முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டைப் பகிஸ்கரிக்கும் முடிவில் மாற்றமில்லை-முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 4, 2018

முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டைப் பகிஸ்கரிக்கும் முடிவில் மாற்றமில்லை-முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர்கள்

நாளை 05.08.2018ம் திகதி கண்டியில் இடம்பெறவுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 28வது பேராளர் மாநாட்டை பகிஸ்கரிக்கும் முடிவில் மாற்றமில்லை என கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைகளின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் செய்து வரும் அதே தவறுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதையும் இதுவரை எமது பிரதேச அபிவிருத்தி தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்களை அழைத்து ஆலோசனைகளையோ வெற்றி பெற்றமைக்காக பாராட்டுக்களையோ தோல்வியடைந்தமைக்காக அனுதாபங்களையோ கட்சியோ கட்சியின் முக்கியஸ்தர்களோ செய்யவில்லை.

கல்குடாவில் கடந்த காலத்தை விட கட்சி வளர்ச்சி அதிகரித்துள்ள நிலையில், இதனைக் கட்டிக்காக்க சரியான தலைமையின் அவசியம் உணரப்படுகின்றது. எமது குறைகளை எடுத்துச் சொல்வதற்கும், எமக்கு வாக்களித்த எமது மக்களின் குறைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை தலைவரூடாகப் பெற்றுக்கொள்ளவும் கல்குடாவுக்கான தலைமையின் அவசியம் இப்போது தேவைப்பாடாகவுள்ளது.

இவ்வாறன நிலையிலேயே நாளை நடைபெறவுள்ள பேராளர் மாநாட்டை பகிஸ்கரிக்க முடிவு செய்துள்ளோம். வெறுமனே எந்தவித சுய இலாபங்களுக்கோ தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தியோ வேறு கட்சிகளுக்கு தாவுவதற்காகவோ தனிப்பட்ட எவர் மீதும் கொண்ட கோபங்களுக்காகவோ இதனை நாம் மேற்கொள்ளவில்லை. எமது மக்களுக்காகவே இதனை மேற்கொள்ளவுள்ளோம்.

கல்குடா எமது பிரதேசம். இங்கே வாழ்பவர்கள் எமது மக்கள். அவர்களின் தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். ஆகவே, இவ்வாறான முன்னெடுப்புகளை நாம் முன்கொண்டு செல்ல வேண்டுமாக இருந்தால் கல்குடாவில் முழு நேர அரசியல் தலைமை அவசியம்.

இப்போராட்டம் எமது பிரச்சனைகளை தலைமைக்கு எடுத்துச் சொல்வதற்கான ஒரு சந்தர்ப்பமேயன்றி வேறில்லை. ஏற்கனவே மேற்சொன்ன விடயங்கள் தொடர்பில் தலைமையைச் சந்திப்பதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டும் அது கைகூடாமல் போனதுடன், கணக்கில் கொள்ளப்படவுமில்லை.

அத்துடன், அவரச நிலைமைகளின் போது கல்குடாவில் கட்சியின் முக்கியஸ்தர்களை கண்டு கொள்ள முடியாத நிலையும் தொடர்புகளை மேற்கொள்ள முடியாமலும் உள்ளது.

கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் ஆட்சியமைக்க முடியாமல் போனமைக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மீது மாத்திரம் பழியை போட்டு தப்பித்துக் கொள்ள முடியாது. பொறுப்பு வாய்ந்தவர்களும் பொறுப்பேற்க வேண்டும். கல்குடாவில் முழுநேர தலையொன்று இருந்து சரியான வழிகாட்டல்களை வழங்குமாக இருந்தால் கட்சியை வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச்செல்ல முடியும்.

குறிப்பிட்ட சிறு வட்டத்திற்குள் மாத்திரம் சுருங்கிக்கொண்டிருப்பதால் எதிர்காலத்தில் நாம் பாரிய சரிவை எதிர்நோக்க வேண்டி வரலாம்.

எம்முன்னே வரவுள்ள மாகாண சபைத்தேர்தலை நம் சரியான முறையில் எதிர்கொண்டு எம்மிடமுள்ள வாக்குப்பலத்தை சரியாகப் பயன்படுத்தி, அதற்காக சரியான திட்டங்களை வகுத்து எமக்கான பிரதிநிதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. காலாகாலமாக முஸ்லிம் காங்கிரஸுடாக மக்கள் பிரதிநிதி இல்லாமல் எம் சமூகத்தை, போராளிகளை வழிநாடாத்த முடியாது.

மேற்குறித்த விடயங்களில் முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைமை சரியான தீர்வொன்றை வழங்க வேண்டுமென்ற நோக்கிலேயே இப்பகிஸ்கரிப்பை கல்குடாவிலுள்ள போராளிகளுடன் இணைந்து பிரதேச சபை உறுப்பினர்களாகிய நாம் மேற்கொள்ளவுள்ளோம்.

எமது நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் தலைமையுடன் பேசுவதற்கு நாங்கள் எந்த நேரத்திலும் தயாராகவே உள்ளோம் என்ற செய்தியையும் இதனூடே பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன் எனத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment