மட்டக்களப்பு, வாழைச்சேனை தேசிய கடதாசி தொழிற்சாலையை உடனடியாக ஆரம்பித்து தொழில் வாய்ப்பினை வழங்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான செயலணியில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பாக இன்று (03) ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “குறித்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்மொழிவு அறிக்கையினை ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தேன்.
அதில் முக்கியமாக வாழைச்சேனை தேசிய கடதாசி தொழிற்சாலையை நான் உள்ளடக்கியுள்ளதை ஜனாதிபதி சபையில் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டுவதுடன் இதன் அவசியத் தன்மை தொடர்பாகவும தெளிவாக ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டினேன்.
இங்கு ஆயுட்கால உத்தரவாதத்துடன் இரு பொயிலர் இயந்திரங்கள் உள்ளன. அவை திருத்தப்பட்டு கோவை மட்டை உற்பத்தி செய்யக் கூடிய நிலையில் உள்ளன. அத்துடன் இங்கு முதலிட முதலீட்டார்களைப் பெற்றுத்தர என்னால் முடியும் என்று தெரிவித்தேன்.
இக்கடதாசி ஆலையை ஆரம்பிப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியும் என்றும் தெளிவாக எடுத்துக்கூறினேன்.
இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி செயலணி குழுச் செயலாளர், கைத்தொழில் அமைச்சின் செயலாளர், முதலீட்டு சபையின் பணிப்பாளர் போன்றோருடன் நேரடியாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் மலசலகூடம் 5000, மானிய அடிப்படையில் வீடுகள் 40000, கிணறு 2000, விவசாய கிணறுகள் 1000, யுத்த வலய வீடுகள் புனரமைப்பு 1500, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுயதொழில் வாய்ப்பு போன்ற திட்டங்களையும் ஜனாதிபதியிடம் சமர்பித்துள்ளேன்” என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment