கோரளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்றையதினம் (04) சுகாதார உத்தியோகத்தர்களுக்கான அடிப்படை முதலுதவிப் பயிற்சி இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையினால் நடாத்தப்பட்டது. சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். நஜிப்கான் வேண்டுகோளுக்கிணங்க இப்பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியை ஆரம்பித்து வைத்துப் பேசிய டாக்டர். நஜிப்கான் சுகாதார உத்தியோகத்தர் ஒவ்வொருவரும் முதலுதவி அறிவினைப் பெற்றிருப்பது அவசியம் எனவும் சாதாரண மக்களோடு பணியாற்றுகையில் மக்களுக்கு ஏற்படுகின்ற விபத்துக்கள் மற்றும் திடீரென ஏற்படுகின்ற நோய்களை சுகாதாரப் பணியாளர்கள் கையாளக்கூடியதாக இருக்கவேண்டும்.
சாதாரண மக்கள் சுகாதார உத்தியோகத்தர்களிடம் அதிக அளவில் எதிர்பார்க்கின்றார்கள். எனவே அவசர நேரமொன்றின்போது அவர்களது எதிர்பார்ப்பபை நிறை வேற்றுவதற்கு ஏற்ற அறிவினை ஒவ்வொரு சுகாதார உத்தியோகத்தரும் கொண்டிருத்தல் வேண்டும் என்றார்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளைத் தலைவர் த.வசந்தராஜா இங்குகருத்துதெரிவிக்கையில்,
விபத்துக்குட்பட்ட அல்லது திடீரென நோய்வாய்ப்பட்ட ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமலும் அவரது பாதிப்பு தீவிரமடையாமலும் அவர் விரைவில் குணமடைவதற்கும் முதலுதவி அறிவு துணைநிற்கிறது.
விபத்துக்குட்பட்டவரை அல்லது நோய்வாய்ப்பட்டவரை வைத்திய உதவி கிடைப்பதற்கிடையில் உரிய முறையில் கையாள்வதனால் அவருக்கு நேர இருக்கும் ஆபத்தினை பெருமளவு குறைக்க முடியும். அதற்கு முதலுதவி அறிவு அவசியம். வெறுமனே வாசிப்பதன் மூலமோ அல்லது ஒருவிரிவுரையின் மூலமோ முதலுதவி அறிவினைப் பெறமுடியாது. முதலுதவி ஒருதிறன் சார்ந்த விடயம் ஆகும்.
எனவே ஒரு செய்முறைப் பயிற்சியினூடாகவே முதலுதவி அறிவையும் திறனையும் பெற்றுக் கொள்ளமுடியும். சுகாதார திணைக்களம் தங்களது உத்தியோகத்தர்களுக்கு முதலுதவிப் பயிற்சி அளிப்பதற்கு எடுத்துள்ள தீர்மானம் நிச்சயம் அனைவராலும் வரவேற்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment