இறக்குமதி செய்யப்படும் ஒரு வகை சிவப்பு நிறத்திலான தரம் குறைந்த பருப்பு சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த மாதம் சந்தைகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது, இந்த விடயம் தொடர்பில் அறியக்கிடைத்ததாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.
அநுராபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் உள்ள வர்த்தக நிலையங்களிலிருந்து இந்த பருப்புவகை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பருப்பைக் கழுவும்போது அதில் நிற மாற்றம் ஏற்படுமாயின், அது தொடர்பில் அருகிலுள பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்குமாறு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மக்களை அறிவுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவிக்கையில், தரம் குறைந்த உணவுப் பொருட்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவும் வழக்குத்தொடரவும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு அதிகாரம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட 1,576 சுற்றிவளைப்புக்களில் 4,762 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். தொடரப்பட்ட வழக்குகளின் மூலம் ஒரு கோடியே 21 இலட்சம் ரூபா அபராதம் அறவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment