அரசியல் தீர்வு விடயத்தில் ஒரு வீதமும் விட்டுக்கொடுக்க நாம் தயாரில்லை எனினும் மக்களின் பொருளாதார அபிவிருத்தியில் பங்குகொள்வோம் - News View

About Us

About Us

Breaking

Friday, August 31, 2018

அரசியல் தீர்வு விடயத்தில் ஒரு வீதமும் விட்டுக்கொடுக்க நாம் தயாரில்லை எனினும் மக்களின் பொருளாதார அபிவிருத்தியில் பங்குகொள்வோம்

அரசியல் தீர்வு விடயத்தில் ஒரு வீதம்கூட விட்டுக்கொடுக்க நாம் தயாரில்லை என்றபோதும் எமது மக்களின் பொருளாதார அபிவிருத்தியில் பங்குகொள்வோம் என த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

அரசியல் தீர்வு என்பது எங்களது கோரிக்கைகளில் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. அதேவேளை இரண்டாவதாக மக்களுக்குத் தேவையான அபிவிருத்திப் பணிகளை செய்யவேண்டியது முக்கியமாகும். என்னைப் பொறுத்தவரையில் அரசியல் தீர்வு என்பது எம் மக்களின் அரசியல் உரிமை.

அதேபோன்று தொழில்வாய்ப்பு என்பது எங்களது பொருளாதார உரிமை. எனவே அரசியல் உரிமையும் பொருளாதார உரிமையும் எமது மக்களுக்கு இப்போது அவசியமாக தேவைப்படுகின்றது.

மட்டக்களப்பிலுள்ள தமது அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (31) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு, கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியல் தீர்வு என்கின்ற விடயத்தில் கடினமான ஒரு வழிமுறையில் பேச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

அதேவேளை, அரசியல் தீர்வு கிடைத்த பின்னர்தான் நாங்கள் அபிவிருத்தியைப் பற்றி பேசவேண்டும் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கருதாகும்.

எனவே அரசியல் தீர்வு என்கின்ற விடயத்தில் பல சவால்கள் பல தடைகள், பிற்போக்குவாதக் கருத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

ஆனால் பொருளாதார அபிவிருத்தி, வேலைவாய்ப்புகள் என்கின்ற விடயத்தில் சில விடயங்களை நாம் அடைவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன. அதற்காக அரசியல் தீர்வு என்கின்ற விடயத்தில் ஒரு வீதம்கூட விட்டுக்கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை.

அண்மையில் ஜனாதிபதி செயலணியினால் நடத்தப்பட்ட கூட்டத்தில் கூட எமது தலைவர் இரா. சம்பந்தன் இந்த விடயத்தை அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டிருந்தார்.

அரசியல் தீர்வு என்பதை நாங்கள் எந்த வகையிலும் விட்டுக்கொடுக்காத அதேநிலையில் பொருளாதார அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்ற விடயங்களிலும் நாங்கள் பங்குகொள்ள வேண்டும் என்பது எமது மக்களின் கருத்தாகும்.

எனவே மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் நாங்கள் இந்த இரண்டு விடயத்தையும் அவதானமாக இருந்து ஒரு சமாந்தரமான நிலையில் கையாளவேண்டிய தேவைப்பாடிருக்கின்றது.

வெளியிலிருந்துகொண்டு கருத்துக்களை எவரும் எப்படியும் கூறலாம். ஆனால் நடைமுறையில் நாங்கள் என்ன செய்யப்போகின்றோம் என்பது முக்கியமானது. அந்த அடிப்படையில்தான் நாங்கள் ஏகபோகமாக ஒரு முடிவை எடுத்தோம், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த ஜனாதிபதி செயலணியினால் நடத்தப்படுகின்ற கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்ற முடிவை எடுத்தோம்.

அக் கூட்டத்தில் நாங்கள் மகஜர் ஒன்றையும் கையளித்தோம் அதில், அரசியல் தீர்வு முக்கியமானதாகவும் அதேபோன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு தீர்வு இருக்க வேண்டும் அத்துடன் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்ற தமிழ் இளைஞர்கள்,

அரசியல் கைதிகள் அவர்களது விடுவிப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற உறவுகளின் நிலை பற்றியும் கூட மகஜரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விடயங்கள் அனைத்தும் எமது எதிர்க்கட்சி தலைவரின் உரையிலே அங்கு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

குறுகிய நேரத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நான் மட்டுமல்ல பல உறுப்பினர்களும் தங்களுடைய ஆதங்கங்களை அதாவது இந்த நல்லாட்சியை ஏற்படுத்தியதற்குரிய காரணங்கள் அல்லது எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படவில்லை என்கின்ற கருத்தை மிகவும் ஆக்ரோசமான விதத்திலும் அதேவேளை மிகவும் அழுத்தமாகவும் கூறினார்கள் என தெரிவித்தார்.

தினகரன்

No comments:

Post a Comment