கிழக்கில் மீண்டும் குடிசன மதிப்பீடு நடத்தப்பட வேண்டும் - கிழக்கு மாகாண முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் Dr. யூசுப் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 9, 2018

கிழக்கில் மீண்டும் குடிசன மதிப்பீடு நடத்தப்பட வேண்டும் - கிழக்கு மாகாண முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் Dr. யூசுப்

2012 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் எடுக்கப்பட்ட குடிசன மதிப்பீட்டுத் தகவல்களில் கிழக்கு மாகாணத்தின் இனப்பரம்பலை உறுதி செய்யும் வகையில் மீளவும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் மேலெழத் தொடங்கியிருக்கின்றன.

2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பில் தமிழர்கள் 40 வீதமாகவும் முஸ்லிம்கள் 35 வீதமாகவும் காட்டப்பட்டுள்ளது. ஆனாலும் இந்தத் தகவல் திரட்டப்படும் பொழுது யுத்தத்தால் மரணித்த மற்றும் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை காட்டப்படவில்லை என்ற பலமான நம்பிக்கை முஸ்லிம் சிவில் சமூகங்களுக்கு மத்தியில் தோன்றியுள்ளது. 

இந்தத் தரவுகளின்படி கிழக்கின் முதற்பெரும்பான்மை தமிழர்கள் என்ற தோற்றப்பாடு முன்வைக்கப்படுகின்றது. ஆனாலும் தேர்தல் என்று வரும் போது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களே கிழக்கில் அரசியல் பெரும்பான்மையைக் கைப்பற்றுவது அவதானிக்கப்படுகிறது.

இது ஒரு அசாதாரண நிலையைத் தோற்றுவித்திருக்கிறது எனத்தெரிவிக்கும் கிழக்கு மாகாண முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் Dr. யூசுப், வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கான முயற்சிகள் பற்றிய கதையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சூழலில், இந்த இனத்துவப் பரம்பல் பற்றிய சரியான தரவுகள் எடுக்கப்பட வேண்டும்.

அதற்கேற்ற வகையில் 2021 இல் நடக்கவிருக்கின்ற குடிசன மதிப்பீட்டுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் குடிசன மதிப்பீடொன்று நடைபெற வேண்டும் எனவும், முஸ்லிம் சிவில் அமைப்புக்களும் அரசியல் தலைமைகளும் இணைந்து இதற்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்றும் மீள்பார்வைக்குத் தெரிவித்தார்.

மீள்பார்வை செய்திகள்

No comments:

Post a Comment