நுண்கடன் நிறுவனங்கள் மூலமாக வன்னிமக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் - முன்னாள் பிரதி அமைச்சர் பிரபாகணேசன் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 30, 2018

நுண்கடன் நிறுவனங்கள் மூலமாக வன்னிமக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் - முன்னாள் பிரதி அமைச்சர் பிரபாகணேசன்

நுண்கடன் நிறுவனங்கள் எமது வன்னி மாவட்ட கிராம மக்களுக்கு கடன்களை வழங்கி அதனை வசூலிப்பதற்கு மோசமான வழிகளை பின்பற்றுவதனை அனுமதிக்க முடியாது என முன்னாள் பிரதி அமைச்சரும், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவருமான பிரபாகணேசன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட பூம்புகார் கிராமத்தின் மக்கள் நுண்கடன் வசூலிப்பாளர்களினால் ஏற்பட்ட அசௌகரியத்தை தெரிவித்ததன் நிமித்தம் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் பி.வை. பிரசாத் தலைமையிலான குழுவினரை நேரடியாக கிராமத்திற்கு அனுப்பி அவர்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு தெரிவித்த போது, அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டத்தை தொடர்ந்து அகன்று சென்றனர். 

இது தொடர்பில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபாகணேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தின் வன்னி மாவட்டத்திற்குட்ட பிரதேசங்களில் வாழ்கின்ற வறிய குடும்பங்கள் நுண்கடன் திட்டத்தின் கீழ் பல்வேறான நிதி வழங்கும் நிறுவனங்களிடமிருந்து கடனுதவித் தொகைகளை பெற்றுக் கொண்டுள்ளனர். 

தற்போது நிலவி வருகின்ற கடுமையான வறட்சியின் காரணமாக பெற்றுக் கொண்ட தமது கடன் தொகையினை செலுத்த முடியாமல் இம்மக்கள் பெரும் துன்பத்திற்கும் துயரத்திற்கும் தள்ளப்பட்டுள்ளர்.

கடன் வழங்கிய நிதி நிறுவனங்கள் பெற்றுக் கொண்ட கடன்களை வட்டியுடன் மீள் செலுத்துமாறு இவர்களுக்கு பல்வேறான நெருக்கடிகளையும், கஷ்டங்களையும் கொடுத்து வருவதுடன், தவறான அனுகு முறை மற்றும் மரியாதை குறைவான வார்த்தைகளை பயன்படுத்திய நிலையிலும் பலாத்காரமான செயல்பாடுகள் மூலம் கட்டாயமான வழியில் எப்படியாவது கடனை மீள்செலுத்துமாறு மிகவும் கடுமையாக நடந்து கொள்கின்றனர்.

இதனால் மனரீதியாக பாதிக்கப்பட்ட இக்கிராம மக்களில் சுமார் 67க்கும் அதிகமானவர்கள் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. மூன்றுவருட வறட்சியின் காரணமாக கடன்களை திருப்பி செலத்த முடியாதவர்களுக்கு ஒரு வருடகால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என நுண்கடன் நிறுவனங்களுக்கு வலியுறுத்தியுள்ளேன். 

மீறி இவர்கள் கிராம மக்களுக்கு அச்சுறுத்தல் வழங்கினால் இவர்களை கிராம மக்கள் துரத்தியடிக்க வேண்டும். அவ்வாறு இடம்பெற முடியாத பட்சத்தில் அவர்கள் என்னிடம் நேரடியாக முறையிட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேநேரம் அதிக வட்டியுடனான தனியார் நிறுவனங்களிடம் கடன் பெறுவதை தவிர்க்குமாறு எனது வன்னிமாவட்ட மக்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment