அரசாங்கத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கவிழ்க்கும் மாஃபியா செயற்பாட்டில் மருத்துவ சங்கங்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 31, 2018

அரசாங்கத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கவிழ்க்கும் மாஃபியா செயற்பாட்டில் மருத்துவ சங்கங்கள்

மஹிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்ஷாக்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்கான மாஃபியாவாக தொழிற்சங்கங்கள் செயற்பட்டு வருகின்றதென ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்று (31) குற்றஞ்சாட்டினார்.

இதேவேளை, தொழிற்சங்கங்கள் தமது துறைசார்ந்த கோரிக்கைகளுக்காகவன்றி முன்னாள் ஆட்சியாளர்களை மீண்டும் பதவிக்குக் கொண்டு வரும் நோக்கில் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்பட்டு வருவதாகவும் அவர் விசனம் தெரிவித்தார்.

அதிலும் குறிப்பாக டொக்டர் பாதெனியவின் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், அரசாங்கத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கவிழ்க்கும் நோக்கில் திட்டமிட்டு செய்யும் பணி பகிஷ்கரிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாதென சுட்டிக்காட்டிய முஜிபுர் ரஹ்மான் எம்.பி., 

எந்தவோர் அரசாங்கத்தினதும் பொருளாதாரக் கொள்கையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை தொழிற்சங்கத்தினருக்கு வழங்க முடியாதென்றும் கூறினார்.

சிறிகொத்தவில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.

சிங்கப்பூருடனான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓகஸ்ட் 03 ஆம் திகதி வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கப் போவதாக மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் அறிவித்தல் விடுத்துள்ளனர். இவர்கள் உண்மையில் தொழில் துறையைச் சேர்ந்தோர் அல்லர். அப்பெயரில் பொருளாதாரத்தைச் சீரழிப்பதற்காக உருவாகியிருக்கும் மாஃபியா என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூருடனான ஒப்பந்தத்தில் சிங்கப்பூர் வைத்தியர்கள் இலங்கைக்கு வந்து வேலை செய்யப்போவதாக எந்தவோர் இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும் போலிக் குற்றச்சாட்டுக்களைக் கூறிக் கொண்டு இவர்கள் வேலை நிறுத்தத்தில் குதிக்க ஆயத்தமாகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் பொருளாதாரச் செயற்பாடுகளை எதிர்த்துப் போராடும் டொக்டர் பாதெனிய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் பொது இடங்களில் கலந்து கொள்வதனை அனைவரும் காணக்கூடியதாகவுள்ளது. 

முன்னாள் ஆட்சியாளர்களை மீண்டும் பதவிக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே அவருடைய கனவாகவுள்ளது. இதனை மக்கள் எதிர்க்க வேண்டும். தொழிற்சங்கத்தினருக்கு இந்த அரசாங்கத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமையை அவர்கள் மக்களை அசெளகரியப்படுத்துவதற்காகப் பயன்படுத்த முடியாது. 

இந்நிலையைத் தொடர அனுமதித்தால், நாமல்ல, எதிர்காலத்தில் நாட்டின் ஆட்சிக்கு வரும் அனைத்து அரசாங்கங்களும் தொழிற்சங்கத்தினருக்குக் கட்டுப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவாகும். இதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

வைத்தியர்களுடைய செயற்பாட்டின் உள்நோக்கத்தை மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

திகனரன்

No comments:

Post a Comment