சட்டத்துக்குப் புறம்பாக மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றம் ஆவணப்படுத்தும் பொறுப்பு விக்கியிடம் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, August 31, 2018

சட்டத்துக்குப் புறம்பாக மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றம் ஆவணப்படுத்தும் பொறுப்பு விக்கியிடம் கையளிப்பு

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சிங்கள மயமாக்கல் தொடர்பில் ஆவணப்படுத்தும் பொறுப்பு வடக்கு மாகாண காணி அமைச்சர் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் சபையில் அறிவித்தார்.

மாகாண சபையின் நேற்றைய (30) அமர்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், மாகாண சபையின் 120ஆவது அமர்வில் நிறைவேற்றப்பட்ட தனது தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பினார்.

அவரது தீர்மானத்தில், “தமிழர் நிலங்களில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இதுவரை சட்டத்துக்குப் புறம்பாக மேற்கொள்ளப்பட்ட சிங்கள மயமாக்கல் முன்னெடுப்புகளையும் தற்போது முல்லைத்தீவு உட்பட ஏனைய நான்கு மாவட்டங்களிலும் நிகழ்த்தப்படும் சிங்கள மயமாக்கல் முன்னெடுப்புக்களையும் தகுந்த வல்லுநர் குழாத்தை நிறுவி அவர்களின் ஊடாக ஆவணப்படுத்தல். 

இந்த ஆவணப்படுத்தல் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் சிங்கள மயமாக்கல் தொடர்பான வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ ஆவணமாக இருத்தல் வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் பதிலளித்த அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், “மாகாண காணி அமைச்சர் என்ற அடிப்படையில் முதலமைச்சருக்கு இந்த விடயம் பாரப்படுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

“தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் தமிழ் மக்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் இந்தக் குடியேற்றங்களை உடன் நிறுத்த வேண்டும் என்ற எமது அழுத்தமான கருத்தை அரசுக்கு உரிய வகையில் தெரியப்படுத்துதல் என்று நிறைவேற்றப்பட்ட இரண்டாவது தீர்மானத்துக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவைத் தலைவர், 

“நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப் பேச்சு நடத்தியிருந்தோம். நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றார்கள். நடவடிக்கை எடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.

மாகாணத்திற்கு வெளியே உள்ளவர்கள் மூலம் மாகாணத்துக்குள்ளே எந்தக் குடியேற்றமும் நடக்கக் கூடாது என்று தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம் என்று பதிலளித்தார்.

முல்லைத்தீவில் நடைபெறும் குடியேற்றங்களை மாகாண சபை உறுப்பினர்கள் நேரில் பார்வையிட வேண்டும் என்ற தீர்மானம் ஏற்கனவே செயலுருப் பெற்றுவிட்டது என்று அவைத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment