கல்முனை அபிவிருத்தி : வரலாறுகளை அழித்த வரலாற்றுத் துரோகமாக அமைந்து விடக் கூடாது! - News View

About Us

About Us

Breaking

Friday, September 28, 2018

கல்முனை அபிவிருத்தி : வரலாறுகளை அழித்த வரலாற்றுத் துரோகமாக அமைந்து விடக் கூடாது!

அம்பாறை மாவட்டத்தின், கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. காலத்தின் கட்டாயம். நிச்சயமாக கல்முனை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்கவும் கூடாது. இந்தத் திட்டத்தை எவர் முன்னெடுத்தாலும் அதனை வரவேற்க வேண்டும்.

இதேவேளை, தற்போது இந்தத் திட்டத்தை முன்னெடுக்கும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல்கள் அமைச்சர் கௌரவ. ரவூப் ஹக்கீம் அவர்களின் பணிகளுக்கு எவரும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. கட்சி அரசியல், பிரதேசவாதங்களுக்கு அப்பால் நின்று நமது நகரம், நமது மண் என்ற பற்றுதலுடன் அபிவிருத்தி பணிகளுக்கான முழு ஆதரவையும் வழங்க வேண்டும்.

அதேவேளை, இந்த அபிவிருத்தித் திட்டத்தினால் முஸ்லிம்களின் அடையாளங்கள், வரலாற்றுத் தடயங்கள் அழிக்கப்படாமல் பாதுகாக்கும் பொறுப்பும் சம்பந்தப்பட்டோருக்கு உள்ளது. இதில் கரிசனையோடு செயற்பட வேண்டும். எமது சமூகத்தின் வரலாற்றுப் பெருமை கூறும் இடங்கள், தடயங்களை எமது வருங்காலச் சந்ததியினர் கல்முனையில் தேடி அலையும் நிலை ஏற்படக் கூடாது. மாறாக, ‘இது எங்கள் இடம்’ என அவர்கள் ஆதாரங்களைத் தொட்டுக்காட்டி நெஞ்சை நிமிர்த்திக் கூற வேண்டும்.

குறித்த இடங்களில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதாயின் நமது வரலாற்று ஆதாரங்கள் சிதைவுபடாமலும் அங்கிருந்து அகற்றப்படாமலும் ஒரு புறமாக இருக்க, மறு புறமாக மெருகூட்டி, நவீனப்படுத்துவதில் தவறில்லை.

இந்த நிலையில், கல்முனை நகர மத்தியில் முஸ்லிம்களின் வரலாற்றைக் கூறும் ஓர் இடமாக நகர மண்டபம் காணப்படுகிறது. இந்தக் கட்டடம் கல்முனையின் தந்தை என போற்றப்படும் எம்.எஸ். காரியப்பர் அவர்களால் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் பெறப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட ஒரு கட்டடம். ஆனால், இதனை முற்றாக இடித்து விட்டு புதிய பல்கூறு கட்டடத் தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிய வருகிறது. இதனை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அதேபோன்றே, கல்முனையில் அமைந்துள்ள நூலகத்தையும் அங்கிருந்து அகற்றி வேறு இடத்தில் அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் சேவையின் செம்மல் மர்ஹும் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட இந்த நூலகத்தையும் அங்கிருந்து அகற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இதனையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

முழு இலங்கையிலும் இன்று முஸ்லிம்களின் காணிகள், பூர்வீக இடங்கள் போன்றன தொல்பொருள் திணைக்களத்தினாலும் வன இலாகாவினாலும் உண்மைக்குப் புறம்பான காரணங்களைக் காட்டி கையப்படுத்தப்பட்டு வருகின்றன. எமது பாரம்பரிய இடங்கள், நாங்கள் வாழந்ததற்கான அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. வில்பத்து, தம்புள்ளை, பலாங்கொடை ஜீலானி, பேருவளை, திருகோணமலை போன்ற இடங்களில் நடந்து கொண்டிருப்பனவற்றை நாம் அறிவோம். இதற்கு மேலாக எமது நிலபுலன்களில் அத்துமீறிய குடியேற்றங்கள், காணி அபகரிப்புகள் இடம்பெறுகின்றன.

மேலும், அம்பாறை மாவட்டத்தில் பல முஸ்லிம் பிரதேசங்களை சிங்கள மண்ணாக மாற்றும் அத்துமீறல்கள் இடம்பெறுவதனை நாம் அறிவோம். இதன் ஓர் ஆரம்பமே இறக்காமம் மாயக்கல்லி மலை புத்தர் சிலை. இன்று அங்கு பௌத்த ஆலயம் ஒன்றை நிர்மாணித்து சிங்களக் குடிப்பரம்பலை தோற்றுவிக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. அதற்கான காணி அபகரிப்பு சட்டரீதியாக மேற்கொள்ளப்படுகிறது. இதேபோன்று நாளை அது அம்பாறை மாவட்டத்தின் அனைத்து முஸ்லிம் பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்படலாம் என்பதனை சமூகப் பொறுப்புடன் இங்கு கூறிக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்நியர்களால் எமது பாரம்பரிய மண், பூர்வீக அடையாளங்கள் அழித்து இல்லாமல் செய்யப்படும் ஒரு நிலையில், கல்முனையில் முஸ்லிம்களின் இருப்பையும் வரலாற்றுத் தடயங்களையும் எடுத்துக் கூறக் கூடியதான இடங்களை நாங்களே அழிப்பது என்பது எதிர்கால முஸ்லிம் சந்ததிக்கு நாங்கள் செய்து விட்டுச் செல்லும் பாரிய துரோகத்தனம். எம்மை அவர்கள் சபிப்பார்கள். எம்மீது சாபம் செய்வார்கள்.

எனவே, இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனம் செலுத்துவது கட்டாயமானதாகும். எங்களுக்காக உள்ள சிலவற்றை நாங்களே இல்லாமல் ஆக்கக் கூடாது.

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

No comments:

Post a Comment