குழி வெட்டி குளிர்காயும் நகர்வுகள் வாழ்க்கைப்பயணத்தில் பலர் எதேர்ச்சையாக சந்திக்கிறார்கள். நீங்காத வட்டுக்களாய் அவர்கள் நிறையவே எமக்காக பண்ணிவிட்டு செஞ்சோற்றுக்கடனில் நிறையவே எமது பெயரை பதித்துவிட்டு அரவிடாமலே திரும்பி விடுகின்றனர். சிறியதாக இருந்தாலும் விலைமதிக்க முடியா உதவிகளை பொதுநலன் சார்ந்தோ அல்லது தனி நலம் சார்ந்தோ எமக்காக பண்ணிவிட்டு சொல்லாமலே மெளனித்து விடுகின்றனர்.
காரணங்கள் ஆயிரம் தேடியும் விடைகாணா வினாக்களாகவே அவர்களது பிரிவுகள். எவ்வித எதிர்பார்ப்புமின்றி அடுத்தவர்களுக்காக உழைக்கும் வெகுசிலர் புரியாத புதிர்கள். இன்னும் சிலர் அவர்களது சுய தேவைகளுக்காக எம்மை அணுகுவதும் பின்னர் தெரியாதவர்களாகவே நடந்துகொள்வதும் இயல்பான விடயம்.
இதற்கும் அப்பால் ஒருவரின் வளர்ச்சியில் தடைபோட நினைக்கும் அரசியல் பின்புலம் சார்ந்தவர்களும், வெட்டிவேலையாய் நேரத்தை போக்க ஒளிந்து விளையாட நினைப்பவர்களும் அடுத்தவருக்கு குழிவெட்டுகிறோம் என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாமல் நடந்து கொள்வது பெரும் பாதிப்புக்களை சமூக ஆர்வலர்கள் மீதும் ஏற்படுத்தி விடுகின்றது.
போட்டோ எடிட்டிங் செய்து அல்லது வீடியோ கிராபிக் மூலம் அடுத்தவரை வெட்டி வீழ்த்த புனைவுகளை மேற்கொள்வதும் அதனை சமூக வலைத்தளங்களில் உலக அதிசய செய்திகளில் ஒன்றாக எமது இளைய தலைமுறை போஸ்மோட்டம் செய்து கீறிக்கிழித்து நேரத்தை பால்படுத்திடுவதும் சமூக்கத்தில் இருந்து நல்ல சிந்தனை உடையவர்களை தூரமாக்க நினைப்பதும் கவலையளிக்கின்றது.
இஸ்லாமிய இயக்க பின்னணி கொண்ட சிலரும் இத்தகைய விடயங்களை தெரிந்தோ தெரியாமலோ பரப்புரை செய்து வெகுசன ஊடக கொள்கை ஆட்ச்சேர்ப்புக்களில் ஈடுபடுவதும் அவதானிக்க தக்க அம்சமாகும்.
இதற்கப்பால் விழிப்படைந்து செயற்படும் சில தூரநோக்குடையவர்கள் எச்சரிக்கை மனநிலையில் செயற்பட்டபோதும் கள்ளன் பிடிக்கச்சென்று கள்ளனாக சித்தரிக்கப்படும் சம்பவங்களும் நடந்தே வருகின்றன.
அண்மையில் ஒரு சமூக ஆர்வல நண்பரின் ஆதங்கம் அதிர்ச்சி அடையச்செய்தது. குறித்த நபரின் வளர்ச்சியில் காழ்ப்புணர்வுகொண்டு அவர்மீது சேறு பூசும் நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த நண்பரின் கையடக்க தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி "நீங்கள் சுகமா". புதிய இலக்கம் என்பதால் "நீங்கள் யாரென்று தெரியவில்லையே" என பதிலுக்கு இவரும் அனுப்பி இருக்கின்றார். அதன் பிற்பாடு குறித்த இலக்கத்தில் இருந்து ஒரு அழைப்பு " நீங்கள் யார்? நீங்கள் எனது தொலைபேசிக்கு பலதடவை அழைப்பு எடுத்துள்ளீர்கள்" என பெண்குரல்.
யாரோ உறவினர் தன்னுடன் பகடி பண்ணுகின்றார் என இவர் நினைத்து விட்டு விட்டார். பின்னர் மீண்டும் அதே அழைப்பு அதே வார்த்தைகள். எரிச்சலடைந்தவர் பொலிசில் குறித்த அழைப்பு குறித்து வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார்.
பின்னர் பொலிஸாரால் குறித்த இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி எச்சரிக்கை விடுக்கப்பட்டு அத்தொலைபேசி தொல்லை இல்லாமல் சென்றிருந்தது. இது நடந்து சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் வேறு ஒரு இலக்கத்தில் இருந்து தெளிவில்லாத குறுந்தகவல், தொலைபேசி அழைப்பு என தொல்லைகள்.
எனது நண்பர் தனது தொலைபேசி மூலம் குறித்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டு யார் என தெரிந்துகொள்ள முயற்சிகள் செய்தபோதெல்லாம் சிறுவர்கள் போன்று, பெண்கள் போன்று சிலநேரம் மெளனமாக பேசி துண்டித்து விடப்பட்டுள்ளது. இவாறு பல இலக்கங்களில் இருந்து இத்தகைய தொல்லை வர விழிப்படைந்த இவர் தனது நண்பர்கள் பலரின் மூலம் அந்த இலக்கங்களுக்கு தொடர்புகொள்ள முயன்றும் எவ்வித பதிலும் மறுபுறத்தில் கிடைக்கவில்லை.
எனவே அவர் சந்தேகம் கொண்டவராக நண்பர்களின் அறிவுறுத்தலுக்கமைய மறுமுனை நபருடன் நன்கு தெரிந்தவர்போல் பேசி உண்மையை கறக்க முனைந்துள்ளார். இவ்வாறான அழைப்பு இவருக்கு சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக மாதம் ஒருமுறை அல்லது இருமுறை நண்பரின் தொலைபேசிக்கு வந்து தொல்லை படுத்தி இருக்கின்றது.
இது இவ்வாறு இருக்க குறித்த இலக்கத்தின் சொந்தக்காரரின் கணவர் அழைப்புக்கள் குறித்து ஒரு நோட்டம் விட்டவர் நண்பரின் தொலைபேசி இலக்கத்தை அடையாளம் காண பலமுறை முயற்சி செய்துள்ளார்.
இறுதியாக நண்பரின் இலக்கம் அடையாளம் காணப்பட்டு நண்பரிடம் தொலைபேசியில் சர்ச்சையில் ஈடுபட்டிருக்கின்றார். நண்பருக்கோ ஆத்திரம் தாங்க முடியவில்லை. தன்னை நேரடியாக சந்தித்து பேசும்படி கோரியும் அவர் நேரடியாக வந்து சந்திக்க வில்லை.
நண்பர் விட்டதாக இல்லை குறித்த நபரின் மனைவியின் குடும்பத்துடன் தொடர்புகொண்டு விடயங்களை பேசி இருக்கின்றார். அதற்கு அவர்கள் மனைவியோடு கணவர் சந்தேகம் கொள்வதாகவும் இவ்வாறு தவறுதலாக ஏதும் அழைப்புக்கள் தனது மனைவியின் கைப்பேசியில் இருந்து சென்றிருந்தால் அதனை உடனே துருவித்துருவி ஆராயும் பழக்கமுடையவர் எனவும் இன்னும் பல விடயங்களை முன்வைத்து இப்பிரச்சினையை பெரிது படுத்த வேண்டாம் என குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் நண்பருக்கோ அந்த பதிலில் திருப்தி ஏற்படவில்லை. ஏன் தனக்கு நண்பரின் மனைவியின் இலக்கத்தில் இருந்து அழைப்பு வரவேண்டும். தெரிந்தவர்கள் போல் தன்னைப்பற்றி தகவல் அறிந்து பேச வேண்டும், பல இலக்கங்களில் இருந்து ஏன் அழைப்பு விடுக்க வேண்டும். ஏனைய இழக்ககங்களில் இருந்து பேசினால் ஏன் பதில் இல்லை. குறித்த பெண்ணின் கணவர் ஏன் நேரடியாக தன்னை சந்திக்க வரவில்லை என குழம்பிப்போய் இருந்தார்.
தனக்கெதிராக ஏதும் குழிபறிப்புக்கள் உள்ளதோ என கவலையடைந்திருப்பதுடன் சமூக சூழலில் குளிக்கப்போய் சேறுபூசிய நிலையாக அவர் காணப்படுவது ஆதங்கமாய் இருந்தது. அடுத்தவரை வீழ்த்த குழிபறிக்கும் சூழலில் இத்தகைய சூழ்ச்சிகரமான அடையாளத்திரட்டல் குறித்து நற்பு வலையமைப்பில் அவதானம் அவசியமானது.
ஜூனைட் நளீமி
ஓட்டமாவடி
No comments:
Post a Comment