பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் ஊடாக ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடு கேட்டு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கொழும்பு மாவட்ட நீமன்றில் வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.
பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியாலங்கார மற்றும் அதன் நிலையப் பொறுப்பதிகாரியடம் 05 கோடி ரூபா நட்ட ஈடு கேட்டு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தனது மனு மூலம் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியிருப்பதாவது, விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் கெரம் போர்ட் கொள்வனவு செய்த போது 39 மில்லியன் ரூபா நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முறைப்பாடு செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
அந்த விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 16ம் திகதி தன்னை விளக்கமறியலில் வைப்பதற்காக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதாக கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் முன்வைக்க முடியாது என்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள போதிலும் அந்த சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
இதனால் தனது அரசியல் வாழ்கைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் பிரதிவாதிகளான பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியாலங்கார மற்றும் அதன் நிலையப் பொறுப்பதிகாரியடம் 05 கோடி ரூபா நட்ட ஈடு பெற்றுத் தருமாறும் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment