ஏனைய மாணவர்களுக்கும் முன்மாதிரியாக அமைய வேண்டும். இவ்வாறான நிகழ்வுகளூடாக மதீனாவின் கல்வி வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
மதீனாவில் குறிப்பிட காலப்பகுதியில் கல்வி கற்ற நாட்டின் நாலா பக்கமும் வாழும் பழைய மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை மிக முக்கிய அம்சமாகும். இதில் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், சமூகத்தலைவர்கள் எனப்பல்வேறு துறைசார்ந்தோர் உள்ளடங்குகின்றமை சிறப்பம்சமாகும்.
பழைய நினைவுகளை மீட்டிக்கொள்ளக் கிடைத்த இந்த பொன்னான சந்தர்ப்பம் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்ததுடன், நிகழ்வை முடித்து பிரிந்து செல்வதென்பது சோக நிகழ்வாகவும் அமைந்தது.
இந்நிகழ்வை ஏற்பாடு செய்த ஏற்பாட்டுக்குழுவுக்கும் தலைமையேற்று சிறப்பாக நடாத்தி முடித்த ஏ.றிஷாத் அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகள்.
தியாவட்டவான் ஐ.எம்.றிஸ்வான்
No comments:
Post a Comment