ஒரு நூற்றாண்டு வருட காலம் மின்சாரமற்ற, 28 வருட காலம் மீள்குடியேற்றப்டாத கிராமம் - மட்டு மாவட்ட கௌரவ அமைச்சர்களே இது உங்களின் கவனத்திற்கு!! - News View

About Us

About Us

Breaking

Thursday, October 4, 2018

ஒரு நூற்றாண்டு வருட காலம் மின்சாரமற்ற, 28 வருட காலம் மீள்குடியேற்றப்டாத கிராமம் - மட்டு மாவட்ட கௌரவ அமைச்சர்களே இது உங்களின் கவனத்திற்கு!!

இதுவரை மின்சாரத்தைக் கண்டிராத கிராமம் இருக்குமென்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கள்ளிச்சை கிராமத்திற்கு இன்னும் மின்சார வசதியோடு சேர்த்து அடிப்படை வசதிகளும் வந்தபாடில்லை. இக்கிராமம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லைக் கிராமமாகும்.

இங்கே வருகை தருகின்ற அரசியல்வாதிகளுக்குக்கூட இயற்கை அழகை இரசிப்பதற்கும், நீராடுவதற்கும், உணவு சமைத்து சாப்பிட்டுவதற்கும் தான் நேரமிருக்கின்றதே தவிர, இக்கிராமத்தை முன்னேற்றுவதற்கும், இக்கிராமத்திலிருந்து அகதிகளாய் சென்ற மக்களுக்கு வீட்டு வசதிகளைச் செய்து கொடுத்து மீள்குடியேற்றுவதற்கும் அதிகாரங்கள் இருந்தும் பராமுகமாக இருக்கின்றனர்.

இக்கிராம மக்கள் பல தடவைகள் பல அமைச்சர்களை நேரில் சென்று மீள்குடியேற்றம் சம்பந்தமாக கலந்துரையாடிய போதும், அதற்கான தீர்வு இன்றுவரை கிடைக்கவில்லை.

காரணம் கேட்டால், இக்கிராமத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளைத்தவிர யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அகதிகளாய்ச் சென்ற மக்களை இக்கிராமத்திற்கு வந்து அவர்களது காணிகளில் தற்காலிக கூரை வீடுகளை அமைத்து அங்கு குடியமருமாறும் பின்னர் மீள்குடியேற்றத்திற்கான வழிகளை ஏற்படுத்தி தருகின்றோமெனவும் அமைச்சர்கள் கூறுகின்றனர்.
கௌரவ அமைச்சர்களே!!
1990ம் ஆண்டுக்குப்பின் 7 வருடங்கள் அகதி முகாம்களில் கஷ்டப்பட்டு, 20 வருடங்களாக தாங்கள் உயிருக்குப்போராடி தற்போது தங்களின் அயராத முயற்சியால் இன்று வரைக்கும் ஏதோவொரு வகையில் வாழ்ந்து கொண்டு இன்றுவரை தாய் மண்ணுக்காகப் போராடிக்கொண்டும் உங்களை நம்பிக்கொண்டும் இருக்கும் இந்த கள்ளிச்சை அப்பாவி மக்களை தற்போது அடிப்படை வசதிகூட இல்லாத (வீதிகள், மின்சாரம், குடிநீர், காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு) அடையாளமற்று காடுகளாய் காணப்படும் கிராமத்தில் இந்நவீன காலகட்டத்தில் கூரை வீடுகளை அமைத்து குடியாமரச் சொல்வது எந்த வகையில் நியாயம்?

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதிகள் இருந்த போதிலும், ஏன் இன்றுவரை இம்மக்கலின் மீள்குடியேற்றக் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை?
கௌரவ இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் புனர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக இருந்த போதிலும், இக்கிராமத்தை மீள்குடியேற்ற முன்வரவில்லை. இன்று பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக இக்கிராமத்திற்கு வீதிகளை அமைத்துக்கொடுக்க முன்வருவாரா?

கௌரவ பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சராக இருந்த காலத்திலும், இக்கிராமத்தைக்கண்டு கொள்ளவில்லை. இன்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சராக இருக்கும் நிலையில், இக்கிராமத்தைக் கட்டியெழுப்ப முன்வருவாரா?

கௌரவ பிரதியமைச்சர் செய்யத் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சராக இரண்டு, மூன்று தமிழ்க் கிராமங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள கள்ளிச்சைக் கிராமத்தின் பக்கம் இன நல்லிணக்கத்தோடு, இம்மக்களின் தாய் மண்ணை மீட்டெடுக்க செவிசாய்ப்பாரா?

இம்மக்களின் அயராத முயற்சிக்கும் உழைப்பிற்கும் இதன் பிறகும் பலன் கிடைக்காவிட்டால், காலம் பதில் சொல்லும்.

www.thehotline.lk

No comments:

Post a Comment