பொதுச் சொத்துக்களுக்கோ அல்லது பொது மக்களுக்கோ இடையூறுகள் ஏற்படும் விதத்தில் போராட்டங்கள் நடத்தப்படுமானால் அதற்கு எதிராக பொலிஸ் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
பொது நிர்வாக முகாமைத்துவ அமைச்சில் நேற்று (04) நடைபெற்ற அவசர ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசியலமைப்பின் பிரகாரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளவாறு போராட்டங்கள் நடத்துவதற்கும் அமைதியான ஊர்வலம் நடத்துவதற்கும் பொலிஸ் எந்த விதத்திலும் தடுப்பதுமில்லை, கட்டுப்படுத்துவதுமில்லை என்பதை இலங்கை பொலிஸ் திணைக்களம் என்ற விதத்தில் தெரிவிக்கின்றோம்.
சுதந்திரத்தை மேலும் உறுதிப்படுத்தும் விதத்தில் இன்று நாம் எதிர்பார்ப்பது எமது அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படி அமைதியான பேராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவுள்ளோம்.
எனினும் அமைதியான ஊர்வலம் இல்லாது மற்றவர்களின் உரிமைகளை பறிக்கும் விதத்தில் அல்லது வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டாலோ சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தாலோ குறிப்பாக அம்பியுலன்ஸ் வண்டிகளின் போக்குவரத்துக்கு இடையூறு, பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினாலோ எமக்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டிய நிலை ஏற்படும்.
அதேபோல ஒலி பெருக்கிகளை பயன்படுத்தி ஊர்வலம் அல்லது பேரணி நடத்துவதானால் பொலிஸ் சட்டத்தின் படி அதற்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தவறாது எடுக்கப்படும். இதற்காக உரிய நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு அமைதியான முறையில் போராட்ட பேரணி நடத்தப்பட்டால் அதற்காக பொலிஸ் உச்ச ஒத்துழைப்பை வழங்கும்.
விசேடமாக இன்று போராட்டம் நடத்துவதற்காக வரும் குழுக்களை தடுப்பதற்கு எந்தவிதத்திலும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனினும் விஷேட பாதுகாப்பு வழங்கப்படவேண்டிய இடங்களுக்கு ஏதேனும் சேதங்கள் ஏற்படும் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. சில பத்திரிகைகள் இது தொடர்பாக செய்திகளை வெளியிட்டிருந்தன.
குறிப்பாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூடும் பாராளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பாகவும் இந்த பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. எனவே இவற்றை தடுப்பதற்காக சில பொலிஸ் நிலையங்கள் நீதிமன்றத்திடம் விசேட இடங்கள் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியிருந்தன.
நீதிமன்றம் குற்றவியல் வழக்கு சட்டத்தின் பிரகாரம் அதிகாரத்தை பிரயோகிக்குமாறு தெரிவித்திருந்தது. விசேடமாக ஏதாவது ஒரு நபர் சட்டவிரோதமாக செயற்படுவாரானால் வீதியில் மற்றுமொரு நபருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பாராயிருந்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது.
அதேபோன்று வீதிகள் சட்டத்தின் கீழும் குற்றவியல் வழக்கு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க முடியும். அதேபோல பொலிஸ் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க முடியும். விசேடமாக பொலிஸார் இந்த நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்க்கின்றது. இன்று புதன்கிழமை சகல பாடசாலைகளும் இயங்குகின்றன.
அதேபோல அரச ஊழியர்கள் ,தனியார் உழியர்கள் கொழும்புக்கு வருவோரும் போவோரும் உள்ளனர். அவர்களுக்கு ஏதாவது இடையூறு ஏற்படுமானால் அவர்களின் போக்குவரத்து பாதிக்கப்படுமானால் பொலிஸார் என்ற வகையில் நாம் தலையிடவேண்டியிருக்கும்.
அதைத் தவிர எந்த விதத்திலும் இந்த கூட்டங்களுக்கோ போராட்டங்களுக்கோ இடையூறுகள் ஏற்படுத்தப்போவதில்லை. அதற்கு நூறு வீதம் பொலிஸ் திணைக்களம் கௌரவமளிக்கின்றது.
இன்றைய தினம் பாதுகாப்பு கடமைகளுக்காக எத்தனை பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி கேட்டபோது,பொதுவாக கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கடமைகயிலுள்ள பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள்.
அதேபோன்று கொழும்பு நகரிலும் வழமைப்போன்று கடமையில் இருப்பவர்கள் ஈடுபடுத்தப்படுவதுடன் போக்குவரத்து பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்துவார்கள். குறிப்பாக இன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் அரசாங்கத்தினால் நடத்தப்படும் மாநாடுகள் நடைபெறவுள்ளன.
பாராளுமன்ற பகுதியிலும் நகரிலுள்ள பிரபல ஹோட்டல்களிலும் மாநாட்டு மண்டபங்களிலும் இம் மாநாடுகள் நடைபெறுகின்றன. இதனால் அந்தந்த வீதிகளில் இடையூறுகள் இல்லாமல் இருப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை விசேட பொலிஸ் குழுக்கள் எடுக்கவுள்ளன.
முப்படைகளின் உதவி பெறப்படுமா? எனகேட்டபோது அதற்கான தேவை ஏற்படாது என பதிலளித்தார்.
போராட்டத்திற்கு வருபவர்கள் சில நாட்கள் தங்கி இருப்பது தொடர்பான எவ்வகையான தீர்மானங்களை எடுத்திருக்கிறீர்கள் எனக் கேட்டபோது,
ஒரு நாள் அல்ல பத்து நாட்கள் தங்கியிருந்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அப்பாவி மாணவர்களுக்கோ அன்றாடம் தமது தொழிலுக்காக வருபவர்களுக்கோ இடையூறு ஏற்படுத்தக்கூடாது.
விசேட பாதுகாப்பு படை ஈடுபடுத்தப்படுமா? என கேள்வி கேட்டபோது,
எவ்வகையிலேனும் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக்கூடிய சம்பவம் நடைபெற்றால் விசேட பாதுகாப்பு படை ஈடுபடுத்த எண்ணியுள்ளோம். அத்துடன் ஜனாதிபதி மாளிகைக்கு விசேட பாதுகாப்பு பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
தினகரன்
No comments:
Post a Comment