மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய கட்டுமானப் பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழி அகழ்வில் தற்போதும் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக மனித எச்சங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து குறித்த வளாகத்தை விரிவுபடுத்தி அகழ்வு செய்யும் பணிகளும் இடம்பெற்று வருகின்றது
இவ் அகழ்வுப் பணியானது இன்று 47 ஆவது தடவையாக இடம் பெற்று வருகின்றது. இன்று வெள்ளிக்கிழமை (3) மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்டு அடையாளமிடப்பட்டிருந்த மனித எலும்புக் கூடுகள், மண்டை யோடுகளை வெளியேற்றும் நோக்குடன் அகழ்வு செய்யப்பட்டு வருகின்றது.
அத்துடன் தற்போது அகழ்வு பணியானது மையப்பகுதியை விடுத்து வளாகத்தின் நுழைவு பகுதியிலேயே அதிக கவனம் செலுத்தி தோண்டப்படுகின்றது.
அத்துடன் குறித்த இடத்திற்கு அருகாமையிலுள்ள நடை பாதையில் ஐந்து அடி ஆழத்திற்கு அகழ்வை விரிவுபடுத்திய இடத்திலேயும் அகழ்வு இடம் பெற்று வருகின்றது.
இந் நிலையில் இன்றும் சந்தேகத்திற்குரிய மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வளாகத்தில் இரு வேறு பகுதிகளில் வித்தியாசமான நிலையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுவரை குறித்த வளாகத்தில் இருந்து 66 மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன் 56 மனித எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை மீட்கப்பட்ட 56 மனித எச்சங்களும் 440 பைகளில் இலக்கங்கள் இடப்பட்டு பொதி செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தின் இவ்வாரத்தில் இரண்டு மோதிரங்கள் தடைய பொருட்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment