எழுதப்பட்ட ஒரு குளிசையின் பிராண்ட் இல்லாதவிடத்து எந்த வித்தியாசமும் இல்லாத அதே இரசாயனப் பொருளைக் கொண்ட வேறு பிராண்ட் பாவிக்கலாமா? பாமசிகளை குறைகானும் எந்த நோக்கமும் தேவையும் எனக்கில்லை வைத்தியர் ஹாலித்
எனது நோக்கம் அப்பாவி மக்களுக்கு அறிவூட்டுவதே ஒழிய குற்றம் இழைக்கும் பாமசிக்காரர்களை வம்புக்கிழுப்பதோ அல்லது அவர்களுடன் யார் அறிவாளி என்று மோதுவதோ அல்லது அவர்களை திருந்தச் சொல்வதோ அல்லது அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதோ நோக்கம் அல்ல அதை இறைவனும் சட்டமும் பார்த்துக் கொள்ளட்டும்.
உங்களுக்கு யாராவது பாமசி நடத்தும் நன்பர்கள் இருந்தால் கேட்டுப்பாருங்கள், அங்கே நடக்கும் அநியாயங்களை, கொள்ளையைப் பற்றி நான் சொல்பவை உண்மையா இல்லையா என விளங்கும், சிலர் பாமசிகளில் நடக்கும் இக்கொடுமைகளை அவர்களது வியாபார தந்திரம் என்று தற்புகழ்ச்சி அடைந்துகொள்வர்.
இலங்கை போன்ற சட்டம் காலுக்கு கீழ் போட்டு மிதிக்கப்பட்டாலும் எதுவும் நடந்துவிடாத நாட்டில், பெரும்பாலான பாமசிக்கள் ஆங்கில மருத்துவத்திற்கு ஒரு கேடு என்றே சொல்லமுடியும். ஆனால் மிகச்சிறந்த நம்பிக்கையான பாமசிக்களும், மிகச்சிறந்த விடய அறிவுடைய பாமசிஸ்ட்களும், டிஸ்பென்சர்களும் இல்லாமல் இல்லை.
பாமசிக்களில் நடக்கும் திருகுதாளங்கள் எல்லாவற்றையும் பற்றி நான் கதைக்க வரவில்லை அவ்வாறு கதைக்கபோனால் ஒரு பெரும் புத்தகம் எழுதும் அளவு திருகுதாளங்களால் நிரம்பி வழிகின்றது சில பாமசிக்கள், வைத்தியரினால் எழுதப்படும் வெளிச்சிட்டைகளில் என்னவெல்லாம் நடக்கும் எனத்தான் சொல்ல வருகின்றேன், எப்படியெல்லாம் நீங்கள் ஏமாற்றப்படலாம் என்பதே எனது இன்றைய தலைப்பு.
ஆங்கில மருந்துகள் நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை (National Medicine Regulatory Authority) பல சட்டங்களை இயற்றி அதனை மீறினால் கடும் தண்டனைகளையும் பிரேரித்துக்கின்றது ஆனால் இச்சட்டங்கள் மீறப்படாத பாமசி ஒன்றை இலங்கையில் தேடிக்கண்டு பிடித்தல் மிகக்கடினமானது.
கதை ஒன்றைச்சொல்லிவிடுவோம்
2016ஆம் ஆண்டில் கொழும்புக்கு வேலைமாற்றம் பெற்று வந்து விட்டேன் வந்ததன் பிற்பாடு எந்தவொரு பிரைவட் கிளினிக் செய்வதிலிருந்தும், பிரைவட் கொஸ்ப்பிட்டலில் வேலை செய்வதில் இருந்தும் ஈடுபடவில்லை, (காரணங்கள் மிகப்பல பிறகு ஒரு பதிவில் சொல்கிறேன்) அதனால் தேவைப்படும் மருந்துகளை பாமசிக்களில் வாங்கிக்கொள்வேன்.
அன்று வீட்டில் ஒருவருக்கு கால்வலிக்கு பாவிப்பதற்காக டைக்குளொபெனக் எனும் வலிமாத்திரை தேவைப்பட தெமட்டகொட வீதியில் உள்ள ஒரு பாமசிக்கு சென்றேன் (அங்கே நான் டொக்டர் என்று தெரியாது).
டைக்குளொபெனக் டெப்லட் ஒரு கார்ட் தாங்க என்றேன், அதிலும் நான் ஒரு பிராண்டைச் சொல்லிக்கேட்டேன் அது இல்லை என்று வேறு ஒரு பிராண்ட் இருப்பதாகவும், நல்ல பிராண்ட் என்றும், ஏதோ ஒரு நாட்டின் பெயரையும் சொன்னார், எவ்வளவு என்று கேட்டேன் ஒரு டெப்லட்டின் விலை மாத்திரம் 80 ரூபாய்.
நான் கேட்ட பிராண்ட் ஒரு டெப்லட்டின் விலை ஒரு ரூபாய் கூட இல்லை, சரி விலைகுறைந்த பிராண்ட் ஒன்றும் இல்லையா என்றேன், இது தான் எங்களிடம் தற்போது உள்ள விலை குறைந்த பிராண்ட் என்றார். வேண்டாம் என்று விட்டு வேறு பாமசிக்கு சென்றுவிட்டேன்.
இந்த பாம்சிக்காரர் எவ்வாறு சட்டத்தை மீறுகிறார் என்று பாருங்கள்
1- நான் கேட்ட உடனே டொக்டரின் சிட்டை இல்லாமல் எனக்கு மருந்தை தரமுற்படுகிறார் (மிகவும் ஒரு தண்டனைக்குறிய குற்றம், போதை மாத்திரைகளின் ஆதிக்கத்துக்கு வழிகோளியது இதுவே)
2- வேறு ஒரு பிராண்ட் இருக்கின்றது என்று அவரது விலைகூடிய மருந்தை என்னில் தினிக்கப்பார்க்கிறார் (உண்மையில் அவ்வாறு இல்லாவிடில் நான் கேட்ட அதே பிராண்டின் விலையை என்னிடம் சொல்லவேண்டும், அத்தோடு அவரிடம் உள்ள மற்ற அதே இரசாயன மருந்தின் பிராண்ட்களின் விலைப்பட்டியலை தரவேண்டும், அதில் ஒன்றை நான் தேர்வுசெய்ய இடமளிக்கவேண்டும்)
3- டைக்குளொபெனக் போன்ற ஓரு அவசியமான மருந்தின் பொதுமருந்து வகையை (Generic medicine) தமது பாமசியில் வைத்திருக்காமல் விலைகூடியவகை மாத்திரை ஒன்றைமட்டும் வைத்திருத்தல்.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் சட்டம் 2015/5, சரத்து 56 இன் படி ஒரு வைத்தியர் ஒரே ஒரு இரசாயனப்பொருள் கொண்ட ஒரு மருந்தின் பொதுப்பெயரையே (Generic name) எழுதவேண்டும், இங்கே அவர் விரும்பினால் அந்த இரசாயனத்தைக் கொண்ட தான் விரும்பும் பிராண்ட் (Brand name) ஒன்றை குறிப்பிட முடியும்.
அவ்வாறு பிராண்ட் எழுதப்பட்டிருந்தால் இங்கே பாமசிக்காரர் இதை விட சிறந்த பிராண்ட் இருக்கின்றது தரவா எனக்கேட்பது தடை செய்யப்பட்டுள்ளது, அந்த பிராண்ட் இருக்குமிடத்து அவர் அதை தரவேண்டியது கடமை, அந்த பிராண்ட் இல்லாவிடில், எந்தவொரு வித்தியாசமும் இல்லாமல் அதே இரசாயன மருந்தை மாத்திரம் கொண்ட மற்ற ஏதாவது பிராண்டை உங்களின் விருப்பத்தோடு தரமுடியும்.
ஆனால் அவர் தன்னிடமுள்ள மற்றய ப்ராண்டுகளினதும், இலங்கை அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினதும் எந்தவொரு வித்தியாசமும் இல்லாத அதே இரசாயனத்தைக் கொண்டுள்ள மற்றய பிராண்டுகளினதும் விலைகளை உங்களுக்கு தெரிவித்து அதில் உங்களை தெரிவு செய்யச் சொல்லலாமே ஒழிய பாமசிக்காரர்கள் இது நல்லது இதை எடுங்கள் என்று உங்களை கட்டாயப்படுத்தவோ, அல்லது உங்களை மடக்கவோ முடியாது அவ்வாறு செய்யமுற்பட்டால் அது தண்டனைக்குறிய குற்றமாகும்.
ஒன்றுக்கு மேற்பட்ட இரசாயன மருந்துகளின் கலவையைக் கொண்டுள்ள மாத்திரைகளை அல்லது மருந்துகளை எழுதும் போது வைத்தியர்கள் இவ்விரசாயனப் பெயர்களைக் கொண்ட பொதுப் பெயர்களை (Generic name) எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, பிராண்ட் பெயரை மட்டும் எழுதினாலே போதுமானது, இவ்வாறான நிலைகளில் குறித்த பிராண்டைத்தவிர வேறு எதையும் பாமசிக்காரர் தருவது குற்றமாகும்.
இதே மருந்தில் வேறு பிராண்ட் தருகிறோம் என்று விட்டு அதையொத்த ஆனால் இரசாயன ரீதில் வேறுபட்ட மருந்துகளை தந்து விடுவதில் தான் பாமசிக்காரர்கள் உங்களை ஏமாற்றிவிடுகிறார்கள்.
எழுதப்பட்ட ஒரு குளிசையின் பிராண்ட் இல்லாத விடத்து எந்த வித்தியாசமும் இல்லாத அதே இரசாயனப் பொருளைக் கொண்ட வேறு பிராண்ட் பாவிக்கலாமா? இப்போது நீங்கள் ஆம் என்ற விடையை தெளிவாக புரிந்து கொண்டிருப்பீர்கள்
இதனுடன் தொடர்புபட்ட ஏனைய பதிவுகளுக்கு
https://www.newsview.lk/2018/08/blog-post_893.html
No comments:
Post a Comment