தனது இனத்தின் விடுதலைக்காக ஆயுதவழியிலும், சாத்வீக வழியில் போராடி தனது உயிரை மாய்த்துக் கொண்ட திலீபனின் தியாக வரலாறு உலகில் ஈழத்தமிழருக்கு மாத்திரமே உரித்தானது.
மகாத்மா காந்தியின் தியாகத்தை விட மகா உன்னதமான தியாகம் உலக வரலாற்றில் நீர்கூட அருந்தாமல் தன்னையே ஆகுதியாக்கிய ஒரு சரித்திர நாயகன் தியாகி திலீபன் மட்டுமே என கூறினார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன்.
தியாகி திலீபனின் 31,வது ஆண்டு வணக்க நிகழ்வு கோயில் போரதீவு பொதுவிளையாட்டு மைதானத்தில் போரதீவுபற்று இலங்கை தமிழரசு கட்சி தலைவர் இளையதம்பி கந்தசாமி தலைமையில் கரும்புலி வாமனின் தாயார் கந்தசாமி யோகம்மா பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமான வணக்க நிகழ்வில் மேலும் உரையாற்றிய பா.அரியநேத்திரன்.
1963ல் யாழ்ப்பாணம் ஊரெழு கிராமத்தில் பிறந்த இராசையா பார்த்தீபன் என்ற இளைஞன் 1983ல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து திலீபன் என்ற பெயருடன் இனவிடுதலைப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்தி போராடினான். அவன் விடுதலைப் புலிகளின் உறுப்பினராக வரும்பொழுது உயர்தர விஞ்ஞான வகுப்பில் கல்வி கற்று மருத்துவபீட மாணவனாக தெரிவானபோதும் மருத்துவபீடத்தை விடவும் தமிழின விடுதலையையே மேலானது என்ற உள்ளார்ந்த உணர்வுடன் தலைவர் பிரபாகரனின் கட்டளையை செயல்வடிவம் கொடுத்து செயலாற்றினான்.
இலங்கை இராணுவத்துடன் போரிட்டு பல வெற்றிச்சமர்களில் களம் கண்ட திலீபன் அவர்கள் விழுப்புண்களையும் சந்தித்தான். கரந்தடி தாக்குதல் காலப்பகுதியில் பல்வேறுபட்ட தாக்குதல்களை வெற்றிகரமாக நிறைவேற்றிய திலீபன் அவர்களை தலைவர் பிரபாகரனால் அரசியல் துறைசெயல்பாடுகளுக்கும் நியமித்திருந்தார்.
இவ்வாறான காலப்பகுதியில்தான் கடந்த 1987 யூலை மாதம் 29,ம் திகதி இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 13,வது அரசியல் யாப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையும் இலங்கையில் ஏனைய மாகாண சபை முறையும் நடைமுறைக்கு வருகிறது ஆனால் இந்த மாகாண சபை முறை வடக்கு கிழக்கு மக்களுக்கு போதிய அதிகாரங்கள் இல்லை என்பதால் தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழர் விடுதலை கூட்டணியும் முற்றாக மாகாண சபை தேர்தலை நிராகரித்தது.
இலங்கை இந்திய உடன்படிக்கையின் பிரகாரம் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வந்தது ஆனால் இந்தியப்படை வடகிழக்கு பகுதியில் நிலைகொண்டு பாரிய கொடுமைகளை செய்தது இந்த காலப்பகுதியில்தான் காந்தியம் பேசும் பாரதநாடு மகாத்மாகாந்தியின் அகிம்சையை மதிக்கும் நாடு என்ற ஒரே காரணத்தால் காந்தியின் வழியில் ஐந்து கோரிக்கைகளை தியாகிதிலீபன் முன் வைத்தான்.
ஐந்து அம்சக்கோரிக்கை
1 மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2 சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3 அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4 ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5 தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து 1987 செப்ரெம்பர் 15, ம் திகதி நல்லூர் கந்தன் ஆலய வளாகத்தில் நீர்கூட அருந்தாமல் 12 நாட்கள் பட்டினி தவம் இருந்து தன்னுயிரை எமது மண்ணில் ஈகம் செய்தான் தியாகி திலீபன்.
மகாத்மாகாந்தியுடன் பலர் தியாகி திலீபனை ஒப்பிட்டு பேசுகிறார்கள். நான் தியாகி திலீபனை மகாத்மாகாந்தியுடன் ஒப்பிட மாட்டேன் மகாத்மாகாந்தி நீர் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்ததில்லை. அவர் நீர் ஆதாரம் அருந்தியே உண்ணாவிரதம் இருந்தார்.
மகாத்மாகாந்தி ஒரு சாதாரண மனிதர். ஆனால் தியாகி திலீபன் ஆயுதம் ஏந்தி போராடிய ஒரு லெப்டினன்ட் கேணல் 23 வயது இளைஞன். இவ்வாறான வயது குறைந்த ஒரு போராளி உண்ணா நோன்பு நீர்கூட அருந்தாமல் உலகத்தில் விரதம் இருந்து 12 தினங்களும் எவ்வாறு உடலை வருத்தி பசியை ஒறுத்து எம் இனம் வாழ வேண்டும் என்ற உன்னத தியாகம் செய்திருக்கிறான் என்பதை மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் இந்த தியாகம் உலகத்தில் எவருமே செய்யாத மகாதியாகம்.
போராடிச்சாவது என்பதும் தற்கொடைசெய்து சாவைத்தழுவுவதும் என்பதும் ஒருவகை உயர் தியாகம்தான். ஆனால் இவைகளையும் கடந்து தன்னை வருத்தி தினம் தினம் உருக்கி 12 நாட்கள் மனமுருகி தன்னையே அர்ப்பணிப்பது என்பது தியாகி திலீபனால் மட்டுமே நிருபித்து காட்டமுடிந்தது.
ஆனால் அந்த பாரதநாடும் காந்தியத்தின் கொள்கையை விளம்பரம் செய்து ஆதாயம் தேடும் போக்கின் முகத்திரையை தியாகி திலீபனுடைய தியாகம் கிழித்தெறிந்தது என்பதுதான் உண்மை.
இந்த கோயில் போரதீவு மண்ணில் சுமார் 250 மாவீரர்கள் எமது விடுதலைக்காக உயிர்நீத்துள்ளனர். அவர்களின் தியாகம் கலந்த மண்ணில் தியாகி திலீபனின் 31 வது ஆண்டு நினைவை இங்கு செய்வதால் இந்த மண் மீண்டும் புனிதமாகிறது.
இந்த நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றிய கரும்புலி வாமனின் தாயார் யார் என்பதை சொல்ல வேண்டும். கடந்த 1992ம் ஆண்டு நவம்பர் மாதம் மாவீர் தினத்தில் கலந்துகொள்ள மட்டக்களப்பு மாவட்ட மாவீரர் பெற்றோர்கள் கிளாலி கடலூடாக செல்லும்போது கடற்படைகளை தடுப்பதற்காக கரும்புலி தாக்குதல்கள் மேற்கொள்வது வழமை.
அன்று வாமனின் தாயாரும் தனது மகனை பார்க்க கிளாலியால் படகில் செல்லும்போது கடலில் பலத்த வெடிச்சத்தம் கேட்டது. படகில் சென்றவர்கள் எல்லாம் கடலில் புகைமண்டலமாக காட்சிதருவதை அவதானித்து அவர்களை அழைத்து சென்ற போராளிகளிடம் என்ன சத்தம் என கேட்டனர்.
அது கடலில் கரும்புலிதாக்குதல் நடக்குது பயப்படதேவையில்லை என பதில் சொல்கிறார்கள். வன்னியை சென்றடைந்ததும் அங்குள்ள பத்திரிகை குறிப்பில் கரும்புலி வாமனின் படமும் செய்தியையும் பார்த்த தாய் தமது மகன்தான் அந்த கரும்புலி என அறிந்து கவலை தோய்ந்தார்.
தனது மகனை பார்க்க சென்ற தாய் தனது மகனே கரும்புலியாய் கடலில் வெடித்த செய்திதான் கிடைத்தது தனது மகனை பார்க்கமுடியாத வேதனையுடன் வாமனின் தாய் இருந்தார்.
இப்படியான அந்த தாய்தான் இன்று பொதுச்சுடரை ஏற்றினார் அதை ஞாபகப்படுத்துவது ஏனெனில் இவ்வாறு ஒவ்வொரு மாவீர்ர்களுக்கும் பின்னால் பல உண்மைக் கதைகள் உண்டு அவர்களின் தியாகவரலாறுகள் எமது இளைய சந்ததியினர் அறியவேண்டும்.
எந்தநோக்கத்துக்காக தியாகி திலீபன் உயிர்த் தியாகம் செய்தாரோ எந்த நோக்கத்துக்காக ஐம்பதாயிரம் மாவீரர்கள் வீரச்சாவை தழுவினார்களோ அந்த நோக்கம் ஈடேறக் கூடிய விதமாக நாம் அனைவரும் செயற்பட வேண்டும் எனவும் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment