புலிகளின் மக்கள் பலம் புலிகளாலே நிருவிக்கப்படும் என்கின்றார் கந்தசாமி இன்பராசா - News View

About Us

About Us

Breaking

Sunday, September 30, 2018

புலிகளின் மக்கள் பலம் புலிகளாலே நிருவிக்கப்படும் என்கின்றார் கந்தசாமி இன்பராசா

புலிகளின் மக்கள் பலம் புலிகளாலே நிரூபிக்கப்படும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்தார். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தற்கால அரசியல் பயணம் தொடர்பாக நடைபெற்ற பிரத்தியேக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேலும் கூறுகையில் புலிகளின் அரசியலுக்கு குறுக்கே நிற்கும் அரசியல் போலிகளுக்கு நாம் எச்சரிக்கை விடுக்கின்றோம். நாம் எமக்கே உரித்தான தனித்துவமான அரசியல் பண்புகளை வகுத்து பயணித்த ஓர் புனிதமான அமைப்பு

எமக்கு முன்னுதாரணங்களாக எந்தவொரு அரசியல் கட்சிகளையும் நாம் பார்க்கப்போவது கிடையாது. புலிகளுக்கே உரித்தான அரசியல் பண்புகளை நாம் புலிகளாகவே நின்று வென்றுகாட்டுவோம்.

எமக்கு நாமே முன்னுதாரணங்கள், எமது மக்களின் விடுதலைக்கான எமது கடந்த கால ஆயுதப்போராட்டமே எமது அடிப்படையாகும். நாம் எமது ஆயுதப் போராட்டத்தின் பலாபலன்களை நேரடியாக சந்தித்தவர்கள்.

அதன் தொடர்ச்சித் தன்மையாகவே எமது அரசியல் போராட்டங்களும் எதிர்காலத்தில் அமையும். எம்மைவிட பலமான ஒரு மக்கள் சக்தியை எந்தவொரு அரசியல் கட்சிகளாலும் ஒருபோதும் அடைந்துவிடமுடியாது.

எமது ஆயுதப் போராட்டத்தின் அரசியல் சக்தியை பயன்படுத்தியே தற்கால பிழைப்புவாத அரசியல்கள் யாவும் நடந்தேறிவருகின்றது. எமது மக்களின் உண்மையான வலிகளை உணர்ந்திராதவர்களே எமது மக்களின் அரசியல் தலைவர்களாக இன்று வீற்றிருக்கிறார்.

வலிகளை உணர்ந்தவர் நாம் எப்படி இந்த கொடுமையான அரசியல் சூழல்களை அனுமதிக்க முடியும்? எமது போராளிகளை அரசியலில் களமிறங்கவிடாது தடுத்துவரும் சக்திகளே எமது போராளிகளின் கடந்தகால தியாகங்களை பயன்படுத்தி சுகபோகமாக தாம் வாழ்ந்துவருகிறார்கள்.

இந்த அவலமான நிலை விரைவில் எம்மால் முடிவிற்கு கொண்டுவரப்படும் அதற்காக நாம் எம்மோடு இணைந்து பயணிக்கவிரும்பும் எமது போராளிகளை தேடித்தேடி எம்மோடு ஒருங்கிணைத்துவருகின்றோம். அதன் வெளிப்பாடுகளை விரைவில் எமது மக்கள் தாம் நிறைவாக கண்டடைவார்கள்.

எமக்காக அதாவது புலிகளுக்காக நீலிக்கண்ணீர் வடித்துவரும் தற்கால தமிழ் அரசியல்வாதிகளிடம் நாம் பொதுவாக ஒன்றை உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம். அது என்னவெனில் நீங்கள் எமது தார்மீக அரசியலுக்கு குறுக்கே நிற்காதீர்கள் உங்களின் வாக்குகளை நிரப்புவதற்காக நாம் ஆயுதம் ஏந்தி போராடவில்லை. 

எமக்கான தனித்துவமான அரசியல் பலத்திற்கு இடையூறாக யார் நின்றாலும் அவர்களை மிகவும் கடுமையாக நாம் எதிர்ப்போம் என்பதை இங்கே ஓர் முன்னெச்சரிக்கைக்காக கூறிவைக்க விரும்புகின்றோம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment