மண் அபகரிப்புக்கு எதிராக செயற்படுவது போன்று காட்டிக் கொண்டு மண் அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொடுப்பவர்களையும், மண் அனுமதிப் பத்திரங்களைப் பெறுவதற்கு கையூட்டுகளைப் பெறுபவர்களையும் நாங்கள் அறிந்து கொண்டிருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் மண் அபகரிப்புகள் தொடர்பில் இன்று (28) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது மாவட்டத்தில் மண் அபகரிப்பு அதிகரித்த வகையில் இடம்பெறுகின்றது. மண்வளம் என்பது மிகவும் முக்கியமான விடயம். இதனை அபரித்துச் சென்று சட்டவிரோதமாக விற்பனை செய்கின்ற மண் மாபியாக்கள் பலர் இருப்பதாக அறிகின்றோம்.
காட்டின் மத்தியில் யாருக்கும் தெரியாமல் மண் அகழும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகப் புதிய வழிப்பாதைகள் அமைக்கப்பட்டும் இருக்கின்றன. மக்களின் பாவனைக்காகப் புதிய பாதைகள் அமைக்கப்படுவது ஏற்றுக் கொள்ள முடியும் ஆனால் மண் கடத்தலுக்காக இவைகள் அமைக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இவ்வாறான செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு மண் அபகரிப்புச் செய்பவர்கள் தங்கள் செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ளவேண்டும்.
இந்த மாவட்டத்தில் இருப்பவர்களுக்கே இந்த மண்ணைக் குறைந்த விலையில் பெறமுடியாதுள்ள நிலையில் இந்த மண் வெளி மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. யாராக இருந்தாலும் இவ்வாறான மண் அபகரிப்பினை எதிர்ப்பதற்கு பூரண உதவிகளைச் செய்ய வேண்டும்.
மண் அபகரிப்புக்கு எதிராக செயற்படுவது போன்று காட்டிக் கொண்டு மண் அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொடுப்பவர்களையும், மண் அனுமதிப் பத்திரங்களைப் பெறுவதற்கு கையூட்டுகளைப் பெறுபவர்களையும் நாங்கள் அறிந்து கொண்டிருக்கின்றோம். அவர்கள் மீதும் மிக விரைவில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
இந்த விடயத்தில் ஊடகங்கள் நடுநிலையாகச் செயற்பட்டு வெளிப்படைத்தன்மையாக மண் அபகரிப்புச் செய்கின்றவர்களை வெளிப்படுத்த வேண்டுமே தவிர மண் அபகரிப்புகளை மேற்கொள்பவர்களை மூடிமறைக்கின்ற ஒரு கலாசாரத்தினை உருவாக்கக் கூடாது. அவ்வாறு செய்வார்களாயின் அது அவர்கள் இருக்கும் துறைகளுக்கும் களங்கம் என்பதே நிதர்சனம் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment