புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது? - பகுதி - 5 - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 1, 2018

புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது? - பகுதி - 5

அம்பாறை மாவட்டத்தில் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற கட்சி எது???

எல்லைநிர்ணய அறிக்கை 2/3 ஆல் நிறைவேற்றப்பட வேண்டும்; என்பது சாதனையா?
புதிய மாகாணசபைத் தேர்தல் சட்டத்திருத்தத்தின்படி எல்லைநிர்ணய அறிக்கை 2/3 ஆல் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு 2/3 பெரும்பான்மை இல்லாமல் தோற்கடிக்கப்பட்டால் என்ன நடக்கும்? புதிய முறையில் தேர்தல் நடாத்துவதை நிறுத்த முடியுமா? முடியாது. ஏன் முடியாது?

காரணம், அவ்வாறு தோல்வியடைந்தால் சபாநாயகர், பிரதமர் தலைமையிலான ஐவர் ஆகொண்ட மீளாய்வுக்குழுவை நியமிப்பார். அக்குழு இரு மாதத்திற்குள் தம்மீளாய்வை பூர்த்திசெய்து ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் உடனடியாக ஜனாதிபதி அதனை வர்த்தமானியில் பிரசுரிக்க வேண்டும்? அத்துடன் அனைத்தும் முடிந்துவிடும். மிகுதி தேர்தல் ஆணைக்குழுவிடம்.

இங்கு எழுகின்ற கேள்வி; இந்த 2/3 தேவை எனும் சரத்தினால் முஸ்லிம்களுக்கு ஏதும் பிரயோசனம் இருக்கின்றதா? என்பதாகும். இதன்மூலம் இந்த சட்டத்தை அமுலுக்கு கொண்டுவருவதைத் தடுக்கமுடியாது.

சரி, மீளாய்வுக்குழுவினூடாக நமக்குரிய தொகுதிகளைப் பெற்றுவிடமுடியுமா? அப்படியானால் சிதறிவாழ்கின்ற முஸ்லிம்களை ஒன்றுசேர்த்து புதிய குடியேற்றங்களைச் செய்துதான் நமக்குரிய தொகுதிகளை உருவாக்க வேண்டும். எனவே இந்த மீளாய்வுக்குழுவினால் முஸ்லிம்களுக்கு என்ன பிரயோசனம்?

வேண்டுமானால் சிறிய எல்லைப் பிரச்சினைகள், சிறிய மாற்றங்களைச் செய்யலாம். அதற்கு சாதாரணமுறையில் ஒரு மீளாய்வுக்குழுவை அமைத்திருக்கலாமே! மூன்றில் இரண்டு பெரும்பான்மையின்மையால் தோற்கடித்து ஒரு மீளாய்வுக்குழு ஏன்? எத்தனை மீளாய்வுக்குழு அமைத்து எத்தனைமுறை திருத்தினாலும் இறுதியாக அது பாராளுமன்றத்திற்கு வந்து 2/3 ஆல் நிறைவேற்றினால் மட்டுமே செல்லுபடியாகும்; என்றாவது ஒரு சரத்தைக் கொண்டுவந்திருந்தால் அதில் சற்று அர்த்தம் இருந்திருக்கும்.

எதுவித பிரயோசனமுமற்ற 2/3 பெரும்பான்மை சரத்தைக் கொண்டுவந்துவிட்டு அதற்கு ஏன் அவ்வளவு விளம்பரம். கையுயர்த்தியவர்களால் ஏன் இறுதியாக 2/3 பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட வேண்டும்; என்ற சரத்தைக் கொண்டுவர முடியவில்லை. இந்த 2/3 பங்கு தேவையென்ற சரத்து உண்மையில் அரசு தேர்தலைத் தள்ளிப்போடுவதற்கு பயன்பட்டிருக்கின்றதே தவிர முஸ்லிம்களுக்கு பிரயோசனம் எதுவுமில்லை.

இப்பொழுது மீள்நிர்ணயக்குழு அமைக்கப்பட்டால் சட்டத்தின்படி இரண்டு மாதத்தில் அந்த அறிக்கையை ஜனாதிபதிக்கு வழங்கித்தான் ஆகவேண்டும். தாமதித்தால் யாராவது நீதிமன்றம் சென்று அதனை வழங்கும்படி உத்தரவைப் பெறலாம். ஏனெனில் மீள்நிர்ணயக் குழுவின் செயற்பாடு என்பது “ நிறைவேற்றுத் துறையின் செயலாகும். சட்டவாக்க செயற்பாடு அல்ல.

அதேநேரம், எல்லைநிர்ணைய அறிக்கையை உள்ளூராட்சி அமைச்சர் சபைக்கு சமர்பிப்பதில் இருந்து ஒரு மாதகாலத்திற்குள் பாராளுமன்றம் அதனை 2/3 ஆல் அங்கீகரிக்காவிட்டால் மீளாய்வுக்குழு நியமிக்கப்பட வேண்டும்; என்று சட்டம் கூறுகின்றது. ஆனால் அமைச்சர் சமர்ப்பித்து பல மாதங்களாகிவிட்டன. ஆனாலும் இன்னும் வாக்கெடுப்பு நடைபெறவில்லை.

சட்டத்தை அமுல்படுத்த உத்தரவிடும்படி நீதிமன்றம் செல்லமுடியாது. ஏனெனில் வாக்கெடுப்பு நடத்துவதென்பது பாராளுமன்றத்தின் வேலை. இது சட்டவாக்கத்தோடு சம்பந்தப்பட்டது. நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு உத்தரவிட முடியாது.

இந்த 2/3 பங்கால் நிறைவேற்ற வேண்டும்; என்ற ஒரு சரத்து இல்லையென்றால் நீதிமன்றம் தலையிட்டு தேர்தல் தள்ளிப்போடப்படுகின்ற விடயத்தில் ஓர் தீர்வைக் காணமுடியும்.

எனவே, இந்த 2/3 பங்கு சரத்து அரசுக்குப் பயன்பட்டிருக்கின்றதே தவிர முஸ்லிம்களுக்கல்ல. பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டாலும் இரண்டு மாதங்களில் அமுலுக்கு வந்துவிடும்; என்பது இவர்களுக்குப் புரியவில்லையா? புரிந்திருந்தால் ஏன் இறுதியில் 2/3 ஆல் நிறைவேற்றப்படவேண்டும்; என்று கோரவில்லை. அல்லது இந்த 2/3 பங்கு சரத்து நாடகமே அரசு தேர்தலை தான் விரும்பும்வரை ஒத்திப்போடுவதற்கான உத்தியாகத்தான் கொண்டுவரப்பட்டதா? அதை இவர்கள் முஸ்லிம்களுக்காக செய்யப்பட்ட சாதனையாக பெருமையடித்தார்களா?

போதாக்குறைக்கு, தேர்தல் இன்னும் நடத்தமுடியாமல் இருப்பதற்கு இந்த 2/3 பங்கு சரத்துத்தான் காரணம்; என்று சில அரசியல்வாதிகள் பெருமையடிக்கின்றார்கள். இது அறியாமையா? மக்களை ஏமாற்றும் உத்தியா? என்பது தெரியவில்லை. அரசுக்கு தேர்தல் நடத்தவேண்டும்; என்றால் நாளை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடாத்தி, தோற்றால் மேலதிகமாகத் தேவை வெறும் இரண்டு மாதங்கள் மாத்திரமே. இதை சாட்டாகவைத்து அரசு தேர்தலை இழுத்தடிக்கின்றது என்பது வேறுவிடயம்.

எனவே, தவறையும் செய்துவிட்டு பெருமையும் அடிக்கவேண்டாம்.

உள்ளூராட்சி சபையைப்போன்று முதலமைச்சரை நியமிப்பதிலும் பிரச்சினை உண்டா?
இதற்கு முதலாவதாக மேயர்/ தவிசாளரை நியமிப்பதில் நாம் சந்தித்த பிரச்சினை என்ன? என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

பழைய சட்டத்தில் மேயர்/ தவிசாளரைத் தெரிவுசெய்கின்ற ஒரு விடயமே இருக்கவில்லை. எந்தக்கட்சி அதிகூடிய வாக்குகளை ஒரு சபையில் எடுக்கின்றதோ அக்கட்சியின் செயலாளர் மேயர்/ தவிசாளரை நியமிப்பார். அக்கட்சி பெற்ற வாக்கு 45% வோ, 40% வோ, 35% வோ அல்லது எத்தனை விகிதமாகவும் இருக்கலாம். ஏனைய கட்சிகளைவிட ஒரு வாக்கு அதிகமாக எடுத்திருக்க வேண்டும். அவ்வளவுதான்.

பழைய முறையிலும் புதிய முறையிலும் ஆசனம் கணிப்பிடுவது விகிதாசார முறையிலாகும். ஆனால் மேயர்/ தவிசாளர் நியமிக்கின்ற முறை வித்தியாசமானது. புதியமுறையில் “ அதிகூடிய வாக்குகள் “ என்ற ஒரு விடயமே இல்லை. அல்லது “அதிகூடிய ஆசனங்கள்” என்ற விடயமும் இல்லை. மாறாக 50% அல்லது அதற்குமேல் ஆசனங்கள் ஒரு கட்சிக்கு கிடைத்தால் அக்கட்சியின் செயலாளர் மேயர்/ தவிசாளரை நியமிப்பார். இல்லையெனில் வாக்கெடுப்பின்மூலம் தெரிவுசெய்ய வேண்டும்.

இங்கு நாங்கள் புரிந்துகொள்ள வேண்டியது பொதுவாக எந்தவொரு தேர்தலிலும் பல கட்சி போட்டியிடும்போது எந்தவொரு கட்சியும் 50% பெறுவதென்பது மிகவும் அரிதான விடயம். இலங்கையில் பாராளுமன்றத் தேர்தலில் இரண்டொரு சந்தர்ப்பத்தில்தான் 50% பெறப்பட்டிருக்கிறது. எனவே 50% வாக்குகளைப்பெறுவதும் கடினம். ஆசனம் பெறுவதும் கடினம். அதனால்தான் உள்ளூராட்சிசபைக்கு பழைய தேர்தல்முறையில் “ அதிகூடிய வாக்குகள்” என்ற பதம் பாவிக்கப்பட்டது.

கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் மு காவே வெற்றிபெற்றது
எனவே தேர்தல் கணிப்பீடு ஒரேவிதம். ஆனால் மேயர்/ தவிசாளர் தெரிவு வெவ்வேறுவிதம். கடந்த தேர்தலுக்கு முந்திய தேர்தலில் அம்பாறையில் அக்கரைப்பற்று, சம்மாந்துறை தவிர்ந்த அனைத்து முஸ்லிம் பெரும்பான்மை சபைகளையும் மு கா கைப்பற்றியது. காரணம் அவர்கள் “ அதிகூடிய வாக்குகளைப்” பெற்றிருந்தார்கள். அதனால் மு காவே அம்பாறையில் பெரும் வெற்றிபெற்ற கட்சியாக எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள்.

இம்முறை அக்கரைபற்றை மாத்திரம் தவிர்த்து முந்திய முறை இழந்த சம்மாந்துறையிலும் மு கா வே அதிகூடிய வாக்குகளைப் பெற்றது. எனவே மு கா கடந்த முறையைவிட இம்முறை இன்னும் மறுமலர்ச்சி கண்டிருப்பதாகத்தானே ஊடகங்களும் மற்றவர்களும் கூறவேண்டும். யாராக இருந்தாலும் நியாயம் நியாயமாகத்தானே இருக்கவேண்டும்.

அம்பாறையில் சிலர் மு கா வெற்றிபெற்ற இரண்டொரு சபைகளைக் கைப்பற்றினார்கள். அது எவ்வாறு? அதிகூடிய வாக்குகளைப் பெற்றதானாலா? இல்லை. மு காவை விட குறைவான வாக்கு சாதாரண நடைமுறையில் கூறுவதானால் “ தோல்வியடைந்தார்கள்”.

தாம் தோல்வியடைந்த சபைகளில் தாம் வெற்றிபெற்றதாக போகுமிடமெல்லாம் கூவுவது எப்படி? தன்மானமுள்ள, கௌரவமான அரசியல்வாதி அவ்வாறு கூறமுடியுமா?

உள்ளூராட்சி சபைத்தேர்தலில் அதிகமானசபைகளில் சாத்தியப்படாத ஒரு மேயர்/ தவிசாளர் தெரிவுமுறை அறிமுகப்படுத்தப்பட்டதனால் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது. அதுவும் சொந்தமாக கைப்பற்றியிருந்தால் பறவாயில்லை. இரவலில் பெற்ற ஆசனங்களின் துணைகொண்டு ஆட்சியைக் கைப்பற்றிவிட்டு வெற்றிபெற்ற கட்சியை ஏளனமாகப்பேசி தான் வெற்றிக்கு உரிமை கொண்டாடுவதெப்படி?

அவ்வாறு ஆட்சியைப் பிடிக்கமுடிந்த சபைகளில் தனது சார்பில் தவிசாளர்களை நியமிக்கவாவது முடிந்ததா? தனிப்பட்ட செல்வாக்குள்ளவர்களுடன் கூட்டுச்சேர்ந்து அவர்கள் தவிசாளர்களாகியபின் இவர்கள் உரிமைகோரித்திரிவதெப்படி? தன்மான உணர்வு மனிதனுக்கு இயற்கையாக அமையவேண்டும்.

தனது சொந்த மாவட்டங்களில் சில சபைகளில் இரண்டு, மூன்று ஆசனங்களைப்பெற்று அங்கு வெற்றிபெற்ற அந்நிய கட்சிகளுடன் ஆட்சியமைத்து பிரதித் தவிசாளர்களைப் பெற்றுவிட்டு அந்த சபைகளையும் தாமே கைப்பற்றியதாக உரிமைகோருபவர்கட்கு இது ஒன்றும் பெரிய விசயமில்லைதான்.

மாகாணசபையில் முதல்வர் நியமனம் 
புதிய மாகாணசபைத் தேர்தல் திருத்தத்தில் தேர்தல்முறைதான் மாற்றப்பட்டிருக்கின்றதே தவிர முதலமைச்சர் நியமன விடயத்தில் எதுவித மாற்றமும் இல்லை. இச்சட்டத்தில் முதலமைச்சர் நியமனம் தொடர்பாக எதுவித மாற்றமும் செய்யமுடியாது. ஏனெனில் அது 13வது திருத்தத்தில் உள்ள விடயம்.

இருந்தாலும் தெரிந்துகொள்வதற்காக,
அங்கு முதலமைச்சர் வாக்களிப்புமூலம் தெரிவுசெய்யப்படுவதில்லை. அந்தக்கட்சி 50% அங்கத்தவர்களைப் பெற்றிருக்க வேண்டுமென்பதுமில்லை. ஆளுனருடைய அபிப்பிராயத்தில் யாருக்கு பெரும்பான்மை இருப்பதாக கருதுகிறாரோ அவரை நியமிக்கலாம். வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரலாம். அப்பொழுது முதலமைச்சர் தன்பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்; அவ்வளவுதான்.

தொடரும்...
வை எல் எஸ் ஹமீட்

இதனுடன் தொடர்பான தொடர் கட்டுரைகளை பார்வையிட
https://www.newsview.lk/2018/07/4_29.html
https://www.newsview.lk/2018/07/3_27.html
https://www.newsview.lk/2018/07/2_16.html
https://www.newsview.lk/2018/07/1_14.html

No comments:

Post a Comment