நீண்ட காலமாக அடிக்கடி மன்னார் மாவட்டத்தில் ஏற்படும் மின் துண்டிப்பினாலும் குறிப்பாக அவற்றை சரி செய்ய நீண்ட நேர இடைவெளிகள் எடுப்பதாலும் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்கள் பெரிதும் சிரமங்களையும், பரீட்சைகளில் பல பின்னடைவான முடிவுகளையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே இந்த நிலை மாற்றப்பட்டடு மின் துண்டிப்பு சீர் செய்யப்பட வேண்டும்.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் மின் தடங்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை (3) காலை மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னாரில் பேரணி இடம் பெற்றது.
குறித்த பேரணியை தொடர்ந்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் வகையில் மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலனிடம் கையளிக்கப்பட்ட மகஜரில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது எமது மன்னார் மாவட்ட மக்கள் கடந்த பல ஆண்டுகளாக பல அசௌகரியங்களை சகித்து வாழ்ந்து வருகின்றமை யாவரும் அறிந்ததே.
அனைத்து தேவைகளிலும் முதன்மையாக காணப்படுவது மின்சார சேவையாகும். இருப்பினும் மின்சார சேவையானது பல வருடங்களாக எம்மக்களுக்கு அதிருப்தியையும் ஏமாற்றத்தினையும் கொடுத்துவருவதுடன் எமது மாவட்டத்தின் வளர்ச்சியில் பல பாரிய பின்னடைவுகளுக்கு இட்டுச் செல்கிறது.
மேற்படி விடயம் தொடர்பாக பல மட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் மன்னார் பிரஜைகள் குழு மற்றும் மன்னார் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் ஒருங்கிணைந்து மன்னார் மக்கள் சார்பான நியாயமான பிரச்சினைகளை முன்னுரிமைப்படுத்தியதன் அடிப்படையில் சீரான மின்சார தேவையை முன்வைத்து அவற்றுக்கான நிரந்தர தீர்வுகளை எதிர்பார்க்கின்றோம்.
நீண்டகாலமாக அடிக்கடி ஏற்படும் மின் துண்டிப்பினாலும் குறிப்பாக அவற்றை சரி செய்ய நீண்ட நேர இடைவெளிகள் எடுப்பதாலும் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்கள் பெரிதும் சிரமங்களையும், பரீட்சைகளில் பல பின்னடைவான முடிவுகளையும் பெற்றுள்ளனர்.
மேலும் பல வருமான நடவடிக்கைகளுக்கான முதலீட்டாளர்கள் இந்த சீரற்ற மின்சார சூழ்நிலைகாரணமாக முதலீடுகள் முடக்கம் ஏற்பட்டதோடு பலருக்கான வேலைவாய்ப்புகள் தடைப்பட்டுள்ளன.
மிகவும் பெறுமதி மிக்க மின்சார பாவனைப்பொருட்கள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் மற்றும் வர்த்தக வருமான மையங்களிலும் பழுதடைந்து காணப்படுவதோடு, மாற்றீடாக புதிய உபகரணங்களை பயன்படுத்த தயங்கும் நிலை காணப்படுகிறது.
அத்துடன் மின்துண்டிப்பு ஏற்படும் இரவு வேளைகளில் பல சட்டவிரோத நடவடிக்கைகளும், சமூகச் சீர்கேடான செயல்களும் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது .
மேற்குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும்பொருட்டு அடிக்கடி ஏற்படுகின்ற மின்சாரம் தடைப்படுதல் பிரச்சினைக்கு முற்றாக நிரந்தர தீர்வுக்கான வழிமுறைகளை முன்னெடுத்து விரைவான செயற்பாட்டுக்கு அழுத்தம் கொடுக்குமாறும்.
மேலும் எமது மாவட்டத்திற்கான மின்சார சேவை நிலையத்திற்கான தரமுயர்த்தல் நடவடிக்கை, போதுமான ஊழியரிடல் மற்றும் அலுவலக கட்டடம் போன்றவற்றையும் ஏற்படுத்தி தருமாறும் தங்களை வினயமாக கேட்டுக்கொள்கின்றோம்.
மேற்குறிப்பிட்ட விடயங்களோடு மன்னார் மக்கள் பல காலமாக ஆவலோடு எதிர்பார்த்து நிற்கும் பின்வரும் கோரிக்கைகளை எவ்வித காரணமும் கொண்டு காலம் தாழ்த்தாது ஒருவருட காலத்திற்குள்ளாயினும் பூர்த்தி செய்து தருமாறு சம்மந்தப்பட்டவர்களை மிகவும் வினயமாக கேட்டுநிற்கிறோம்.
மன்னாருக்கான நிரந்தர இடை நிறுத்தம் இல்லாத மின் விநியோக இணைப்பு ஏற்படுத்துதல்.
உயிலங்குளத்தில் நிரந்தர மின்மாற்றுத் தொகுதியை அமைத்தல் மூலம் மின்தடங்கலை நிறுத்துதல்.
எமது மின்சார சபை மன்னார் அலுவலகம் தரமுயர்த்தி புதியகட்டடம் அமைத்தல்.
பகுதி வாரியான மின் இணைப்பு விநியோக பொறிமுறையை ஏற்படுத்தி இதனால் குறிப்பிட்ட பகுதி மட்டுமே திருத்தத்திற்குள்ளாகும் ஏனைய பகுதிகளுக்கு சீரான மின் விநியோகம் கிடைக்கும்படி செய்தல்
மின்சார சபை ஊழியர்களின் அதிகரிப்புக்கு நடவடிக்கை எடுத்தல்.
காற்று மின்வலு ஆலையை மிகவிரைவாக பூரணப்படுத்தல்.
மன்னார் மாவட்டத்திற்கான தனியான சேவைப்பிரிவு ஒன்றினை வவுனியா சேவைப்பிரிவிலிருந்து வேறாக்கி நிர்வகித்தல்.
இவையாவும் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு முன் செய்யப்படல் வேண்டும் என்பதை மன்னார் மக்களாகிய எமது வலுவான கோரிக்கையாகும் என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்பான பேரணி தொடர்பான செய்திக்கு
https://www.newsview.lk/2018/08/blog-post_43.html
No comments:
Post a Comment