மட்டக்களப்பு மாவட்டம், கல்குடாத் தொகுதி வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள ஜூம்ஆப் பள்ளிவாயல் வீதியிலுள்ள வியாபார நிலையத்தினை உடைக்கும் போது இடிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்த நிலையில், இன்று (28) வெள்ளிக்கிழமை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை-ஓட்டமாவடி காபட் வீதி அமைக்கும் பணியில் வீதியினை அகற்றுவதற்கு அருகிலிருந்த பலரது சொத்துக்கள் சேதமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அரைவாசிப்பகுதி உடைக்கப்பட்டு காணப்பட்ட வியாபார நிலையத்தை முழுவதுமாக உடைக்கும் நடவடிக்கை இடம்பெற்றது.
குறித்த வியாபார நிலையத்தை முழுவதுமாக உடைக்கும் நடவடிக்கையில் கூலித்தொழிலாளியான எம்.எஸ்.எம்.ஹனிபா (வயது 55) என்பவர் ஈடுபட்டு வந்த வேளையில், கடை இடிந்து விழுந்ததில் காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
காயமடைந்தவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment