வலிகாமம் வடக்கில் 1,600 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள், இராணுவத்தால் விடுவிக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்துள்ளன. ஆனாலும், அங்கு மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்குப் போதுமான நிதியை அரசு வழங்கவில்லை. இதனால் அந்த மக்களை மீளக்குடியமர்த்த முடியாத நிலைமை உள்ளது. ஆகவே, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்துக்காக விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியும் நாடாளுமன்ற நிதிக் குழுவின் கூட்டம் யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் மேற்படி குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நேற்று (03) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலேயே மேற்படி கோரிக்கையை மக்கள் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் முன்வைத்தனர்.
இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினரும் நிதிக் குழு உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கருத்துத் தெரிவிக்கையில், “யாழ்.மாவட்டத்தில் விசேடமாக வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் மக்களின் காணிகள், இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளபோதும், அங்கு மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்குப் போதுமான நிதியை அரசு வழங்கவில்லை. வலிகாமம் வடக்கில் 1600 குடும்பங்களுக்குச் சொந்தமான 823 ஏக்கர் நிலம் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலத்தில் மீள்குடியேறவுள்ள மக்களுக்காக 164 கோடி ரூபா நிதி தேவை எனக் கணிப்பீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அரசு வெறும் 70 கோடி ரூபா நிதியையே வழங்கியுள்ளது. இதற்கு முன்னரும் அரசு 22 கோடி ரூபா நிதியை இன்னும் விடுவிக்கவில்லை. எனவே, மீள்குடியேற்றத் தேவைகளுக்காக 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்பதை நாடாளுமன்ற நிதிக் குழு பரிந்துரை செய்ய வேண்டும்” – என்றார்.
நிதிக்குழுவின் தலைவர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. கூறுகையில், “நல்லிணக்க அமைச்சின் கீழ் ஒரு தொகை நிதி உள்ளது. ஆனாலும், அது நல்லிணக்க அமைச்சு என்பதால் அந்த நிதியை மீள்குடியேற்றத்துக்கு மட்டும் பயன்படுத்தவேண்டிய கட்டாயம் இல்லை. அதனால் பல்வேறு தேவைகளுக்காக அந்த நிதி பயன்படுத்தப்படுகின்றது. எனவே, அதனை மீள்குடியேற்றத்துக்கும் பயன்படுத்தவேண்டும் என நிதிக்குழு பரிந்துரை செய்யும்” – என்றார்.
No comments:
Post a Comment