அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பிரபல பாதாள உலக குழு உறுப்பினர்கள் பலி - News View

About Us

About Us

Breaking

Saturday, June 9, 2018

அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பிரபல பாதாள உலக குழு உறுப்பினர்கள் பலி

கண்டி, மடவளை தெல்தெனிய வீதியில் இன்று (09) நண்பகல் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளார்.

திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபடும் கும்பல் ஒன்றின் உறுப்பினர்கள் சிலரே இவ்வாறு பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காயிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபடும் பாதாள உலகைச் சேர்ந்தவர்களின் நடமாட்டம் இருப்பதாக பொலிசாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, வத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்தெனிய வீதியில் மடவளை பிரதேசத்தில், உடனடியாக இடப்பட்ட வீதிச் சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையின் போது, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நண்பகல் 12.15 மணியளவில் அப்பகுதியில் பயணித்த காரை நிறுத்துவதற்கு முனைந்த வேளையில், அதில் பயணித்த இருவரால் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து, பதிலுக்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள நேர்ந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதன்போது, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரையும் கட்டுகஸ்தோட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும்போது, குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.

குறித்த இருவரும், திட்டமிட்டு குற்றங்களை புரியும் குழுவினரைச் சேர்ந்த உறுப்பினர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதில் ஒருவர், 'பைலா' என அழைக்கப்படும் ருமல்ஷ இமேஷ் மதுசங்க நவகமுவ (30) என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இவர் அங்கொட லொக்கா மற்றும் மதூஷ் என அழைக்கப்படும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இருவரினதும் பிரதான அடியாள் எனவும் அவர்கள் இருவரதும் போதைப் பொருள் வியாபாரத்தை இலங்கையிலிருந்து மேற்கொள்ளும் நபர், இவர் எனவும், ரணால, அத்துருகிரிய, ஹோமாகம ஆகிய பிரதேசங்களில் கப்பம் பெறும் நபராகவும் இவர் செயற்பட்டு வந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மேற்படி நபருக்கு எதிராக, கொலை, கொள்ளை, பலாத்காரமாக பணம் பெறுதல், ஆயுதங்களை வைத்திருந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில், பல்வேறு நீதிமன்றங்களில் 15 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதோடு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் எனவும், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மரணமடைந்த மற்றையவர், முல்லேரியா, அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான 'ஜனா' என அழைக்கப்படும் பொலவத்தகே உபாலி என, அவரது அடையாள அட்டையின் மூலம் தெரியவந்துள்ளதாகவும், அவருக்கு எதிராகவும், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுடன் தொடர்புபட்டவர் எனவும், அவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நபர் எனவும் தெரிவித்தார்.

குறித்த சம்பவத்தை அடுத்து, குறித்த நபர்கள் கொண்டு வந்த கைத்துப்பாக்கி ஒன்று, ரிவோல்வர் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில், நீதவான் விசாரணை இடம்பெறவுள்ளதோடு, வத்துகாமம் பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரைணைகளை மேற்கொண்டுள்ளனர்

No comments:

Post a Comment