கலப்புத் தேர்தல் முறையினால் நாட்டில் சிறுபான்மைச் சமூகங்களும் சிறு கட்சிகளும் இல்லாதொழிக்கப்பட்டு விடும் முன்னாள் முதலமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 31, 2018

கலப்புத் தேர்தல் முறையினால் நாட்டில் சிறுபான்மைச் சமூகங்களும் சிறு கட்சிகளும் இல்லாதொழிக்கப்பட்டு விடும் முன்னாள் முதலமைச்சர்

நாட்டில் சிறு கட்சிகளையும் ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தையும் மலைநாட்டு தமிழ் இனத்தையும் இல்லாதொழிக்க வேண்டுமென்றால் கலப்புத் தேர்தல் முறையை அமுல்படுத்தினாலேயே போதும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (29) ஏறாவூருக்கு வருகை தந்த பிரதமரிடம் தனது முதன்மை வேண்டுகோளாக அவர் இதனை முன்வைத்தார்.

முன்னதாக ஏறாவூர் நகர பிரதேச செயலகக் கட்டிடத் திறப்பு விழாவிற்கும் பின்னர் பகல் போசனத்திற்குமாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் இல்லத்திற்கும் அமைச்சர் பிரதானிகளுடன் விஜயம் செய்த பிரதமரிடம் இந்த வேண்டுகோள் வலியுறுத்தப்பட்டது.

இவ்விரு நிகழ்வுகளிலும் பிரதமரிடம் தொடர்ந்து வலியுறுத்திய முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சபை உட்பட சில மாகாண சபைகள் கடந்த வருடம் செப்ரெம்பெர் 30ஆம் திகதி தமது ஆட்சிக் காலம் முடிவுற்ற நிலையில் இன்னமும் தேர்தல்கள் நடாத்தப்படாது மாகாண ஆளுநரின் நிருவாகத்தின் கீழ் நிருவகிக்கப்படுகின்றன.

இது விடயமாக கடந்த ஜனவரி 19ஆம் திகதி தங்களது அழைப்பின் பேரில் பிரதம மந்திரியின் காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது மிக விரைவாக பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்கள் இடம்பெறுமென்று தாங்கள் வாக்குறுதியளித்திருந்தீர்கள்.

தற்போது மாகாண சபைகள் அதன் ஆட்சிக் காலம் முடிவுற்ற நிலையில் 10 மாதங்களைக் கடந்து ஆளுநரின் நிருவாகத்தின் கீழ் இருந்து கொண்டிருக்கின்றன. இதுவொரு ஜனநாயக மறுப்பாகவும் நல்லாட்சியின் கொள்கை விரோதச் செயற்பாடாகவும் கருதிக் கொள்ளவும் வழியேற்பட்டுள்ளது.

கலப்புத் தேர்தல் முறையை மீண்டும் கொண்டு வருவது குறிப்பாக இலங்கையின் மூன்றாவது சிறுபான்மையினமான முஸ்லிம்களை வெகுவாகப் பாதிக்கக் கூடியதாக அமைந்திருக்கின்றது. அது குறிப்பாக நாடாளுமன்றத் தேர்லில் முஸ்லிம் சமூக பிரதிநிதித்துவத்தை மிக மோசமாகக் குறைக்கக் கூடிய சாத்தியமுள்ளது.

மேலும், கலப்புத் தேர்தல் முறையை முதன் முதலாக கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது அமுல்படுத்திப் பார்த்த அனுபவத்தின் மூலம் அது இந்த நாட்டுக்கு நடைமுறையில் பொருந்தாது என்பதைக் கண்டுள்ளது இந்த நல்லாட்சி அரசு.

கலப்புத் தேர்தல் முறையால் எந்தவொரு உள்ளுராட்சி மன்றமும் ஸ்திரமாக இல்லை என்பதைக் கண்டுணர்ந்து வருகின்றோம். அங்கு நிருவாகம் சுமுகமாக இடம்பெறவில்லை.

ஆகவே இந்த கலப்பு முறைத் தேர்தல் மாகாண சபைகளுக்கும் நாடாளுமன்றத்திற்கும் அமுல்படுத்தப்படுமாக இருந்தால் இதே மாதிரியான தொங்கு இழுபறி நிலையே நிருவாகத்தில் ஏற்படும். அதனால் மக்கள் நம்பிக்கை இழப்பார்கள்.

ஆகையினால் பழைய முறையிலேயே அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தல்களையும் பொதுத் தேர்தலையும் நடாத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன். பழைய தேர்தல் முறை மாத்திரமே முஸ்லீம் சமூகத்தையும் மற்றும் சிறு கட்சிகளின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தக் கூடியது.

இந்த முழு நாடும் நம்பிக்கையை இழப்பதற்கு முன்பதாக நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை மீண்டும் கொண்டுவரக் கூடியதாக பிரதமர் இருப்பதால் இந்த வேண்டுகோள் பிரதமரான தங்களிடம் முன்வைக்கப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment