ட்ரினாடில் நடைபெற்று வருகின்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின், இரண்டாம் நாள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் வலுவான ஓட்டங்களைப் பெற்றிருப்பதுடன், பந்துவீச்சிலும் சிறப்பாக செயற்பட்டிருக்கின்றது.
புதன்கிழமை (06) ஆரம்பமாகியிருந்த இந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடியிருந்த மேற்கிந்திய தீவுகள் அணி, முதல் நாள் ஆட்டத்தின் நிறைவில் இலங்கை வீரர்களின் திறமையான பந்துவீச்சினால் 84 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 246 ஓட்டங்களையே பெற்றிருந்தது. களத்தில் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான சேன் டோவ்ரிச் 46 ஓட்டங்களுடனும், தேவேந்திர பிஸூ ஓட்டமேதுமின்றியும் நின்றிருந்தனர்.
போட்டியின் (7) இரண்டாம் நாளுக்கான ஆட்டம் மழையின் காரணமாக 50 நிமிடங்கள் தாமதித்தே ஆரம்பித்திருந்தது. போட்டி தொடங்கி சிறிது நேரத்திலேயே 26 வயது நிரம்பிய சேன் டொவ்ரிச் அரைச்சதம் கடந்தார். டோவ்ரிச் பெற்ற அரைச்சதமானது இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஒருவரினால் பெறப்பட்ட முதல் அரைச்சதமாகவும் டெஸ்ட் போட்டிகளில் அவரது ஆறாவது அரைச்சதமாகவும் இருந்தது.
இதன் பின்னர் தொடர்ந்த போட்டியில் மீண்டும் மழை குறுக்கிட போட்டியின் இரண்டாம் நாளுக்கான முதல் இடைவெளியில் 9.1 ஓவர்களே வீசப்பட்டு மதிய போசண இடைவேளை எடுக்கப்பட்டிருந்தது. இந்த இடைவேளையினை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில் டோவ்ரிச் மற்றும் பின்வரிசை துடுப்பாட்ட வீரர் தேவேந்திர பிஸூ ஆகியோர் பொறுமையான முறையில் ஆடி இணைப்பாட்டம் ஒன்றினை கட்டியெழுப்பினர்.
102 ஓட்டங்கள் வரையில் நீடித்த இந்த 7 ஆம் விக்கெட்டுக்கான இணைப்பாட்டம் தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் சுரங்க லக்மால் கைப்பற்றிய விக்கெட்டினால் முடிவுக்கு வந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் 7 ஆம் விக்கெட்டாக பறிபோயிருந்த தேவேந்திர பீஸூ 5 பெளண்டரிகள் அடங்கலாக 40 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார். பின்னர், பிஸூவின் துடுப்பாட்ட ஜோடியான டோவ்ரிச் சதம் எட்ட இரண்டாம் நாள் ஆட்டத்துக்கான தேநீர் இடைவேளை எடுக்கப்பட்டிருந்தது.
தேநீர் இடைவெளியினை தொடர்ந்த ஆட்டத்தில் மற்றுமொரு பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான கேமர் ரோச் பெறுமதியான 39 ஓட்டங்களினை 5 பெளண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக பெற்றுத்தந்தார். இதேவேளை, கேமர் ரோச் 8 ஆம் விக்கெட் இணைப்பாட்டமாக டோவ்ரிச் உடன் இணைந்து 75 ஓட்டங்களினை பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களின் சிறப்பாட்டத்தினால், மேற்கிந்திய தீவுகள் அணி தமது முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களைத் தாண்டி வலுவான நிலைக்குச் சென்றிருந்தது.
லஹிரு குமார கேமர் ரோச்சினை ஓய்வறை அனுப்ப 154 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 414 ஓட்டங்களுடன் இருந்த மேற்கிந்திய தீவுகள் அணி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை நிறுத்திக் கொண்டது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தில் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தினை பூர்த்தி செய்த சேன் டோவ்ரிச் 12 பெளண்டரிகள் அடங்கலாக 125 ஓட்டங்களினை குவித்திருந்ததுடன், விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரராக இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் சதம் பெற்ற முதல் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் என்கிற பதிவினையும் நிலைநாட்டியிருந்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு குமார 95 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மால் 2 விக்கெட்டுக்களையும், ரங்கன ஹேரத் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தனர்.
இதனையடுத்து, மேற்கிந்திய தீவுகளின் சவாலான ஓட்டங்களை எட்ட தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை குசல் மெண்டிஸ், குசல் பெரேரா ஆகியோருடன் இலங்கை அணி ஆரம்பித்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் ஐந்து ஓட்டங்களையேனும் பெறாத நிலையில் தமது விக்கெட்டினைப் பறிகொடுத்து மோசமான ஆரம்பத்தினைக் காட்டியிருந்தனர். இவர்களுக்கு பின்னர் களம் நுழைந்த அஞ்சலோ மெதிவ்சும் 11 ஓட்டங்களினையே பெற்று ஆட்டமிழந்தார்.
இந்த துரிதகதியிலான விக்கெட் இழப்பினால் 2ம் நாள் ஆட்டநிறைவில் இலங்கை அணி 10 ஓவர்கள் நிறைவில் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து பின்னடைவான நிலையில் உள்ளதுடன், மேற்கிந்திய தீவுகளை விட 383 ஓட்டங்களாலும் பின்தங்கியிருக்கின்றது.
இலங்கை அணிக்கு நம்பிக்கை தரும் வீரர்களான அணித்தலைவர் தினேஷ் சந்திமால் 3 ஓட்டங்களுடனும், ரோஷேன் சில்வா ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது நிற்கின்றனர்.
மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர்களான அவ்வணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர், கேமர் ரோச் மற்றும் சன்னோன் கேப்ரியல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றி சிறப்பான ஆரம்பத்தினை தமது தரப்புக்கு தந்திருந்தனர்.


No comments:
Post a Comment