சீனியில் யூரியா கலந்த விவகாரம் : வவுனியாவில் சதொச முகாமையாளர் மற்றும் பணியாளர் பணி நீக்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 4, 2018

சீனியில் யூரியா கலந்த விவகாரம் : வவுனியாவில் சதொச முகாமையாளர் மற்றும் பணியாளர் பணி நீக்கம்

வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் நேற்று முன்தினம் (02) விற்பனைக்கு வைக்கப்பட்ட சீனியில் யூரியா கலக்கப்பட்டுள்ள சம்பவத்தினையடுத்து சதொச தலைமை அலுவலகத்தினால் வவுனியா சதொச விற்பனை நிலையத்தின் முகாமையாளர் மற்றும் யூரியாவை நிலையத்திற்குள் எடுத்து வந்த பணியாளர் ஆகிய இருவரையும் பணி நீக்கம் செய்துள்ளதாக வவுனியா சதொச விற்பனை நிலையத் தகவல் தெரிவிக்கின்றன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த வியாழக்கிழமை வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட சீனியில் யூரியா கலந்துள்ளதாக சதொசாவில் பணியாற்றும் பணியாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டனர். 

இதையடுத்து பொலிசார் சுகாதாப் பரிசோதகர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு சென்ற சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட விசாரணைகளின் போது சதொச விற்பனை நிலையத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் தனது தேவைக்காக யூரியாவைக் கொள்வனவு செய்து வைத்திருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து பிறிதொரு பணியாளர் அதனை சீனி என நினைத்து விற்பனை செய்துள்ளதுடன், வேறு சீனியுடன் விற்பனைக்காக கலந்து வைத்துள்ளார். அன்றைய தினம் சீனியைக் கொள்வனவு செய்த நபர் ஒருவர் மாலை நேரம் கொள்வனவு செய்த சீனியை எடுத்து வந்து கொடுத்துவிட்டு சீனியில் வித்தியாசம் உள்ளதைத் தெரியப்படுத்தியுள்ளார். 

அனைத்து சீனி மூடைகளையும் பரிசோதனை மேற்கொண்ட பின்னர் சதொச நிலையத்தில் வைக்கப்பட்ட யூரியாவை தேடியபோது சம்பவம் தெரியவந்துள்ளது. இதன் பின்னர் சதொச பணியாளர்கள் பொலிஸ் நிலையத்தில் நடந்தவற்றை தெரிவித்துள்ளனர். எனினும் சம்பவ தினத்தன்று சதொச விற்பனை நிலையத்தால் 114 கிலோ கிராம் சீனி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நேற்று மாலை வரை 126 கிலோ கிராம் சீனி பொதுமக்களால் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே பெற்றுக்கொள்ளப்பட்டவற்றிற்கு அதிகமான சீனி திரும்பி வந்துள்ளது. இதையடுத்து சதொச நிலையத்திற்குச் சென்ற சுகாதாரப்பரிசோதகர்கள் யூரியா இராசாயனம் கலந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் சீனியை அங்கிருந்து அகற்றிவருகின்றனர்.

அத்துடன் இச்சம்பவம் தொடர்பில் யூரியாவை கொண்டு வந்து வைத்தவர் மற்றும் முகாமையாளர் ஆகிய இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment