நாட்டின் விவசாயத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது – மகாவலி விளையாட்டு விழாவின் நிறைவு வைபத்தில் ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Monday, September 17, 2018

நாட்டின் விவசாயத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது – மகாவலி விளையாட்டு விழாவின் நிறைவு வைபத்தில் ஜனாதிபதி

நாட்டின் விவசாயத் துறையில் தற்போது தெளிவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், கடந்த கால அரசாங்கங்களினால் நிறைவேற்றப்படாதிருந்த பல செயற்பாடுகள் கடந்த மூன்று வருட காலத்தில் விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்காக தற்போதைய அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நேற்று (16) பிற்பகல் எம்பிலிட்டி மகாவலி விளையாட்டரங்கில் இடம்பெற்ற 30ஆவது மகாவலி விளையாட்டு விழாவின் நிறைவு வைபத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

பண்டைய மன்னர் காலந்தொட்டு எமது நாடு தன்னிறைவடைவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது விவசாயத்துறையே என்பதுடன், எதிர்காலத்திலும் விவசாய பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் உற்பத்தி செயற்பாட்டில் விசேட பங்களிப்பை செலுத்திவரும் மகாவலி விவசாய மக்களை பலப்படுத்துவதற்காக அரசாங்கம் என்ற வகையில் வழங்கக்கூடிய சகல ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி , இன்று பல்வேறு துறைகளினூடாக நாட்டின் எதிர்கால பயணத்திற்கு மகாவலியினால் பெற்றுக்கொடுக்கப்படும் பங்களிப்பு பாராட்டுக்குரியதாகும் என்று தெரிவித்துள்ளார்.
மகாவலி வலய விவசாயக் குடும்பங்களின் பிள்ளைகளது விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்தி சர்வதேசம் வரை கொண்டு செல்லும் நோக்கில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் மகாவலி விளையாட்டு விழா 30ஆவது முறையாகவும் இவ்வருடம் எம்பிலிபிட்டி மகாவலி விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

“தன்னிறைவுமிக்க யுகம் – மகாவலி இளம் சமுதாயத்திற்கு உயரிய மதிப்பு” என்ற தொனிப்பொருளின் கீழ் நேற்று ஆரம்பமான விளையாட்டு விழாவில், 10 மகாவலி வலயங்களையும் சேர்ந்த சுமார் 3,000 விளையாட்டு வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டதுடன், தேசிய மட்டத்தில் இடம்பெறும் 42 போட்டி நிகழ்வுகள் இதில் இடம்பெற்றன.

நேற்றைய தினம் இடம்பெற்ற நிறைவு வைபவத்தில் திறமைகளை வெளிக்காட்டிய வீர, வீராங்கனைகள் சிறந்த மகாவலி வலயம் உள்ளிட்ட வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது.

இவ் ஆண்டு மகாவலி விளையாட்டு விழாவில் பங்குபற்றிய விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு பல விசேட வெகுமதிகள் வழங்கப்பட்டதுடன், முதலாம் இடத்தை பெற்ற மகாவலி வலயத்திற்கு உடற்பயிற்சி நிலையம் வழங்குதல், சிறந்த விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு மகாவலி காணியொன்றை வழங்குதல், விசேட திறமைகளை வெளிக்காட்டும் 10 வீர, வீராங்கனைகளுக்கு விளையாட்டு பயிற்சிக்கான புலமை பரிசில்கள், தேர்ந்தெடுக்கப்படும் 20 விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு தொழில்சார் கற்கைநெறிகள், சிறந்த விளையாட்டு வீர, வீராங்கனையை உருவாக்கிய பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
ஆசிய கிண்ணத்தை வெற்றியீட்டிய இலங்கை மகளிர் வலைப்பந்தாட்ட அணியினர் இந்த நிறைவு விழாவில் பங்குபற்றியதுடன், அவர்களுக்கு மகாவலி அதிகார சபையினால் வழங்கப்பட்ட விசேட நினைவுப் பரிசையும் டயலொக் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட நினைவுப் பரிசையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

அத்துடன் எதிர்வரும் 03 வருட காலத்திற்கு அவ்வீராங்கனைகளின் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு தேவையான அனுசரணையை வழங்க அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைவாக டயலொக் நிறுவனம் முன்வந்துள்ளதாக இதன்போது பிரகடனம் செய்யப்பட்டது.

அமைச்சர்களான மஹிந்த அமரவீர, தலதா அதுகோரள, இராஜாங்க அமைச்சர் வீரகுமார திசாநாயக்க, மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க, மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் சரத் சந்திரசிறி விதான ஆகியோர் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment