புல்லுமலை குடிநீர் தொழிற்சாலை தொடர்பில் மீளாய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டத் தொடர் நேற்று (03) மாலை இடம்பெற்றது.
இக்கூட்டத்தில், இத்தொழிற்சாலையால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஜனாதிபதியிடம் எடுத்துரைத்ததாகவும் அதன் பிரகாரம் இவ்விடயத்தை மீளாய்வு செய்வதாக ஜனாதிபதி உறுதியளித்ததாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தபோது ஜனாதிபதியும் அதனை ஏற்றுக்கொண்டதாகவும் நீர் வளத்தை முறைகேடாக உறிஞ்சுகின்ற தொழிற்சாலைகளை ஜனாதிபதி கண்டித்ததாகவும் கூறினார்.
அத்தோடு குறித்த குடிநீர் தொழிற்சாலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்ட அறிக்கைகளும் தொழிற்சாலைக்கு எதிராகவே உள்ளன என்பதையும் சுட்டிக்காட்டியதாகவும் அவற்றை செவிமடுத்த ஜனாதிபதி தொழிற்சாலை தொடர்பான சகல அறிக்கைகளையும் எதிர்வரும் மாதம் 8ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கும்படி சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு உத்தரவிட்டதாகவும் வியாழேந்திரன் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை தேவபுரம் அரிசி ஆலையை விரைவில் ஆரம்பிப்பது மற்றும் படுவான்கரை மக்கள் எதிர்நோக்கும் தண்ணீர் பிரச்சினை தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்ததாக வியாழேந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment