மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பிரதேசங்களில் காணப்படும் முன்பள்ளிப் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமென கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று 27.09.2018ம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற சபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, தியாவட்டான் பிரதேசம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீளக்குடியமர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள, கிறிஸ்தவ சமூகங்கள் ஒன்றிணைந்து வாழும் பிரதேசமாகக் காணப்படுகின்றது.
இப்பிரதேச மக்கள் பல்வேறு விதமான அடிப்படைப்பிரச்சினைகளுடன், அன்றாடத் தேவைக்கான தண்ணீரின்றி அல்லல் பட்டு வரும் அதே நேரம், இப்பிரதேசத்தினுள் அடங்கும் அரபா நகர் கிராமத்தில் சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு மேலாகவும் ஒரு முன்பள்ளியேனும் ஆரம்பிக்கப்படவில்லை.
இதன் காரணமாக, இப்பிரதேச மக்கள் தங்களது பிள்ளைகளை தியாவட்டவான் பிரதேசத்திலுள்ள முன்பள்ளிகளில் சேர்க்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் காணப்படுகின்றனர். இவற்றைக் கருத்திற்கொண்டு முன்பள்ளியொன்று அமைக்கப்பட வேண்டும். அத்துடன், தேவையான காணி காணப்படுவதனால் பின் தங்கிய இப்பிரதேச சிறார்களின் கல்வி முன்னேற்றத்துக்காக ஆரம்பப் பாடசாலையொன்றும் அமைக்கப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் முன்பள்ளிப் பாடசாலையொன்றை அமைப்பதற்கான இடத்தைப் பார்வையிட்ட சபையின் செயலாளர் நிதி மூலங்களைப் பெற்று அதனை அமைத்துத் தருவதாக வாக்குறுதியளித்திருந்தமையும் இவ்விடத்தில் நினைவூட்டுகிறேன். இது தொடர்பில் தவிசாளர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அத்தோடு, பாலைநகர் பிரதேசத்தில் காணப்படும் முன்பள்ளியில் சுமார் இருபத்தைந்து சிறார்கள் கல்வி நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். இதன் பெயர் மாற்றப்பட்டு சபையின் நிர்வகிப்பின் கீழ் கொண்டு வரப்படுவதுடன், அங்கு காணப்படும் இருக்கைகள் சேதமடைந்து சிறார்கள் அமர்ந்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத அசாதாரண நிலை காணப்படுகின்றது. இவைகளைக் கருத்திற்கொண்டு அவைகள் திருத்தப்பட்டு அதனை அபிவிருத்தி செய்து அப்பிரதேச சிறார்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவ முன் வர வேண்டும்.
அதனைப் புனர்நிர்மாணம் செய்வதற்கு என்னால் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் எதுவும் கைகூடாத நிலையிலேயே காணப்படுகின்றது. அது தொடர்பிலும் கவனஞ்செலுத்தப்பட வேண்டியது அவசியமாகின்றது.
அத்துடன், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் எமது பிரதேசத்தில் நீர் விநியோகத்தை ஏற்பாடு செய்துள்ளோம். இதில் துஸ்பிரயோகங்கள் இடம்பெறுவதாகவும் முறையற்ற விதத்தில் நடந்து கொள்வதாகவும் பணத்துக்காக விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. தற்போது இப்பிரதேசங்களில் மிக மோசமான நீர்த்தட்டுப்பாடு நிலவுகின்றது. ஆகவே, இது தொடர்பில் தவிசாளர் உடனடக் கவனமெடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன், தியாவட்டவான் குப்பை மற்றும் போதைப்பொருள் வியாபாரி தொடர்பில் எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை கொண்டமைக்காக தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, முகாமைத்துவ உதவியாளர் எம்.அக்பர் ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தனதுரையில் தெரிவித்தார்.
No comments:
Post a Comment