கிழக்கு மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படவுள்ள விசேட திட்டங்களை துரிதப்படுத்தவுள்ளதுடன் சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கும்புறுமூலை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட கண்ணியமாக வலுவூட்டல் மற்றும் நிலைபேறான அபிவிருத்திகான “எம்.ஜே.எப்" நிலையத்தினை பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க சனிக்கிழமை (01.09.2018) மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்ததன் பின்னர் உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பாக அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. திருகோணமலை மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக சிங்கப்பூர் நிறுவனமொன்றினால் திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயத்தினை வலுப்படுத்துவதற்கான திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளோம். அதே போன்று சுற்றுலாத்துறையையும் அவிருத்தி செய்யவுள்ளோம்.
கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து மட்டக்களப்பிற்கு வருவது பாரிய பிரச்சினையாக உள்ளது. இதனைக்கருத்திற்கொண்டு மத்தள விமான நிலையத்தின் புனரமைப்புப்பணிகள் இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்பட்டதும் அங்கிருந்து கிழக்கு மாகாணத்திற்கு உல்லாசப்பயணிகள் வருவதற்கு இரண்டு அல்லது இரண்டரை மணித்தியாலங்களே செலவாகும். அதற்கு ஏதுவாக மட்டக்களப்பு விமான நிலையத்தை சிவில் விமான நிலையமாக புனரமைத்துள்ளோம்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு, திருகோணமலை, சிகிரியா மற்றும் பலாலிக்கும் உள்ளுர் விமான சேவை நடத்துவது தொடர்பாக இரண்டு உள்ளுர் சிவில் விமான நிறுவனங்களுடன் கலந்துரையாடியுள்ளோம். இந்த திட்டங்கள் ஊடாக கிழக்கு மாகாணத்தில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கின்றோம். அதேபோன்று தகவல் தொழில் நுட்பத்துறையும் மேம்படுத்தப்படும்.
மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை போன்ற பகுதிகளில் அதிக இளைஞர் யுவதிகள் படித்துவிட்டு தொழில் வாய்பின்றி உள்ளனர். இவ் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதே சுற்றுலாத்துறை மேம்பாட்டின் நோக்காகும்.
ஒதுக்கப்பட்ட தனிநபர் மற்றும் சமூகங்களை கௌரவமான முறையில் வலுவூட்டுவதன் ஊடாக அறிவு ஆற்றல் விருத்தி, பராமரிப்பு மற்றும் மானிட சேவை ஊடாக கிழக்கிற்கான மாற்றம் ஒன்றினைத் தோற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்டு குறித்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுடன் இதற்கு 600 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக நிலையத்தின் அமைப்பாளரான மெரில் ஜே.பொர்னாண்டோ தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின், வாழைச்சேனை, கிரான், வாகரை, ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலகப் பிரிவிகளிலுள்ள மாற்றுத்திறனாளிகள் பயிற்சிகளுக்காக இங்கு இணைத்து கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் எம்.ஜே.எப் அறக்கட்டளை நிலையத்தின் அமைப்பாளரும் டில்மா தேயிலை நிறுவனத்தின் ஸ்தாபகருமான மெரில் ஜே.பெர்னாண்டோ, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி சோபா ஜெயரன்ஜித் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மாற்றுத்திறனாளி சிறுவர்களதும் கிரான் நடன கல்லூரி மாணவர்களது நடனம் இடம் பெற்றதுடன் ஆதி வாசிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது.
எஸ்.எம்.எம். முர்ஷித்
No comments:
Post a Comment