சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட கரையோர தூய்மைப்படுத்தல் தின தேசிய வைபவம் நேற்று (16) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் காலி தடல்ல கடற்கரையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவிற்கமைய பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய கரையோர தூய்மைப்படுத்தல் மற்றும் கடல்சார் வளங்களின் பாதுகாப்பு வாரமும் இதனோடு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையிலான கரையோரப் பாதுகாப்பு வாரத்தில் கடற்கரைகள் மற்றும் கடல்சார் சூழலை தூய்மைப்படுத்தும் சுமார் 100 செயற்திட்டங்கள் நாட்டை சூழவுள்ள 14 கரையோர மாவட்டங்களில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சகல கரையோர மாவட்டங்களிலும் அமைச்சுக்கள், திணைக்களங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள், மாவட்ட செயலகங்கள், முப்படையினர், பொலிஸார், சிவில் அமைப்புக்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோரின் பங்குபற்றலில் இந்த செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
சமுத்திரங்கள் மாசடைதல் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படும் மற்றும் மாசடைதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் நாடுகளிடையே இலங்கையும் இணைந்து கொண்டுள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் அதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், 2017ஆம் ஆண்டில் இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் தூய்மையான கடற்பரப்பு செயற்திட்டத்துடன் இணைந்துகொண்டது.
2018ஆம் ஆண்டில் பொதுநலவாய நாடுகளிடையே கண்டல் தாவரங்களை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் முதன்மையான நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
அதற்கமைய உலகளாவிய ரீதியில் கண்டல் தாவர பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக கண்டறியவும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்குமான குழு இலங்கையின் தலைமையில் பெயரிடப்படவுள்ளது.
2015ஆம் ஆண்டின் பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் செயற்படுத்தப்படும் கண்டல் தாவரங்களை பாதுகாக்கும் செயற்திட்டங்கள் வெற்றிகரமான செயற்திட்டங்களாக உலகின் கவனத்தை பெற்றுக்கொண்டதன் பெறுபேறாகவே கண்டல் தாவர பாதுகாப்பு தொடர்பில் உலகளாவிய ரீதியில் உயர்ந்த முன்னேற்றத்தை பெற்றுக்கொண்ட நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
அத்துடன் 2017ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கரையோர தூய்மைப்படுத்தல் செயற்திட்டங்களின் முன்னேற்றங்களுக்கமைய உலகளாவிய நாடுகளிடையே இலங்கை 16ஆவது இடத்தை பெற்றுள்ளது.
தூய்மையான கரையோரங்களை உருவாக்கும் நோக்குடன் கடல்சார் சூழல் பாதுகாப்பு திணைக்களமும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து புதிதாக நடைமுறைப்படுத்தும் திட்டமான கரையோர பாதுகாப்பாளர்களை நியமித்தல், அதிநவீன வசதிகளைக் கொண்ட ஆய்வுகூடத்துடன் கூடிய கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தென் மாகாண அலுவலக தொகுதியை திறந்து வைத்தல் மற்றும் நவீன மயப்படுத்தப்பட்ட தடல்ல கடற்கரையை மக்களிடம் கையளித்தல் போன்ற நடவடிக்கைகளும் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டன.
அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இராஜாங்க அமைச்சர் பியசேன கமகே, சுற்றாடல் பிரதியமைச்சர் அஜித் மான்னப்பெரும, தென் மாகண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டிஆரச்சி, மாகாண அமைச்சர் யூ.டீ.ஆரியதிலக, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற ரியல் அட்மிரல் ரோஹண பெரேரா, பொது முகாமையாளர் கலாநிதி டர்னி பிரதீப் குமார உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment