புதிய மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்ததனால் பழைய சட்டம் செயலிழந்துவிட்டது. அதேநேரம் எல்லை நிர்ணயம் இறுதி செய்யப்படாததால் தேர்தல் நடாத்த முடியாமலுள்ளது என்பது நாம் அறிந்ததே.
இந்நிலையில் பழைய முறையில் தேர்தல் நடாத்த சட்டத்தில் இடமுள்ளது. எனவே பழைய முறையில் தேர்தல் நடாத்த வேண்டும். தவறின் நீதிமன்றம் செல்லப்போவதாக பொதுஜனப் பெரமுனவினர் அறிவித்துள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் சட்டவிளக்கம்
‘ஒரு புதிய சட்டம் அமுலுக்கு வரும்வரை பழைய சட்டம் செல்லுபடியாகும்’ என்று ‘சட்டவியாக்கான சட்டம் (Interpretation Ordinance) கூறுவதாகவும் எனவே பழைய முறையில் தேர்தல் நடாத்த முடியும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கூறுவதன் சட்ட நிலைப்பாடு தொடர்பாக சற்று ஆராய்வோம்.
இங்கு முன்வைக்கப்படுகின்ற வாதம் ‘புதிய சட்டம் அமுலுக்கு வராததனால் பழையதை அமுல்படுத்த தடையில்லை என்பதாகும். இங்கு ஆராயப்பட வேண்டிய பிராதன சொற்றொடர் “அமுலுக்கு வரல்” (coming into operation) என்பதாகும்.
குறித்த வியாக்கான சட்டம் (Interpretation Ordinance) சரத்து 6 (1) ஒன்றின் பிரகாரம் ஒரு எழுதப்பட்ட சட்டம் முழுமையாகவோ, பகுதியாகவோ ரத்துச் செய்யப்பட்டு அந்தச் சட்டம் புதிய சட்டத்தினால் பதிலீடு செய்யப்பட்டால் அவ்வாறு பதிலீடு செய்யப்பட்ட சட்டம் அமுலுக்கு வரும்வரை இப்புதிய சட்டத்தினால் செய்யப்பட்ட ‘ரத்து’ செயற்பாட்டிற்கு வராது. அதாவது பழைய சட்டம் செயற்படும்.
இங்கு இரண்டு விடயங்கள் இருக்கின்றன. ஒன்று, ஒரு சட்டத்தைப் பாராளுமன்றம் ஆக்குதல். அடுத்தது, அச்சட்டம் செயற்பாட்டிற்கு அல்லது அமுலுக்கு வரல். அதாவது பாராளுமன்றம் ஒரு சட்டத்தை ஆக்கிவிட்டது என்பதற்காக அது அமுலுக்கு வந்துவிட்டது என்று கொள்ளமுடியாது. அமுலுக்கு வரலாம். வராமலும் இருக்கலாம். ஆனால் அமுலுக்கு வருவதென்பது விதி. அமுலுக்கு வராமலிருப்பது என்பது விதி விலக்கு.
அதாவது சிலநேரங்களில் சில சட்டங்கள் உடனடியாக அமுலுக்கு வருவதில்லை. உதாரணமாக, 1988ம் ஆண்டைய 2ம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் ஏ சட்டத்தில் “ஜனாதிபதியினால் வர்த்தமானியில் பிரசுக்கப்படும் திகதியில் இருந்து அமுலுக்கு வரும்” எனக்குறிப்பிடப்பட்டிருந்தது. மறுவார்த்தையில் கூறுவதானால் அச்சட்டத்திலேயே இது உடனடியாக அமுலுக்கு வராது என்பது குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேபோன்றுதான் முன்னாள் உள்ளூராட்சி அமைச்சர் அதாவுல்லாவின் காலப்பகுதியில் கொண்டுவரப்பட்ட 2012ம் ஆண்டைய 22ம் இலக்க தேர்தல்கள் (திருத்த) சட்டத்தில் சில சரத்துக்கள் (எல்லை நிர்ணய ஆணைக்குழு அமைத்தல் தொடர்பான) இச்சட்டம் தொடங்குகின்றபோது (commencement) அமுலுக்கு வரும் எனவும் ஏனைய சரத்துக்கள் அமைச்சரினால் வர்த்தமானியில் குறிப்பிடப்படும் திகதியில் அமுலுக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதில் இருந்து நாம் விளங்குவது, குறித்த சட்டத்தில் இது உடனடியாக அமுலுக்கு வராது என்று குறிப்பட்டாலேயொழிய பாராளுமன்றம் சட்டத்தை ஆக்கி சபாநாயகர் கையொப்பமிட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும் அது அமுலுக்கு வந்துவிடும் என்பதாகும்.
புதிய மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்த) சட்டத்தில் அது உடனடியாக அமுலுக்கு வராது என்பது தொடர்பாக எந்த வசனங்களும் இடம்பெறவில்லை. அவ்வாறாயின் அது உடனடியாக அமுலுக்கு வருவது அதேசட்டத்தினால் தடுக்கப்படவில்லை. எனவே அது அமுலுக்கு வந்துவிட்டது. அது அமுலுக்கு வந்ததனால் பழைய சட்டம் ரத்தாகிவிட்டது.
அமுலுக்கு வந்திருந்தால் ஏன் தேர்தல் நடாத்த முடியாதுள்ளது?
இந்த சட்டம் அமுலுக்கு வந்திருந்தால், செயற்பாட்டில் இருந்தால் ஏன் தேர்தல் நடாத்த முடியாமல் இருக்கின்றது? என்ற கேள்வி முன்வைக்கப்படலாம். இங்கு பாவிக்கப்பட்டிருக்கின்ற operation என்ற சொல்லுக்கு பலதரப்பட்ட அகராதிகளில் இருந்து அர்த்தங்களை எடுத்து operation என்பது செயற்படுதன்மையைக் குறிக்கின்றது. தேர்தல் நடத்த முடியாது என்பது அதன் செயற்படாத் தன்மையைக் காட்டுகின்றது. எனவே இந்த திருத்தம் செயற்படவில்லை. (not in operation) என்ற வாதம் முன்வைக்கப்படலாம்.
எல்லை நிர்ணயக் குழு அமைத்தல்
குறித்த எல்லை நிர்ணய குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும். இந்தக்குழுவை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கியது யார்? அதிகாரம் இல்லாமல் எவ்வாறு குழு நியமிக்க முடியும்? அந்த அதிகாரத்தை வழங்கியது இந்த சட்டம்தான். இந்த சட்டம் செயற்படவில்லை என்றால் எவ்வாறு அதிகாரம் வழங்கியிருக்க முடியும்? எனவே, இந்த சட்டம் செயற்பாட்டிற்கு அல்லது அமுலுக்கு வந்ததனால்தான் ஜனாதிபதிக்கு ஆணைக்குழு நியமிக்க அதிகாரம் கிடைத்தது.
எனவே, செயற்பாட்டிற்கு/ அமுலுக்கு வந்துவிட்டது. அதனால் பழைய சட்டம் செயலிழந்துவிட்டது என்பது அதற்குப் பதிலாக அமையும்.
மட்டுமல்ல, புதிய திருத்தச்சட்டத்தின் பிரிவு 3A (1) பின்வருமாறு கூறுகின்றது; “ There shall be a Delimitation Committee appointed by the President within two weeks of the commencement of this Act,......”.
அதாவது இந்தச் சட்டம் “தொடங்கியதிலிருந்து“ இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதி எல்லை நிர்ணயக்குழுவை நியமிக்கவேண்டும்......
இங்கு பாவிக்கப்பட்டிருக்கும் சொல் ‘ சட்டம் தொடங்கியதிலிருந்து - (commencement). சட்டம் தொடங்கியதிலிருந்து என்றால் என்ன செய்யத் தொடங்கியதிலிருந்து? அதற்குரிய பதில் செயற்படத் தொடங்கியதிலிருந்து என்பதாகும். எனவே சட்டம் செயற்படத் தொடங்கிவிட்டது, என்பதற்கு இது மேலதிக அத்தாட்சியாகும். சட்டம் செயற்படத் தொடங்கியதால் பழைய சட்டம் செயலிழந்து விட்டது; என்பது மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது.
இச்சட்டம் முழுமைப் படுத்தப்பட்டு விட்டதா?
இச்சட்டம் முழுமைப் படுத்தப்பட்டு விட்டதா? பாராளுமன்றில் இன்னொருதடவை வாக்கெடுப்புக்கு விடப்படவேண்டி இருக்கின்றதே? என்ற கேள்வி எழலாம்.
சபாநாயகர் கையொப்பம் வைத்தவுடன் சட்டம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது. அதன்பின் நடைபெறுபவை அந்த சட்டம் வழங்கிய அதிகாரத்தின் அடிப்படையில் இடம்பெறுகின்ற நிறைவேற்றுத் துறையின் செயற்பாடாகும். அதன் முதற்கட்டமாகத்தான் ஜனாதிபதி எல்லை நிர்ணயக்குழுவை நியமிக்கின்றார்.
எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பது சட்டவாக்க செயற்பாடல்ல. அது சட்டவாக்கத் துறையின் (பாராளுமன்றத்தின்) அங்கீகாரம் மட்டுமே. அவ்வாறு அங்கீகரித்தால் எல்லை நிர்ணயம் அந்த இடத்திலேயே பூர்த்தியாகும். இல்லையெனில் மீளாய்வுக்குழு அமைக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் மீளாய்வு அறிக்கை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுவதன் மூலம் பூர்த்தி செய்யப்படும்.
இச்சட்டம் முழுமைப்படுத்தப்படாமல் இருந்திருந்தால், பாராளுமன்றத்தில் 2/3 ஆல் நிறைவேற்றப்பட வேண்டியது சட்டவாக்கத்தின் இன்னுமொரு அங்கமாக இருந்தால் 2/3 ஆல் நிறைவேற்றத் தவறும்போது இது சட்டமாகவே முடியாது. ஆனால் 2/3 ஆல் நிறைவேற்ற முடியாவிட்டாலும் அடுத்த இரண்டு மாதங்களில் எல்லை நிர்ணய அறிக்கையைப் பூர்த்தி செய்யலாம்.
இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டியது, எஞ்சியிருப்பது சட்டவாக்க செயற்பாடல்ல. மாறாக நிறைவேற்றுத் துறையின் இன்னுமோர் அங்கமாகும். ஏற்கனவே நிறைவேற்றுத் துறை தயாரித்திருக்கின்ற அறிக்கையை சட்டவாக்கத்துறையான பாராளுமன்றம் அங்கீகரித்தால் நிறைவேற்றுத் துறையின் குறித்த செயற்பாடு நிறைவடையும், இல்லையெனில் இன்னொருபங்கு பூர்த்தி செய்ய வேண்டும். எனவே, சட்டவாக்கத்துறையின் செயற்பாடெல்லாம் சட்டவாக்க செயற்பாடல்ல.
இதேபோன்றுதான், இன்னும் சில சட்டங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு வர்த்தமானி மூலம் சில கட்டளைகளை விடுப்பதற்கு அதிகாரம் வழங்கும். சிலநேரம் அக்கட்டளைகள் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று அச்சட்டம் சொல்லும். அவ்வாறான நிலையில் அவற்றை பாராளுமன்றம் அங்கீகரித்தாலும் அவை சட்டமாவதில்லை. அவை வெறும் கட்டளைகளாகத்தான் இருக்கும்.
அடுத்தவாதம்
இன்னொரு தரப்பினர் ‘இச்சட்டம் அமுலுக்கு வந்துவிட்டது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் சட்டம் செயற்படுத்த முடியாதவிடத்து பழைய சட்டத்தின்கீழ் செயற்பட முடியும் என வாதிடுகிறார்கள். அதாவது அமுலுக்கு வருவதையும் செயற்படுத்தையும் வேறுபடுத்துகிறார்கள். முன்னைய தரப்பு அமுலுக்கு வந்தது தொடர்பாக கேள்வியெழுப்பி Interpretation Ordinance இன் அடிப்படையில் வாதாட பின்னைய தரப்பினர் அமுலுக்கு வந்துவிட்டது; ஆனாலும் செயற்பட முடியாதபோது பழைய சட்டத்தைப் பாவிக்கலாம்; என வாதிடுகிறார்கள். Rule of Interpretation அடிப்படையில் இந்த வாதம் முன்வைக்கப்படுகிறது.
இதற்கு பின்வரும் உதாரணத்தைக் காட்டுகிறார்கள். அதாவது 1996ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒரு சட்டம் (High Court of Provinces (sp) Act) உரிய அமைச்சருக்கு மாகாணமட்டத்தில் மேல் நீதி மன்றங்களை உருவாக்குகின்ற அதிகாரத்தை வழங்கியது.
இச்சட்டத்தின் பிரகாரம் 3m ரூபாய்க்கு மேற்பட்ட commercial transaction சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு இந்த மாகாண மேல் நீதிமன்றத்திற்கே செல்லவேண்டும். ஆனால் அமைச்சரினால் மேல் மாகாணத்திற்கு மட்டுமே இந்நீதிமன்றம் அமைக்கப்பட்டது. எனவே, ஏனைய மாகாணத்தில் உள்ளவர்கள் எந்த நீதிமன்றத்தை நாடுவது என்ற கேள்வி எழுந்தபோது குறித்த மேல் நீதிமன்றம் அமைக்கப்படாத நிலையில் மாவட்ட நீதிமன்றத்திற்கு செல்லமுடியுமென தீர்மானிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் எல்லைநிர்ணயப் பிரச்சினை காரணமாக புதியமுறையில் தேர்தல் நடாத்த முடியாமல் இருப்பதால் பழைய முறையில் நடாத்தலாம் என்கின்றனர்.
இங்கு முதலாவது கவனிக்க வேண்டியது இங்கு எழுந்த பிரச்சினை தற்போதைய நிலையில் இந்த அதிகாரத்தை எந்த நீதிமன்றம் செயற்படுத்துவது? என்பதாகும். (Jurisdictional issue). அடிப்படைச் சட்டத்தோடு தொடர்புபட்டதல்ல.
சட்டத்தை இருவகையாக பிரிக்கலாம். 1) substantive law, 2) procedural law. இரண்டாவது வகை பாராளுமன்றத்தாலும் நீதித்துறையாலும் உருவாக்கப்படலாம். நீதித்துறை உருவாக்கும்போது அவை rules என அழைக்கப்படும். முதலாவது வகை பாராளுமன்றத்தால் மாத்திரமே ஆக்கப்படலாம். மேற்கூறிய விடயம் இந்த இரண்டாவது வகையுடன் சம்பந்தப்பட்டது. ஆனால் தேர்தல் சட்டம் என்பது முதலாவது வகையுடன் சம்பந்தப்பட்டது.
புதிய தேர்தல் சட்டம் அமுலுக்கு வந்தகணமே பழைய சட்டம் இறந்துவிட்டது. அது சட்டப்புத்தகத்திலேயே இல்லை. எனவே, அதற்கு மீண்டும் உயிர் கொடுக்க பாராளுமன்றத்திற்கே முடியும். அதற்கு மீண்டும் எவ்வாறு உயிர்கொடுப்பது என்று Interpretation Ordinance s 6(2) கூறுகின்றது.
அதாவது, ஏற்கனவே உள்ள ஒரு சட்டம் புதிய ஒரு சட்டத்தினால் ரத்துச்செய்யப்பட்டால் அதனை அவ்வாறு ரத்துச் செய்யப்பாவிக்கப்பட்ட சட்டம் ரத்துச்செய்யப்படும்போது ஏற்கனவே ரத்துச் செய்யப்பட்ட பழைய சட்டம் சுயமாக மீண்டும் செயற்பாட்டிற்கு வராது. புதிய சட்டத்தை ரத்துச் செய்யும் சட்டத்தில் பழைய சட்டம் அமுலுக்கு வரும் என்று கூறப்படவேண்டும்.
அதாவது இரண்டு விடயம் நடந்தால்தான் பழையமுறையில் தேர்தல் நடத்தலாம். ஒன்று, புதிய சட்டத்தை ரத்துச் செய்தல். இரண்டு, பழைய சட்டம் நடைமுறைக்கு வரும்; அந்த ரத்துச் செய்யும் சட்டத்தில் குறிப்பிடல்.
இந்த புதிய சட்டத்தை ரத்துச்செய்ய 2/3 தேவையா?
புதிய சட்டம் 2/3 பெரும்பான்மையினால் நிறைவேற்றப்பட்டதை நாம் அறிவோம். இதனை ரத்துச் செய்வதற்கும் 2/3 பெரும்பான்மை தேவையா? பதில் : தேவையில்லை. அறுதிப்பெரும்பான்மைகூடத் தேவையில்லை. (113) சாதாரண பெரும்பான்மை போதும். (சமூகமளித்திருப்பவர்களில் பாதிக்குமேல்)
இதற்கான காரணம், இது 2/3 பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டாலும் இது ஒரு சாதாரண சட்டமே. பொதுவாக சாதாரண சட்டத்தை 2/3 ஆல் நிறைவேற்றுவதற்கு காரணம் அது அரசியலமைப்புச் சட்டத்தில் கணிசமான தாக்கத்தைச் செலுத்துவதனாலாகும். அதற்காக அது அரசியலமைப்புச் சட்டமாக மாறுவதில்லை. அதை ரத்துச்செய்யும்போது அது அரசியலமைப்புச் சட்டத்தின்மீது செலுத்திய தாக்கம் நீங்குகின்றதேதவிர புதிய தாக்கம் ஏதும் ஏற்படுவதில்லை. எனவே, 2/3 தேவையில்லை.
No comments:
Post a Comment