பணவீக்கம் கடந்த வருடத்தை விட குறைந்துள்ளது. இந்த வருட இறுதிக்குள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் 4 வீதமாக உயரும் என எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.
பணவீக்கத்தை எதிர்காலத்தில் மேலும் கட்டுப்படுத்த முடியும் என்று குறிப்பிட்ட அவர், மோட்டார் வாகனம், தங்க ஆபரணம், எரிபொருள் இறக்குமதி என்பன அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மே மாதம் வரை செலவினத்தை விட ஏற்றுமதி அதிகரித்துள்ளது. வெளிநாட்டு கையிருப்பும் உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மத்திய வங்கியில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வௌியிட்ட அவர், வாகன ஏற்றுமதி வரி அதிகரிப்பு தொடர்பாகவும் தௌிவுபடுத்தினார்.
வர்த்தக பற்றாக்குறையின் சீர்குலைவை குறைப்பதற்கு தேவையானது என்பதனாலேயே 1000 சி.சி. இயந்திர வலுவுக்கு குறைவான வலுவைக் கொண்ட மோட்டார் வாகனங்களுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டது என்று மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.
வர்த்தக கணக்குகளில் அரைவாசிக்கு மேல் சீர்குலைவதற்கு வாகன இறக்குமதிகளே காரணம் என்று குறிப்பிட்ட ஆளுநர் வரி அதிகரிப்பை நியாயப்படுத்தினார்.
மேலும் குறிப்பிட்ட அவர், இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் வர்த்தக பற்றாக்குறையின் சீர்குலைவு 716 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலாகும். இந்த கணக்கில் 350 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாகன இறக்குமதியே காரணமாகும்.
ஜனவரி முதல் மே மாதம் வரையிலான மொத்த இறக்குமதியில் வாகன இறக்குமதி 6.9 சதவீதமாகும். அதேவேளை எண்ணெய் அல்லாத இறக்குமதியில் இது 8.5 சதவீதமாகும். மேற்படி இறக்குமதி வரி அதிகரிப்பு அனைவரின் மீதான அக்கறையின் பேரிலேயே எடுக்கப்பட்டது.
குறிப்பாக வறிய மற்றும் நலினமுற்றவர்கள் மீதான அக்கறை வர்த்தக பற்றாக்குறையில் ஏற்படும் சீர்குலைவு நாணய பரிமாற்ற விதத்தில் அழுத்தம் ஏற்படுத்துவதை தவிர்க்கவே அந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
எவ்வாறெனினும் இலங்கை அதன் பொதுமக்களுக்கான பயணிகள் சேவையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று கூறிய ஆளுநர் பெரு நகர திட்டத்தின் கீழ் அமையவுள்ள மென்ரயில் மற்றும் நெடுஞ்சாலை திட்டங்கள் அதற்கு உதவும் என்று அவர் கூறினார்.
1000 சி.சி.வுக்கு குறைந்த இயந்திர வலுவைக் கொண்ட வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க அரசாங்கம் ஏன் தீர்மானித்தது என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் வகையில் 2017 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாத காலத்திலும் இந்த வருடத்திலும் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் மொத்த பெறுமதி புள்ளிவிபரங்களை மத்திய வங்கி அதிகாரிகள் எடுத்துக்காட்டினர்.
அவர்கள் முன்வைத்த புள்ளிவிபரங்களின் படி 1000 சி.சி. இயந்திர வலுவுக்கு குறைந்த பெட்ரோல் கார்களின் இறக்குமதியின் மொத்த பெறுமதி 2017 ஆம் ஆண்டு முதல் ஆறு மாத காலத்தில் 26 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் அது 195 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
அதே காலப் பகுதியில் 1500 சி.சி. இயந்திர வலுவுக்கு குறைந்த பெட்ரோல் கார்களின் மொத்த இறக்குமதி பெறுமதி 20 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 73.2 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் 3000 சி.சி. இயந்திர வலுவுக்கு குறைந்த வலுவுடைய பெட்ரோல் கார்களின் இறக்குமதி அக்காலகட்டத்தில் 33.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 21.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.
No comments:
Post a Comment